Published:Updated:

ஜி.எஸ்.டி... மருந்துகள் விலை உயரும் அபாயம்..! கேள்விக்குறியாகும் எளியவர்களின் ஆரோக்கியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜி.எஸ்.டி... மருந்துகள் விலை உயரும் அபாயம்..! கேள்விக்குறியாகும் எளியவர்களின் ஆரோக்கியம்
ஜி.எஸ்.டி... மருந்துகள் விலை உயரும் அபாயம்..! கேள்விக்குறியாகும் எளியவர்களின் ஆரோக்கியம்

ஜி.எஸ்.டி... மருந்துகள் விலை உயரும் அபாயம்..! கேள்விக்குறியாகும் எளியவர்களின் ஆரோக்கியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஒரே நாடு ஒரே வரி...' என்ற வார்த்தை ஜாலத்தை முன்வைத்து `ஜி.எஸ்.டி' எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டது மத்திய அரசு.

`இந்த வரிவிதிப்பு நல்லதா... கெட்டதா?' என்று பொருளாதார நிபுணர்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஒருபக்கம் இருக்க, பாரம்பர்ய வைத்திய முறைகளான ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் மீதான வரி ஐந்து சதவிகிதத்தில் இருந்து 12 முதல் 28 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அலோபதி மருந்துகளும் இந்த வரி விதிப்பில் இருந்து தப்பவில்லை. இது ஒட்டுமொத்தமாக மருத்துவ உலகையே கலங்கவைத்திருக்கிறது.

`சமீப காலங்களில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளின் மீது மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இந்த மருத்துவத்தை நாடும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்’ என்று வருந்துகிறார்கள் மருத்துவர்கள்.

அலோபதி மருத்துவத்தைப் பொறுத்த வரை 95 சதவிகித மருந்துகளுக்கு வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வால் ஏற்படும் விலையேற்றம் மருந்து கம்பெனிகளையோ, மருத்துவர்களையோ நேரடியாகப் பாதிக்கப்போவதில்லை. மாறாக, மருந்துகளை வாங்கும்

பொதுமக்கள் தலையில்தான் விழப்போகிறது.

இது பற்றி நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ``மருந்துப் பொருள்கள் மீதான வரி உயர்வு யாருமே எதிர்பாராதது. அதிலும், அலோபதி மருந்துப் பொருள்களைவிட நமது பாரம்பர்ய மருத்துவமான சித்தா, ஆயுர்வேத மருந்துப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிவிதிப்புக்கு மத்திய அரசின் ஆதரவாளரான பாபா ராம்தேவ்கூட எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ஒரு மருந்தின் வரியைக் குறைப்பதுபோல் குறைத்து, இன்னொரு மருந்தின் வரியைக் கூட்டியிருக்கிறார்கள். 

ஒட்டுமொத்தத்தில் பெருமுதலாளிகளின் உற்பத்திப் பொருள்கள் தங்கு தடையின்றி கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அவர்களுக்குச் சாதாரண மக்களைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லை.

இன்றையச் சூழலில் அலோபதி மருத்துவத்தைவிட, இயற்கை முறையிலான சித்தா, ஆயுர்வேத சிகிச்சை முறைகளை மக்கள் அதிகம் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். `ஆங்கில மருந்துகளைவிட பாரம்பர்ய மருத்துவம் நல்லது’ என மக்களின் ஆர்வம் பெருகி வரும் சூழலில், இந்த மருந்துகளின் மீதான வரி உயர்வு அவர்களை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கும்..." என்கிறார்.

ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜயபால், ``தாமாக மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கும் டிஸ்பென்ஸிங் டாக்டர்களுக்கு இந்த வரிவிதிப்பால் எத்தகையப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால், மருந்து எழுதிக் கொடுக்கும் டாக்டர்களுக்கு, இந்தப் புதிய வரி விதிப்பால் பெரும் பாதிப்பு உண்டாகும். ஐநூறு ரூபாய்க்கு மருந்து வாங்கியவர்கள், மேலும் 35 ரூபாய் அதிகம் தரவேண்டிய சூழல் வரும்போது யோசிக்கத்தான் செய்வார்கள். ஐந்து நாள்கள் அல்லது பத்து நாள்கள் மருந்து உட்கொள்பவர்கள் என்றால் பரவாயில்லை.

