Published:Updated:

`தட்டை ரொட்டி’ பீட்சா! - சில மருத்துவக் குறிப்புகள்

`தட்டை ரொட்டி’ பீட்சா! - சில மருத்துவக் குறிப்புகள்
`தட்டை ரொட்டி’ பீட்சா! - சில மருத்துவக் குறிப்புகள்

பீட்சா... ஆர்டர் செய்தால், ஒரு மணி நேரத்தில் வீடு தேடி வரும் துரித உணவு. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதற்கு ரசிகர்கள் அநேகம். இத்தாலியிலோ இது தவிர்க்கவே முடியாத ஓர் உணவு. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் சக்கைபோடு போடுகிறது இதன் வியாபாரம். `பீட்சா ஹட்’, `பீட்சா கார்னர்’... என விதவிதமான பெயர்களில், இதற்காக பிரத்யேக உணவுக் கடைகளும் இருக்கின்றன. இன்னும் இருபது வருடங்களில் கடைக்கோடி கிராமத்தில்கூட இது எளிதாகக் கிடைக்கும் உணவாக இருந்தால், ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதன் அபாரச்சுவைக்கு அந்த அளவுக்கு மனிதர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இருக்கிறது. 

ஒரு தட்டையான ரொட்டி. அதன் மேல் சீஸ், தக்காளி சாஸ் ஊற்றி, சில காய்கறிகள், கீரைகள், வாசனைக்கு சில பொருள்கள் எல்லாவற்றையும் பரப்பி மைக்ரோவேவ் அவனில் வைத்து பேக் செய்தால் பீட்சா ரெடி. காய்கறிகளுக்கு பதிலாக இறைச்சியும் சேர்க்கலாம். சைவம், அசைவம் இரண்டு வகையுமே அலாதி சுவை என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. இன்றைய இளைய தலைமுறையின் நவீன அடையாளம் என்றுகூட இதைச் சொல்லலாம். பீட்சாவின் பூர்வீகம் இத்தாலி. இத்தாலிக்குச் சென்று வந்தவர்களால் மற்ற நாடுகளுக்கும் பரவியது. இரண்டாம் உலகப் போரின்போது, இத்தாலிக்குள் நுழைந்த நேச நாட்டுப் படைவீரர்களுக்கு இதன் சுவை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதிலும் குறிப்பாக, ஐரோப்பா, அமெரிக்க வீரர்களுக்கு. அவர்கள் கையோடு இந்த அசத்தல் உணவைத் தங்கள் நாட்டுக்கு எடுத்துப்போய்விட்டார்கள். அப்படியே மெள்ள மெள்ள உலகம் முழுக்கப் பரவிவிட்டது. 

புதிய கற்காலத்திலேயே (Neolithic) பீட்சாவைப் போன்ற ஒன்று தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறார்கள் தொல்லியலாளர்கள். பண்டைய வரலாறு முழுக்கவே பிரெட்டில் பல உணவு, வாசனைப் பொருள்களைச் சேர்த்து, அதை மேலும் சுவையாக்க முடியுமா என விதவிதமான வழிகளில் ஆராய்ந்திருக்கிறார்கள். பழைய கிரேக்கர்கள் ரொட்டியில் எண்ணெய் தடவி, மூலிகைகள், சீஸ் எல்லாவற்றையும் வைத்து மூடி வைத்து ருசி பார்த்திருக்கிறார்கள். கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே இந்த ஆராய்ச்சிகளுக்கான அடித்தளம் அழுத்தமாக விழுந்திருக்கிறது. பெர்சிய அரசன் ஒன்றாம் டாரியஸ் (Darius I) படையில் இருந்த வீரர்கள், தட்டையான ரொட்டியில் சீஸையும் பேரீச்சம்பழங்களையும் வைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். இதுபோல் வரலாற்றில் பீட்சாவைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. ஆனால், இது நவீன காலத்தில் பிரபலமானது ஓர் அரசியால்தான். 

