“என்னை சுற்றி கேமரா” அமைதி இழ்ந்த அருண்
அருணுக்கு வயது 24. எம்.பி.ஏ. படித்தவர். சாதாரண வேலையில் இருந்து, ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார். நல்ல சம்பளம். உற்சாகமாக வேலைக்குச் சென்று வந்த அருணுக்கு, பெண் பார்க்க ஆரம்பித்தனர் அவனது பெற்றோர். அருணின் அழகுக்கும், வேலைக்கும் ஏற்ற, நிறைய வரன்கள் வரத் தொடங்கின.

இரண்டு மாதங்கள் கடந்தன. 'அலுவலகத்தில் ரொம்பப் பிரச்னை. உடன் வேலை பார்ப்பவர்கள் யாரும் என்னுடன் நட்பாக இல்லை' என்று வீட்டில் புலம்ப ஆரம்பித்தார் அருண். 'ஆபீஸ்னா அப்படித்தான் இருக்கும்... நாம தான் அட்ஜஸ்ட் செஞ்சுக்கணும்'' என்று அட்வைஸ் செய்தனர் பெற்றோர். அடுத்த, சில வாரங்களிலேயே, தினமும் கோபத்துடன் வீட்டுக்கு வருவதும், வந்ததும் தன் அறைக்குச் சென்று பூட்டிக்கொள்வதுமாக இருந்தார். சாப்பிடுவதைத் தவிர வேறு எதற்கும் வெளியே வரமாட்டார். வேலைக்கும் சரியாகச் செல்லாமல், அப்படியே சென்றாலும், நடுவிலேயே வீட்டுக்கு வந்துவிடுவது என்று அருணின் போக்கு வித்தியாசமாக இருந்தது.
மகனின் நிலை பார்த்து வருந்திய பெற்றோர், ''ஏம்ப்பா... ஒரு மாதிரி இருக்கே..'' என்று கேட்டனர்.

'இந்த உலகத்துல எல்லாரும் என்னை வெறுக்கறாங்க... என் மேல அக்கறை உள்ளவங்கன்னு யாரும் இல்லை. எல்லோருமே சுயநலவாதிங்கதான்...' என்று எரிந்து விழுந்திருக்கிறார்.
அருணின் பேச்சில் அதிர்ச்சியடைந்த அவனது அப்பா, 'அலுவலகத்தில் அவனுக்கு என்னதான் பிரச்னை?’ என்பதை அறிய அவனது உயர் அதிகாரியை சந்தித்துப் பேசினார். 'நல்லாத்தான் வேலை பார்த்திட்டு இருந்தார். ஆனால், கொஞ்ச நாளா, அவரோட நடவடிக்கை ரொம்பவே புதுசா இருக்கு. யார்கிட்டயும் பேச மாட்டேங்கிறார். எந்த விஷயத்துலயும் கலந்துக்கறது இல்லை. ஆபீஸ் மீட்டிங்னா ஏதாவது சாக்குபோக்கு சொல்லிட்டு போயிடுறார். திடீர்னு, ஒருநாள் 'என் கம்ப்யூட்டரை யாரோ 'ஹேக்’ செஞ்சிட்டாங்க, 'ஃபைல்’ எல்லாத்தையும் எடுத்து பார்த்திருக்காங்க’னு கம்ப்ளெயின்ட் பண்ணார். அதோடு, 'இந்த ஆபீஸ்ல, என்னை அசிங்கப்படுத்தணும்னே ஒரு குரூப் வேலை செய்யுது. எல்லார் முன்னாடியும் என்னை அவமானப்படுத்த நினைக்கிறாங்க. ஆபீஸ்ல இருக்கிற எல்லா கேமராவும் என்னை நோக்கியே திருப்பப்பட்டிருக்கு. என் மொபைல் போன் கண்காணிக்கப்படுது’னு சொன்னார். அவரோட ஒவ்வொரு புகாரும் ரொம்ப அபத்தமா இருக்கும். அவருக்கு ஏதோ மனப் பிரச்னை. நல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டுபோய் காட்டுங்க' என்றார் அந்த அதிகாரி அக்கறையுடன்.
'எப்பவும், எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்வதும், வீண் சண்டை போடுவதுமே அருணுக்கு வழக்கமாகிவிட்டது'' என்று அருணுடன் கூட வேலை பார்ப்பவர்களும் சொன்னார்கள்.
இந்நிலையில்தான், அருணை என்னிடம் அழைத்துவந்தார் அவனது அப்பா. என் அறைக்கு வந்ததில் இருந்து அருண் அமைதியின்றி, சுற்றும்முற்றும் பார்த்தபடி, ''இங்க கேமரா, மைக் வெச்சிருக்காங்களா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். 'அப்படி எல்லாம் ஒன்றுமில்லை’ என்று அவரை சமாதானப்படுத்திய பிறகுதான் பேசவே ஆரம்பித்தார்.
'டாக்டர், என் ஆபீஸ்ல எல்லோரும் மோசடிகளில் ஈடுபடுறாங்க... ஆபீஸ்ல ஒரு குரூப் இருக்கு. அவங்க சொல்றதை நான் கேட்கலை. அதனால என்னைக் குறி வெச்சு பிரச்னை செய்யறாங்க. என்னைச் சுத்தி கேமரா இருக்கு. என் கம்ப்யூட்டர் கண்காணிக்கப்படுது.
நான் தனிமையில் இருக்கும்போது, என் காதில் ஏதோ குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கு. எல்லோரும் என்னைப் பத்தியே பேசிட்டு இருக்காங்க. நான் மனசுல என்ன நினைக்கிறேனோ, அது மத்தவங்களுக்கு உடனே தெரிஞ்சிடுது' என்றார்.