மாதக்கணக்கில் மருந்து உட்கொள்பவர்களுக்கு மாத பட்ஜெட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனால், அடுத்து வரும் காலங்களில் மருந்தைக் குறைத்து வாங்குவார்கள். புதிதாக வரும் நோயாளிகளும் குறைவார்கள். அதே வேளையில் தாமாகவே மருந்தைத் தயாரித்து தரும் சில போலி டாக்டர்கள் தோன்றுவதற்கு இந்த வரி உயர்வு ஒரு வாய்ப்பாக அமையலாம். ஆயுர்வேத அழகுசாதனப் பொருள்களுக்கு வரி உயர்வு சரி. ஆனால் உயிர் காக்கும் ஆயுர்வேத மருந்துகளின் வரிவிதிப்பை அரசு பரிசீலனை செய்தே ஆக வேண்டும்.

முன்பெல்லாம் ஹெல்த் கேர் பொருள்களுக்குப் பெரும்பாலும் கலால் வரி ஒரு சதவிகிதம், விற்பனை வரி ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் என்ற அளவில்தான் இருந்தன. ஆனால், தற்போது பல மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் வரி 12 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. தடுப்பூசிகள், ஹெப்படைட்டிஸ் நோயைக் கண்டறியும் உபகரணங்கள், கால்நடை மருத்துவ மருந்துகள், உபகரணங்கள் அனைத்தின் விலையும் அதிகரிக்கும். அலோபதி, ஆயுர்வேத மருந்துகள் மட்டுமல்ல... சித்த மருந்தின் மூலப் பொருள்களின் விலைகூட நாட்டு மருந்துக் கடைகளில் உயரும். பெரிய மருந்து கம்பெனிகள், நாட்டு மருந்தின் மூலப்பொருள்களான பட்டை, இலை, பூ, காய் கனிகளை நேரடியாக உற்பத்தி செய்பவர்களிடம் வாங்கிக்கொள்ளும். அவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், சிறிய அளவிலான மருந்து தயாரிப்பவர்கள் மூலப்பொருள்களை நாட்டு மருந்துக் கடைகளில்தான் வாங்குவார்கள். அவர்களுக்குத்தான் இந்த வரி உயர்வு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அழகுசாதனப் பொருள்களுக்கு 26 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக வரியை உயர்த்தி இருக்கிறார்கள். இது வெறும் இரண்டு சதவிகிதமே. ஆனால், உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பத்து சதவிகிதம் அதிகமாக்கி இருக்கிறார்கள். இது மக்களின் ஆரோக்கியத்தையும் இந்திய மருத்துவச் சூழலையும் நிச்சயம் பாதிக்கும்’’ என்றார்.

`ஆயுர்வேத முறையில் தயாரான மருந்துகளின் விலை மட்டுமல்ல, மூலப் பொருள்களின் விலையும் அதிகரித்துவிடும்’ என்கிறார்கள்

மருந்து வணிகர்கள். ஆயுர்வேத மருந்துகளின் மீதான வரி விதிப்பு குறித்து சென்னை சி.ஐ.டி நகரில் இருக்கும் ஆடிட்டர் கே.ஆர்.சத்திய நாராயணனிடம் பேசினோம்.

``ஜி.எஸ்.டி வரிவிதிப்பு என்பது ஆழ்ந்து யோசிக்கப்பட்ட முடிவுதான். ஏற்கெனவே பலமுறை, பல்வேறு துறைகளில் ஆலோசித்து கடைசியாகக்கூட 66 பொருள்களுக்கு வரிவிலக்கு அளித்துதான் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்துகளுக்கு வரிவிதிப்பு கூடுதலானது. இது பொதுமக்களைப் பாதிக்கும் என்றாலும், இது ஆரம்பகட்ட சலசலப்புதான். போகப்போக இதை மக்கள் ஒப்புக்கொள்வார்கள். மக்களும் இந்த வரி உயர்வைக் கருத்தில்கொண்டு அவசியமான மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும். ஒரு வைத்தியத்துக்கு மருந்து வாங்கச் செல்பவர்கள், அதோடு தொடர்புடைய அநேக மருந்துகளை வாங்கிக் குவித்துவருகிறார்கள். அதைத் தவிர்ப்பது நல்லது’’ என்கிறார் சத்திய நாராயணன்.

உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைத்து, மக்களைக் காக்கவேண்டியதுதான் ஒரு நல்லரசுக்கு அழகு. ஆனால், அதையும் ஒரு விற்பனைப் பண்டமாகக் கருதி, கூடுதலாக வரி விதிக்கும் அரசின் செயல்பாட்டை என்னவென்று சொல்வது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு