Published:Updated:

மூலம், சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் களைச்செடி ஆகாயத்தாமரை!

மூலம், சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் களைச்செடி ஆகாயத்தாமரை!
மூலம், சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் களைச்செடி ஆகாயத்தாமரை!

காயத்தாமரை. அந்தரத்தாமரை, வெங்காயத்தாமரை, குளிர்தாமரை, குழித்தாமரை, ஆகாயமூலி என்ற பெயர்களைக்கொண்ட இந்த ஆகாயத்தாமரை மூலிகையை ஆங்கிலத்தில் `Water hyacinth' என்பார்கள். `Pistia Strateutes' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது நீரில் வாழும் ஒரு பல்லாண்டுத் தாவரமாகும்.

தென் அமெரிக்காவில் உள்ள அமேசானைத் தாயகமாகக்கொண்டது ஆகாயத்தாமரை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், இளவரசி விக்டோரியா கொல்கத்தா வந்தபோது, தான் கையோடு கொண்டு வந்த ஆகாயத்தாமரையை அங்குள்ள ஹூக்ளி நதியில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப்போல காட்சி தர வேண்டும் என்பது இளவரசியின் விருப்பமாக இருந்ததாம். ஆக, லண்டனில் இருந்து வந்து பற்றிப் படர்ந்ததே இந்த ஆகாயத்தாமரை என்கிறார்கள்.

நீரில் மிதக்கும் வகையில் காற்றடைத்த பையைப்போலவும் வெங்காயம்போலவும் காணப்படுவதால், `வெங்காயத் தாமரை’ என்ற பெயரைப் பெற்றது. ஏரி, குளம், குட்டை போன்ற நீர்த் தேங்கி இருக்கும் இடங்களில் காணப்படும் இதை ஒரு களைச்செடியாகவே பார்த்திருக்கிறோம். ஆனால், இதற்கு நிறைய மருத்துவக் குணங்கள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத தகவல்.

ரத்த மூலம், வயிற்றுப்போக்கு, சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோருக்கு இது நல்லதொரு தீர்வைத் தருகிறது. ஆகாயத்தாமரை இலையைப் பசைபோல் அரைத்து, ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் அரை டீஸ்பூன் வெண்ணெய் அல்லது பசு நெய் சேர்த்து, பச்சை வாசனை போகுமளவு கொதிக்கவைக்க வேண்டும். அதை வடிகட்டி குடித்து வந்தால் ரத்த மூலம், வயிற்றுப்போக்கு, சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல் மட்டுமல்ல, சிறுநீரகத்தைப் பாதிக்கும் புற்றுநோய்கூட வராமல் தடுக்கும் ஆற்றல் படைத்தது.

இன்றைக்கு பெருவாரியான மக்களைப் பாடாகப்படுத்தி வரும் சர்க்கரைநோய்க்கும் இது நல்ல மருந்து. ஆகாயத்தாமரை இலைச்சாறு 100 மி.லி எடுத்துக்கொண்டு ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நீர்விட்டு, கொதிக்கவைக்க வேண்டும். இதைக் குடித்துவந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதுடன் சிறுநீர்த்தாரையில் ஏற்படும் நோய்த்தொற்றும் குணமாகும்.

இலையை அரைத்து, பசையாக்கிக்கொண்டு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டி தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக பூசினால் பலன் கிடைக்கும். மேலும், இதை வெளிமூலம், கொப்புளம், தோல் அரிப்பு, தடிப்பு, கட்டிகள், சொறி சிரங்கு போன்ற பாதிப்புகளுக்குப் பூசுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

`கரப்பான்’ எனும் தோல் நோய், தொழுநோய் புண்களின் மீது மையாக அரைத்த ஆகாயத்தாமரை இலையைப் பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும். 10 ஆகாயத்தாமரை இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அதன் ஆவியை ஆசன வாயில் பிடித்துவந்தால், மூல முளை மறைந்துவிடும். தொடக்கக்கால மூல நோயாளிகள் இதைச் செய்து வந்தால் மூலநோயைத் தடுக்கலாம்.

100 மி.லி இலைச்சாறுடன் அரை எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சூடாக்கிப் பொறுக்கும் சூட்டில் துணியால் தொட்டு வெளிமூலம், மூல எரிச்சல் - வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். அறுவைசிகிச்சை, பொருளாதார இழப்பு என அவதிப்படாமல் பைசா செலவில்லாமல் நிவாரணம் பெறலாம்.

ஆகாயத்தாமரை இலையைச் சுத்தமாகக் கழுவி, சாறு பிழிந்து 20 மி.லி அளவு எடுத்து, அதில் இரண்டு டீஸ்பூன் வெங்காயச் சாறு சேர்த்து காலை, மாலை எனக் குடித்துவந்தால், சொட்டு மூத்திரம், நீர்க்கடுப்பு போன்றவை கட்டுப்படும்.

ஆகாயத்தாமரை இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் ஒரு லிட்டர் சேர்த்து சிறு தீயில் மெழுகுப் பதமாகும் வரை பதமாகக் காய்ச்ச வேண்டும். இதனுடன் கிச்சிலிக்கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி தலா 10 கிராம் எடுத்து இடித்துப்போட்டு காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி, வாரம் ஒருநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்துவந்தால், உடல்சூடு விலகுவதோடு கண் எரிச்சல், மூல நோய் பாதிப்பு போன்றவை கட்டுப்படும்.

இலையுடன் பொடித்த படிகாரம், சுண்ணாம்பு சேர்த்து வண்டு மற்றும் தேள் கடித்த இடங்களில் பூசினால் வலி விலகும். இதை வீக்கம் உள்ள இடங்களில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

ஆகாயத்தாமரையில் இருந்து எரிவாயு தயாரிக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. மேலும், இது அதிக நார்த்தன்மைகொண்ட தண்டுப்பகுதிகளைக்கொண்டிருப்பதால் இயற்கை உரம் தயாரிக்கலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.