Published:Updated:

“தொடரணும் விகடன் மருத்துவ சேவை”

நெகிழ்ந்த திருவாரூர் மக்கள்!

பிரீமியம் ஸ்டோரி

விண்ணை எட்டும் அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே சென்றாலும், மருத்துவம், ஆரோக்கியம் தொடர்பான விழிப்பு உணர்வு இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கவும் தமிழகம் முழுவதும் டாக்டர் விகடன் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் கொண்ட திருவாரூரில் டாக்டர் விகடனும் திருவாரூர் மெடிக்கல் சென்டர் (டி.எம்.சி.) இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கடந்த மாதம் 25-ம் தேதி சிறப்பாக நடந்தது. திருவாரூர், நாகை, தஞ்சை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து இந்த முகாமில் கலந்துகொண்டனர்.

 “தொடரணும் விகடன் மருத்துவ சேவை”

முகாம், காலை 9 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 8 மணிக்குள் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வர ஆரம்பித்தனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த முகாமில், சிறு குழந்தைகள், இளம் வயதினர் தவிர்த்து அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் 60-70 சதவிகிதத்தினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றுதான் தங்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதைத் தெரிந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது பரிசோதனைக்குப் பிறகு அவரவர் தேவைக்கு ஏற்ப சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கினர். 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஈ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் இதயத் துடிப்பில் பிரச்னை இருந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு எக்கோ பரிசோதனை செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பி.எம்.டி. எனப்படும் எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையும் செய்யப் பட்டது.

 “தொடரணும் விகடன் மருத்துவ சேவை”

திருவாரூர் விளம்பல் பகுதியிலிருந்து வந்திருந்த 58 வயதான காசிநாதன் கூறுகையில், 'எனக்கு ரொம்ப நாளா இதயத்துல பிரச்னை இருக்குங்க. ஆனா, எங்க ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறது, எப்படி எடுத்துக்கிறதுன்னு புரியாம இருந்தேன். என் மகன்தான் இங்க கூட்டிட்டு வந்தான். எனக்கு பரிசோதனை செஞ்சு பார்த்துட்டு, பிரச்னை இருக்கிறதை உறுதிப்படுத்தினாங்க. 'காசு பணம் பிரச்னை இல்லை, இப்போ அரசாங்க திட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கலாம். உங்களுக்கு எங்க விருப்பமோ அங்க சிகிச்சை எடுத்துக்கலாம்’னும் சொன்னாங்க. இதை நடத்தும் மெடிக்கல் சென்டருக்கும், டாக்டர் விகடனுக்கும்தான் நான் ரொம்பவே நன்றிக்கடன்பட்டிருக்கேன்' என்றார்.

 “தொடரணும் விகடன் மருத்துவ சேவை”

கீழ்வேளூரில் இருந்து வந்திருந்த சிவராமன் கூறுகையில், 'நானும் என் மனைவியும் இங்க வந்தோம். அவங்களுக்கு எலும்பு டெஸ்ட் செஞ்சாங்க. அதுல கொஞ்சம் வீக்கா இருக்கிறதா சொன்னாங்க. அதை எப்படி சரிசெய்யணும், என்ன மாத்திரை மருந்து எடுத்துக்கணும்னு சொன்னாங்க. இரண்டு பேருக்கும் இலவசமா மருத்துவம் பார்த்துக்கிட்டோம். இவ்வளவு டெஸ்ட் எடுக்கணும்னா எவ்வளவோ செலவாகும். ஆனா, அவ்வளவையும் இலவசமா செய்ய வழி செஞ்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க. இதுபோல நிறைய முகாம்களை எங்களைப்போல இருக்கிறவங்களுக்காக நீங்க நடத்தணும்' என்று தழுதழுத்தார்.

வாசகர்களின் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் விகடன் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடக்கும்.

- செ.வெங்கட கிருஷ்ணன்   படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு