Published:Updated:

டீன் ஏஜ் பருவத்தினர் அவசியம் தவிர்க்கவேண்டிய 7 உணவுகள்!

டீன் ஏஜ் பருவத்தினர் அவசியம் தவிர்க்கவேண்டிய 7 உணவுகள்!
டீன் ஏஜ் பருவத்தினர் அவசியம் தவிர்க்கவேண்டிய 7 உணவுகள்!

இன்றைய இளைய தலைமுறையினரிடம், மூன்று வேளையும் சரிவிகித உணவு சாப்பிடும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காரணம், பசிக்கிற நேரத்தில்கூட, எண்ணெயில் வறுத்த உணவு, கண்ட நேரத்தில் நொறுக்குத்தீனி... என இஷ்டத்துக்கு எதையாவது உள்ளே தள்ளுவதுதான். ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் பரவலாகிவிட்ட, இந்த நாள்களில் பதப்படுத்தப்பட்ட, பேக் செய்த உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகிறார்கள் இளைஞர்கள்... அவை அவர்கள் உடல்நலத்துக்கு என்னென்ன கோளாறுகளை அள்ளித் தரப்போகின்றன என்பதை அறியாமல்!

பொதுவாக, டீன் ஏஜ் என்னும் பருவ வயது, உடலின் வளர்ச்சிப் பருவம். இந்த வயதில், ஹார்மோன் சுரப்புகள் தொடங்கி, உடலின் அனைத்து வளர்ச்சிகளும் அதிகமாக இருக்கும். இதனால்தான் இந்தப் பருவத்தை `வளரிளம் பருவம்’ என்கிறோம்.

`இந்த வயதில், சிகரெட், மதுப்பழக்கம் போன்றவை மட்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பழக்கங்கள் அல்ல. ஆரோக்கியம் கெடுக்கும் உணவுகளைச் சாப்பிடுவதும் உடலுக்குத் தேவையான சத்துகளைக் கிடைக்காமல் செய்துவிடும். எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, செரிமானப் பிரச்னைகள், உடல்பருமன், இதய நோய்கள் என உயிருக்கே உலைவைக்கக்கூடிய நோய்கள் உண்டாகக் காரணமாகிவிடும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைய தலைமுறையினர் ஆரோக்கிய உணவு என நம்பிச் சாப்பிடும் பலவற்றில் சர்க்கரை, சோடியம், நிறைவுற்ற கொழுப்பு என்னும் சாச்சுரேட்டட் (Saturated fat) போன்றவையே அதிகம் உள்ளன. `இவற்றைச் சாப்பிடுவதால், இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன' என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, தவிர்க்கவேண்டிய ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள் எவை என்பதைப் பார்ப்போம்.

 
 

ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ்

ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவிவிடுவார்கள். அதனால், அதன் தோலில் உள்ள நார்ச்சத்துகள் நீங்கிவிடும். அதிக நேரம் எண்ணெயைக் கொதிக்கவைக்கும்போது, எண்ணெய் தன்னிடம் உள்ள நற்குணங்களை இழந்துவிடும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்போது, இதன் தீமை பலமடங்கு உயரும். மேலும், இந்த முறையில் தயாராகும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸை அதிக அளவு சாப்பிட்டால், ரத்தத்தில் கெட்ட கொரஸ்ட்ரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி, இதய நோய் பாதிப்புக்கான அபாயத்தை அதிகரிக்கும்.

வெள்ளை பிரெட்

வெள்ளை பிரெட்டில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு. அதே சமயம் இதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளது. இது, உடலுக்குத் தீங்கானது. மேலும், வெள்ளை பிரெட் மைதாவால் தயாரிக்கப்படுவதால், இதை உட்கொண்டால் செரிமான பிரச்னைகள், புற்றுநோய் ஆபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.

