Published:Updated:

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 6

தோசை மாவில்... தோல் சுருக்கம் மறையும்சித்த மருத்துவர் கு.சிவராமன்

''ன்ன ஷைலு... கால்ல வெந்நீரைக் கொட்டின மாதிரி இப்படி ஓடிட்டே இருக்கியே... பாட்டிகிட்ட பேசப் பிடிக்கலையா..?''

''அய்யோ பாட்டி ஒரு வாரமா எக்ஸாம். அதான் பிஸியாத் திரிஞ்சேன்.  ஆனா, நீ செஞ்சு தந்த கை மருந்தால பீரிய்ட்ஸ் வலி மிரண்டு ஓடிடுச்சு... ரொம்ப தேங்க்ஸ் பாட்டி.''

''உனக்கு, கைப்பக்குவமா குமரிகளுக்கான லேகியம் ஒண்ணு கிளறிவெச்சிருக்கேன்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்  - 6

''என்னது குமரிக்கான லேகியமா... எதுக்கு பாட்டி?''

''மாதவிடாய் வலி தொடர்ந்து வராம இருக்கணும்ல? அதுக்குத்தான். நம்ம புறவாசல் பக்கம் தொட்டியில் வளர்ற சோற்றுக் கற்றாழை மடலுக்குள் இருந்து ஜெல்லை எடுத்து நல்லாப் பிசுபிசுப்பு போகக் கழுவிட்டு, அதில் சீரகம், பூண்டு, பனைவெல்லம் சேர்த்து லேகியமாக் கிளறிக்கணும்.  இந்த லேகியத்தை தினம் ஒரு ஸ்பூன் ராத்திரி சாப்பிட்டு வந்தா, அடுத்த பீரியட்ஸ் நேரத்துல வலி எடுக்குமோங்கிற பயமே இனி வேண்டாம்.''

''இந்தக் காலத்துல நாங்க அழகுக்காக பூசுற கற்றாழையை, நீங்க அந்தக் காலத்துல ஆரோக்கியத்துக்குப் பயன்படுத்தி இருக்கீங்க... சரிதானே பாட்டி.''

''அப்பல்லாம் வீடுதான் எங்களுக்கு பியூட்டி பார்லர். கத்தாழை மட்டுமில்ல, அழகுக்கு நிறையவே ரெசிப்பிகள் கைவசம் இருக்கு ஷைலு. வறண்டு போன சருமத்துக்கு, தொடர்ந்து கற்றாழைச் சாறைத் தேய்ச்சிட்டு வந்தா, வறண்ட தோலை வனப்பா மாத்திடும். கால் பித்த வெடிப்பில் தொடங்கி, கரப்பான் நோய் வரைக்கும் தோல் கருத்துத் தடிச்சு வறண்டு போயிருந்தாலும், கற்றாழைச் சோற்றை அதன் மேல் தேய்ச்சுட்டு வந்தா, பழைய நிறத்தை மீட்டுக் கொடுக்கும்.'

''இப்போ பெஸ்ட் சன் ஸ்கிரீனே கற்றாழைதான்னு கண்டு பிடிச்சிருக்காங்க. நிறைய எஸ்.பி.எஃப் (SPF) உள்ள சன் ஸ்கிரீனர் போடக் கூடாதாம். சோற்றுக் கற்றாழை ரொம்ப மென்மையான தீங்கு செய்யாத சன் ஸ்கிரீனாம்.'

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்  - 6

''சூரிய வெளிச்சம் படுறதே பல நோய்கள் வராமத் தடுக்கத்தான்.   ஆனா, நீங்க அதுக்குப் போய் ஸ்கிரீன் போடுறீங்களே. அன்னைக்கு காலங்காத்தால கதகளி வேஷம் கட்டினவ மாதிரி நீ முகம் முழுதும் கிரீமைப் பூசிட்டு நின்னியே..?''

''ஓ... அது ஃபேஷியல் பாட்டி! ஃப்ரான்ஸ்ல இருந்து என் ஃப்ரெண்ட் வாங்கிட்டு வந்தா.''

''ஃபேஷியலை ஃப்ரான்ஸ்லருந்துதான் வரவழைக்கணுமா என்ன? கொஞ்சம் ரோஜா இதழ், திருநீற்றுப்பச்சிலை, ஆவாரம் பூ இதை எல்லாம் சேர்த்து ஒரு பங்கும், அதுக்கு சமபங்கு முல்தானி மட்டியும் சேர்த்து நல்லா மாவா அரைச்சுக்கணும். இந்த மாவில் அரை ஸ்பூன் எடுத்து ரோஸ் வாட்டர் இல்லேன்னா மோரில் கலந்து முகத்தில் பூசணும். நல்லாக் கெட்டியாப் பிடிச்சுக்கும். அப்புறம் அரை மணி நேரம் கழிச்சுக் கழுவினா, முகம் என் முகம் மாதிரி பளீர்னு இருக்கும்.''

''என்னது... உன் முகம் மாதிரியா?'

''ம்ம். எனக்கு என்ன குறைச்சல்? எங்கனாச்சும் என் முகத்துல சுருக்கம் தெரியுதானு சொல்லு?'

''ஓல்டு இஸ் ஆல்வேஸ் கோல்டுதான் பாட்டி. சரி, முகத்துல இருக்கிற இறந்த செல்களை நீக்கி பளிச்னு வைக்க உன் அஞ்சறைப்பெட்டியில் ஏதாவது இருக்கா?''

''அஞ்சறைப்பெட்டி எதுக்கு? அடுப்பங்கரைக்குள்ள போனாலே போதும். இறந்த செல்லைப் போக்கற 'ஸ்க்ரப்’ நம்ம தோசை மாவுதான் தெரிஞ்சுக்கோ!'

''தோசை மாவா?'

''ஆமா. தோசை மாவுல இருக்கிற குருணைத்தன்மையும், அதில் உள்ள புளிப்பு தரும் நுண்ணுயிரியும் சேர்ந்து கழிவை நீக்கி பொலிவாக்கும் புரோபயாட்டிக். இந்த மாவைப் பூசி கொஞ்சம் நேரம் கழிச்சுக் கழுவினா, ஃப்ரெஷ் பூ மாதிரி முகம் ஜொலிக்கும்.''

''அய்யோ... என்ன சிம்பிள் ஸ்க்ரப். இன்னிக்கு காலேஜ்ல இதுதான் ஹாட் டாப்பிக்.'

''ரெண்டு நாள் முன்னாடி, நான் போன பஸ்ல ஒரு அழகான பெண்ணும் வந்தா. ரொம்ப அழகா இருந்தா. ஆனா, உதட்டுக்கு மேல நிறைய முடி.  மீசை மாதிரி, ஆம்பளைத்தனமா இருந்தது. வாயைப் பொத்திக்காத குறையா மூடிட்டே வந்தா.  பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு பாட்டி. அதுக்கு வைத்தியம் இருக்கா?''

''ஆசை... தோசை... மீசை...! எப்பவும் நான் பேசிட்டிருக்கும்போதே... நீ காலேஜுக்குக் கிளம்பிடுவல்ல... இப்ப என் டேர்ன். என் ஃப்ரெண்ட் சாந்தா வந்திடுவா... நான் கோயிலுக்குக் கிளம்பணும்... வரட்டா?'' என்றபடியே லட்சுமி பாட்டி டாட்டா காட்ட, ஷைலு முகத்தில் புன்னகை!  

- மருந்து மணக்கும்...