`கேல்லேட்டெ’ (Gallate) என்பது ஃப்ரெஞ்ச் சமையல் முறையில் ரொட்டியைக் குறிக்கும் ஒரு சொல். இது கொஞ்சம் தட்டையான சைஸில் இருக்கும். இத்தாலியின் தலைநகரமான நேப்பிள்ஸில், 16-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த இந்தத் தட்டை ரொட்டிதான் பீட்சாவாக மாறியது என்கிறார்கள் உணவு வரலாற்று ஆசிரியர்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இது ஏழைகளின் உணவாக இருந்திருக்கிறது. இதைத் தயாரித்து தெருவோரக் கடைகளில் விற்றிருக்கிறார்கள். 1889-ம் ஆண்டில் ஒரு நாள் இத்தாலியின் மகாராணி மார்கரிட்டா (Margherita) அந்த வழியாக வந்திருக்கிறார். ஏழைகள் மிகவும் ரசித்து, ருசித்து இந்தத் தட்டை ரொட்டியைச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறார். அவரால் ஆசையை அடக்க முடியவில்லை. அப்படி என்ன அதிசயச் சுவை இந்த ரொட்டியில்... ஒரு கை பார்க்க முடிவு செய்தார். வண்டியை நிறுத்தி, மார்கரிட்டாவும் ஒரு ரொட்டியை வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்க, அபார ருசி! அதை அப்படியே கொண்டுபோய்விட்டார். ராணிக்கு பிட்சாவின் மேல் இருந்த ஆர்வத்தைப் பார்த்த ரஃபேல் எஸ்பொசிட்டோ (Raffaele Esposito) என்கிற பேக்கரிக்கடைக்காரர், மூன்றுவிதமான பீட்சாக்களைத் தயார் செய்து ராணி மார்கரிட்டாவிடம் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அவற்றில், இத்தாலி நாட்டுக் கொடியைப் போலவே தயாரித்திருந்த ஒன்று ராணிக்கு மிகவும் பிடித்துப் போனது. ரசித்து ரசித்து சாப்பிட்டிருக்கிறார் மகாராணி. தட்டை ரொட்டியில் தக்காளி, துளசி இலை, சீஸ் இவற்றால் அலங்கரிக்கப்பட்ட அது `பீட்சா மார்க்கரிட்டா’ என்று அழைக்கப்பட்டது. அன்றில் இருந்து, இந்த தட்டை ரொட்டி மெள்ள மெள்ள உலகம் முழுக்கப் பரவி இதன் ரசிகர்களை சப்புக்கொட்டி, சுவைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 

அமெரிக்காவில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பீட்சாக்கடை என்றால், அது `லொம்பார்டி’ (Lombardi). 1905-ம் ஆண்டு, நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. நிலக்கரி, விறகு ஆகியவற்றைக்கொண்டு, அந்த நெருப்பில் பீட்சாவை பேக் செய்யும் பெரிய ரெஸ்டாரன்ட்களும் உலக அளவில் இருக்கின்றன. மற்றபடி பல இடங்களில் பிரமாண்டமான இயந்திரங்கள்தான் பீட்சாவை பேக் செய்யப் பயன்படுகின்றன. அமெரிக்காவில் சில கடைகளில் பீட்சாவுக்கான அனைத்தையும் தயாரித்து வைத்திருப்பார்கள். அதை அப்படியே வாங்கிவந்து வீட்டில் மைக்ரோவேவ் அவனில் வைத்து பேக் செய்துகொள்ளலாம். நம்ம ஊர் ரெடிமேட் இட்லி, தோசை மாவு மாதிரி. ஒவ்வோர் நாட்டிலும் ஒவ்வோர் இடத்திலும் ஒரு சுவை. ஆனால், அத்தனையும் அட்டகாசம். அதனால்தான் இன்னும் மூலைக்கு மூலை முளைத்துக்கொண்டே இருக்கின்றன பீட்சா ரெஸ்டாரன்ட்கள்.  