குளிர்பானங்கள்

இளைஞர்களுக்கு குளிர்பானங்கள் குடிப்பது ஸ்டைல், ஃபேஷன்! ஆனால், எத்தனையோ பேரின் வரவேற்பைப் பெற்றிருக்கும் குளிர்பானங்களால் துளி அளவுகூட உடலுக்கு ஆரோக்கியப் பலன் இல்லை என்பதே கசப்பான உண்மை. இதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கையான சுவையூட்டிகளும், அளவுக்கு அதிகமான சர்க்கரையும் பற்களைப் பதம் பார்ப்பதுடன், உடலின் செரிமான உறுப்புகளையும் பாதித்துவிடும்.

டின் சூப்

வீட்டில் தயாராகும் சூப் மிகவும் நல்லது. அதேநேரத்தில், டின்னில் அடைத்து விற்கப்படும் சூப்பில் அதிகளவு சோடியம் சேர்க்கப்பட்டிருக்கும். குறிப்பாக, ஒரு சிறிய கேன் சிக்கன் சூப்பில் ஒரு நாளுக்குத் தேவையான சோடியத்தைவிட அதிகளவு சோடியம் இருக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம். அதேபோல தெருவோரக் கடைகளில் விற்கப்படும் சூப்களைத் தவிர்த்துவிடுவதே நல்லது.

பரோட்டா

 பரோட்டாக்கள் பெரும்பாலும் மைதாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. கோதுமைக் கழிவுகள்தான் மைதா உற்பத்தியின் மூலப்பொருள்கள். மைதாவை வெள்ளை நிறமாக மாற்ற, அதிக அளவில் வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. குறிப்பாக, மைதாவில் இருக்கும் அல்லோக்ஸான், பென்சாயில் பெராக்ஸைடோடு இணைந்து நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இது பென்சுலின் சுரப்பைப் பாதித்து, சர்க்கரைநோய் ஏற்பட வழிவகுக்கும். மேலும், செரிமானம் உள்பட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படவும் காரணமாகிவிடும்.

நொறுக்குத்தீனிகள், பேக்கரி உணவுகள்

உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற எண்ணெயில் வறுத்த உணவுகளிலும், சீஸ் பப்ஸ் போன்ற பேக்கரி உணவுகளிலும் நம் உடல் செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்தோ, உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளோ கிடையாது. இவை கொழுப்புகள் நிறைந்தவை. இவற்றை அதிகமாகச் சாப்பிடுவதால், செரிமானப் பிரச்னைகளும் வயிற்றுக்கோளாறுகளும் உண்டாகும். இவை, பசியை மட்டுப்படுத்துவதால், சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதில் நாட்டம் குறைந்து போகும்.

அதிகக் கொழுப்பு உள்ள பால் பொருள்கள்

பால் பொருள்களில் அதிகளவு கால்சியம் உள்ளதால், இவை எலும்புகளுக்கு நல்லது என்பதை அறிவோம். அதேநேரத்தில், வெண்ணெய், கொழுப்பு நீக்கப்படாத பால், ஐஸ் க்ரீம், சீஸ் போன்றவற்றில் உள்ள அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்புகள் என்னும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் (saturated fats) இதய நோய்கள் ஏற்பட காரணமாகின்றன. இவற்றையும் தவிர்க்கலாம்.

இந்த உணவுகளை எப்படித் தவிர்ப்பது?

ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிட்டுவிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனியைத் தேடிப் போவதற்கான தேவையைக் குறைக்கும். மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

இரண்டு உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரத்தில், பழச் சாறு, இளநீர், மோர் போன்று ஏதாவது ஓர் இயற்கை பானத்தை அருந்தலாம். இந்தப் பழக்கம், நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும், குளிர்ப்பானங்கள் அருந்த வேண்டும் என்ற உணர்வைக் குறைக்க உதவும்.

நூடுல்ஸ், பாப்கார்ன், கோலா பானங்கள், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, பொரி உருண்டை, வேர்க்கடலை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை வாங்கிச் சாப்பிடலாம். பேரீச்சம்பழம், திராட்சை, வாழைப்பழம், ஃப்ரூட் சாலட், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் போன்றவற்றைச் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக்கொள்ளலாம்.