Published:Updated:

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்.. 3

சித்தமருத்துவர் கு.சிவராமன்

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்.. 3
##~##

''உன் கைவைத்தியத்தில் எனக்கும், என் ஃப்ரெண்டுக்கும் இருந்த மூக்கடைப்பு, தும்மல் காணாமப்போச்சு! உன் வைத்தியம் சூப்பர் பாட்டி.' ''ஹலோ... மாடர்ன் பேத்தி, உடனே ஐஸ்கிரீம், மில்க்ஷேக்னு கிளம்பிடாதீங்க. என்னதான் கைவைத்தியம் செய்துக்கிட்டாலும், கூடவே உணவுக் கட்டுப்பாடும் கண்டிப்பா இருக்கணும். பால், இனிப்பு, நீர்க் காய்கறி, ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக், பன்னீர் இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம்.'

''ஓகே ஓகே... ஆமா, என்ன அடுக்களைக்குள்ள சீரகம் வாசனை தூக்குது? ஏதாச்சும் வறுத்துட்டு இருக்கியா?'

''உன் அண்ணனுக்கு ஒரே கேஸ் ட்ரபிள். எப்பப் பாரு, வயிறு வீங்கின மாதிரியே இருக்குனு முனகிட்டே இருக்கான். அதுக்கு சீரகத்தண்ணீர் காய்ச்சப்போறேன்.''

''அட! டிரடிஷனல் மினரல் வாட்டரா?'

''மினரல் வாட்டர் இல்லைடி... மெடிக்கல் வாட்டர். சீரகத்தை 4 ஸ்பூன் எடுத்து, கடாயில் போட்டு, பொன்னிறமா வறுபட்டதும், 2 லிட்டர் தண்ணீரை விட்டுக் காய்ச்சணும். தண்ணீர் தங்கக் கலரா மாறி, சீரகம் மிதந்து வந்ததும் இறக்கிடணும். சாப்பிட்ட உடனே, சீரகத் தண்ணீர் கொஞ்சம் இளஞ்சூடா இருக்கும்போதே குடிக்கணும். சாப்பிட்டதும் நடக்கக்கூட முடியாம, வயிறு ரொம்பவே பருத்து திம்முனு வரும் ஆளுங்களுக்குச் சட்டுனு கேட்கும். அதோட, சாப்பிட்டு முடிக்கிறப்பவே, மோர்ல கொஞ்சம் ஒரு சிட்டிகை பெருங்காயம், சீரகத்தூள் சேர்த்துக் குடிக்கணும். மோர் நேச்சுரல் ஆன்ட்டாசிட். வயித்துப்புண்ணை ஆற்றும். பெருங்காயம் ஒரு கார்மனேட்டிவ். வாயுவை வெளியேற்றும். சீரகம், பெயருக்கேத்த மாதிரி பித்தத்தை நீக்கி அகத்தை சீர்படுத்தும். தெரியுமா?''

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்.. 3

''ஹைய்யோ... நீ டாக்டருக்கு எங்க படிச்ச பாட்டி?'

''எல்லாம் எங்க அம்மாக்கிட்டதான். அப்பல்லாம் எங்க அம்மா, மாமியார் எல்லோருமே அவங்க அம்மா, அவங்க பாட்டி மூலமா வழி வழியாத் தெரிஞ்சு வெச்சுக்கிட்டு, அவங்க பிள்ளைங்களுக்கும் பழக்கப்படுத்திடுவாங்க. அஞ்சறைப் பெட்டியே, நோய்களை விரட்டும் முதலுதவிப் பெட்டியாதான் இருந்தது. அப்படி... காலம் காலமா வந்த அறிவுதான் இது. உன்னை மாதிரி காலேஜ் படிக்கிற பொண்ணுங்கதான், இருவத்தி நாலு மணி நேரமும் செல்போன் கையுமால இருக்கீங்க...'