'இது எப்படி உங்களுக்குத் தெரியும்?' என்று நான் கேட்கவும், 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா அவங்க என் மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிச்சிடுறாங்க' என்றார்.
அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னை ஒன்றிரண்டு அல்ல என்று புரிந்தது... ஏகப்பட்ட மனப் பிரச்னைகள்!
* தாங்கள் தண்டிக்கப்படுவதாக தவறான நம்பிக்கையுடனும், என்ன சொன்னாலும் ஒப்புக்கொள்ளாத மனநிலையுடன் இருப்பதை 'டெல்யூஷன் ஆஃப் பர்ஸிகியூஷன்’ (Delusion of Persecution) என்று சொல்லுவோம்.
* காதில் ஏதோ குரல் ஒலிப்பதை, 'ஹாலுசினேஷன்’ (Hallucination) என்போம்.
* தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுகிறார்கள், தன்னைக் கண்காணிக்கிறார்கள் என்று தவறான நம்பிக்கை கொண்டிருப்பதை 'டெல்யூஷன் ஆஃப் ரெஃபரன்ஸ்’ (Delusion of Reference) என்போம்.
* மனதில் நினைத்ததை யாரிடமும் சொல்லாத நிலையில், மற்றவர்களுக்கு தெரிந்துவிடுகிறது என்று நம்புவதை 'தாட் ப்ராட்காஸ்ட்’ (Thought Broadcast) என்று சொல்வோம். இது ஸ்கீசோப்ரீனியா (Schizophrenia) நோயின் அறிகுறி.
இந்த அனைத்துப் பிரச்னைகளும் ஒன்றாகச் சேர்ந்து மிகவும் பயம் மற்றும் பதற்றமான மனநிலையை அருணுக்கு உருவாக்கிவிட்டது.
உடனடியாக அருணுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. அவரை இரண்டு வாரங்கள் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தோம். பயம், பதற்றம் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளைப் போக்க அவருக்கு மருந்துகள் அளிக்கப்பட்டன.
'ஒழுங்காக மருந்து மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே இந்த பிரச்னையில் இருந்து முழுமையாக விடுபட முடியும்... அதற்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும். அதுவரை, திருமணம் பற்றிய பேச்சுக்கள் வேண்டாம். மனநலப் பாதிப்பில் இருந்து மீண்டவர் என்று கூடுதல் கவனம் செலுத்தாமல், வழக்கம்போல நடந்துகொள்ளுங்கள்’ என்று அவரது பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினோம்.

தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் மாத்திரை மருந்துகளால் அருணின் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, 'யாரும் தன்னைக் கண்காணிப்பதுபோலவும், காதில் குரல் கேட்பது போலவும் தோன்றவில்லை. மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பேசுவதாகக் கூறியது எல்லாம் இப்போது இல்லை’ என்றார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு 'காக்னிடிவ் பிஹேவியர் தெரப்பி’ அளிக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு ஏற்பட்ட தவறான நம்பிக்கைகள், அதன் காரணமாக ஏற்பட்ட தவறான நடத்தைகள் போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில், பயிற்சி அளிக்கப்பட்டது.
அவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள், அவை எப்படிச் சரிப்படுத்தப்பட்டன; தற்போது அருண் வேலை பார்க்கத் தயார் என்ற உறுதிமொழியுடன் விரிவான கடிதம் ஒன்றை அவரது உயர் அதிகாரிக்கு அனுப்பினோம். அதை ஏற்று அவருக்கு அதே அலுவலகத்தில் மீண்டும் வேலை கிடைத்தது.
தற்போது அருண், பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்கிறார்.
யாருக்கு வேண்டுமானாலும் மனநல பாதிப்புகள் வரலாம். அதற்காகப் பயப்படத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்பநிலையிலேயே குடும்பத்தினரின் உதவியும் ஆதரவும் இருந்தால் இயல்பான வாழ்க்கை முறைக்கு அவர்களைக் கொண்டுவர முடியும்.