சரி... பீட்சா ஆரோக்கிய விஷயத்தில் எப்படி? விளக்குகிறார் டயட்டீஷியன் அனிதா பாலமுரளி... ``இன்று சிறு நகரங்களில்கூட கிடைக்கும் சர்வ சாதாரண உணவாகிவிட்டது பீட்சா. இதன் மேல் அடுக்கில் வைத்துப் பரிமாறப்படும் டாப்பிங்ஸைப் பொறுத்து இதன் ஊட்டச்சத்துகளும் கலோரிகளும் மாறுபடும். காளான், சீஸ், கீரை, சாஸேஜ், அன்னாசி... என என்னென்னவோ வைக்கப்படுகின்றன. ஒரு ஸ்லைஸ் சீஸ் பீட்சாவில் (63 கிராம்), 168 கலோரிகள், கொழுப்பு (Fat) 6.1 கிராம், கொலஸ்ட்ரால் 14 மி.கிராம், சோடியம் 340 மி.கிராம், பொட்டாசியம் 67.71 மி.கிராம், கார்போஹைட்ரேட் 20.4 கிராம், நார்ச்சத்து 1.1 கிராம், சர்க்கரை 2.5 கிராம், புரோட்டீன் 7.6 கிராம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. பீட்சாக்கள் எல்லாமே ஒரே அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது. சற்று பெரியதாகவும்கூட இருக்கலாம். ஒரு ஸ்லைஸ் 100 கிராம் இருக்கிறது என்றால், 250 கலோரிகள் அதில் இருக்கும். எனவே, பீட்சாவுக்கு ஆர்டர் செய்யும்போது `ஹால்ஃப் சீஸ்’ என்று கேட்டு வாங்கலாம். இதனால் கலோரி அளவு குறையும். 

இறைச்சிகளால் தயாரான பீட்சாவாக இருந்தால், கலோரிகளுடன் கெட்ட கொழுப்பும் அதிகமாக உடலில் சேர வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் கடைகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியையே இதற்குப் பயன்படுத்துவார்கள் என்பதால், இது நம் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. வெஜிடபுள் பீட்சாவிலும் கலோரிகள் இருக்கின்றன. இருந்தாலும், பீட்சாவைச் சாப்பிட விரும்புகிறவர்களுக்கு வெஜிடபுள்தான் நல்ல சாய்ஸ். பீட்சாவைப் பொறுத்தவரை சில நல்ல அம்சங்களும் உள்ளன. முதலாவதாக, இது வறுக்கப்படுவதில்லை. வறுத்த உணவுகளில்தான் கெட்ட கொழுப்புகள் (Saturated fat and Trans fat) அதிகமிருக்கும். அது நம் வாழ்க்கை முறைக்கு உகந்ததல்ல. சில உயர்தரமான கடைகளில் ஃப்ரெஷ்ஷாகவே சீஸ், காய்கறிகள், கீரை எல்லாம் சேர்க்கிறார்கள். இவை நமக்கு ஆரோக்கியமானவை. 

பீட்சாவுடன் சேர்க்கப்படும் தக்காளியில் லைக்கோபீன் (Lycopene) ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த லைக்கோபீன் நம் இதயம், ரத்த நாளங்கள், தோல், எலும்புகள் ஆகியவற்றுக்கு பயன்தரக்கூடியது. தக்காளி வேகவைக்கப்படும்போது, லைக்கீபீனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் இதை எளிதாக நம் உடலால் கிரகித்துக்கொள்ள முடியும். பீட்சாவின் டாப்பிங்கில் வைக்கப்படும் காய்கறிகள், ஊட்டச்சத்தைக் கூட்டி, கொழுப்பைக் குறைக்கக்கூடியவை. இதில் இருக்கும் கால்சியம் எலும்பு உறுதிக்கும், தசை, நரம்புகள் வலுப்பெறவும் உதவும். 

அதிக அளவில் இதைச் சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இது, இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இதில் உள்ள அதிக கலோரி உடல் எடையை அதிகரித்து, உடல்பருமனுக்கு வழிவகுக்கும். அதிக அளவிலான கார்போஹைட்ரேட், ரத்தத்தில் குளூகோஸின் அளவை அதிகரிக்கச் செய்யும். உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் காரணமாகிவிடும். இது நம் பாரம்பர்ய உணவு அல்ல. நம் நாட்டு தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம். எப்போதாவது, விருப்பப்பட்டால் பீட்சாவை வாங்கிச் சாப்பிடலாம். ஆனால், தொடர்ந்து சாப்பிடுவது நம் உடல்நலத்துக்கு நல்லதல்ல; ஏற்றதல்ல!’’ என்கிறார் அனிதா பாலமுரளி. 

பிறகென்னா... எப்போதாவது ஆசைப்பட்டால் பீட்சாவை வாங்கிச் சாப்பிடுவதில் தவறில்லை. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் நல்ல கடைகளில் வாங்கிச் சாப்பிடுவது சிறந்தது!