''ஓகே பாட்டி... இனிமே தெனமும் உங்கிட்டதான் ஹெல்த் ரெசிப்பி டியூஷன் எடுத்துக்கப்போறேன். அந்தச் சீரகத்தை, தண்ணியா மட்டுமில்லாம, வேற என்ன மாதிரியா சாப்பிடலாம்..?'

''ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் 35 கிராம் சீரகத்தைப் போட்டுக் காய்ச்சி, சீரகம் மிதந்து வர்றப்ப, இறக்கிவைச்சிடணும். வாரம் தோறும் இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்ச்சிக் குளிச்சேன்னா, மயக்கம், தலைசுற்றல்கூட போகும். நீ அழகுக்காக வளர்க்கிறியே கற்றாழைச் செடி, அந்த ஜெல்லை 150 கிராம் அளவுக்கு எடுத்துக் கழுவிக்கணும். 200 கிராம் சீரகத்தை நல்லா வறுத்துப் பொடிச்சுக்கணும். 150 கிராம் பனைவெல்லத்துல, தேவையான அளவு நீர் விட்டு, பால் சேர்த்து, பாகு மாதிரி காய்ச்சி அதுல கற்றாழைச் சாறு, சீரகத்தூள் எல்லாம் போட்டு, நீர் நல்லா வத்தினதும் லேகியமாகக் கிளறிக்கணும். தினமும் ராத்திரியில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், மலக்கட்டு போகும். ஃபிஷர் எனும் ஆசனவாய் வெடிப்பில் வர்ற எரிச்சலும் சரியாகும். உடல் சூட்டைக் குறைச்சிக் குளிர்ச்சியாக்கிடும்.

நாம சாப்பிடற எல்லா உணவுலேயும் சீரகம் கொஞ்சம் சேர்க்கலாம். அட்டகாசமான அதோட வாசத்துக்கே, பல நோய்கள் கிட்ட நெருங்காது. அதிகப் பித்தத்துல வர்ற தலைவலி, ரத்தக் கொதிப்புக்கும் இது சூப்பர் மருந்து. 2 நாள் கரும்புச் சாறு, அடுத்த 2 நாள் இஞ்சிச் சாறு அதற்கடுத்த ஐந்தாவது ஆறாவது நாள் எலுமிச்சைச் சாறுனு சீரகத்துல ஊத்தி, அதை வெயில்ல காயவைச்சு எடுத்துக்கணும். இதெல்லாமே ஃப்ரெஷ் சாறா இருக்கணும். அப்படிச் செய்த சீரகப் பாவனத்தை, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால், கொஞ்சம் கொஞ்சமா ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டுல வந்திடும்.'

''அப்டீன்னா, அப்பாவுக்கு இதைக் குடுத்திடலாமே? மருந்தே வேண்டாமே பாட்டி?''

''போடி அவசரக் குடுக்கை... உன் அப்பா, டாக்டர் சொல்லியிருக்கிற மருந்தோட இதையும் சேர்த்துச் சாப்பிட ஆரம்பிச்சா, கொஞ்சம் கொஞ்சமா நல்லா கட்டுப்பாட்டுக்கு வந்திடும். உங்க அப்பாவுக்கு ரத்தக் கொதிப்பு கட்டுப்படணும்னா மருந்து, சீரகப்பாவனம் மட்டும் பத்தாதுடி. நீ ஒழுங்காப் படிக்கணும். உங்க அண்ணன் வேலையில நல்ல பெயர் வாங்கணும். அப்பாவோட ஆபீஸ் டென்ஷன் குறையணும். உன் அப்பன் தினம் வாக்கிங் போகணும். ராத்திரியில் 6 மணி நேரமாவது தூங்கணும். இதெல்லாம் செஞ்சாத்தான்... சீரகமும் சீக்கிரம் வேலை செய்யும். கொதிப்பும் குறையும்.'

''பாட்டி... இனிமேல், உனக்கு சேலை கிடையாது. டாக்டர் கோட்தான் வாங்கித்தரப் போறேன்... சும்மா அசத்துறியே!''

- மருந்து மணக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு