Published:Updated:

பதைபதைக்கும் வேகம்.. பெற்றோரே உஷார்!

பதைபதைக்கும் வேகம்.. பெற்றோரே உஷார்!

பிரீமியம் ஸ்டோரி

பெரியவர்களை மிஞ்சும் வேகம். பதைபதைக்கும் சேஸிங். ஆபத்தை உணராத ரேஸிங் என இருசக்கர வாகனங்களில் சீறிப் பாய்கின்றனர் பள்ளி மாணவர்கள். இன்று, பல நகர்ப்புறங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனத்தைப் படுவேகமாக ஓட்டிச் செல்வதைப்

பதைபதைக்கும் வேகம்.. பெற்றோரே உஷார்!

பார்க்கையில் மனம் பதறுகிறது. சாலையைக் கடப்பவர்களையும் கதிகலங்கவைக்கிறது.  

'இளங்கன்று பயம் அறியாது’ என்ற சொல்லை உண்மையாக்கும் விதத்தில், ஒரே பைக்கில் மூவர் செல்வது, வீலிங் செய்வது, தாறுமாறாக ஓட்டிச் செல்வது என ரோட்டில் காத்திருக்கும் ஆபத்துக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதே இல்லை. விளைவு பெரும் விபத்துக்களைச் சந்திக்க நேரிட்டு... உயிரையே இழக்கும் நிலை உருவாகிவிடுகிறது. இது குறித்து, மனநல மருத்துவர் சத்தியநாதனிடம் கேட்டோம்.

''கோபம், வேகம் இந்த இரண்டும் சேர்ந்ததுதான் விடலைப்பருவம். பொதுவாக இந்த வயது மாணவர்களுக்கு, ஒருவர் செய்வதைப் பார்த்து 'நாமும் அப்படிச் செய்தால் என்ன?’ என்ற எண்ணங்கள் உருவாகும். இதனால்தான் சிகரெட், மது, பஸ்ஸில் தொங்கிக்கொண்டு பயணிப்பது போன்ற செயல்களை ஒருமுறை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இதே எண்ணத்தில்தான் இவர்கள் பைக்கில் செல்லும்போதும் உச்சகட்ட வேகத்தில் செல்வது, வீலிங் செய்வது, சட்டென்று கட் அடித்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது ஒரு புதுவித உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுப்பதுடன், ஒரு 'ஹீரோயிசம்’ செய்கிறோம் என்ற எண்ணமும் உருவாகிறது. இந்த மனநிலைதான் இவர்களுக்கு இப்படி ஒரு வேகத்தைக் கொடுக்கிறது. எந்த ஒரு விஷயத்தைச் செய்யக் கூடாது என்று சொல்கிறோமோ அதை செய்து பார்க்கும் ஆர்வம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

பதைபதைக்கும் வேகம்.. பெற்றோரே உஷார்!

ஒரே பைக்கில் மூன்றுக்கும் அதிகமானோர் உட்கார்ந்துகொண்டு அதிவேகத்தில் செல்லும்போது உடன் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு புதுவித உற்சாகத்தைக் கொடுக்கும். உடனே அவர்களும் ஆளுக்கு ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு தனியாக ஓட்டிப் பார்ப்பார்கள். பெற்றோர்களும் பிள்ளைகள் கேட்டவுடன் பைக் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இப்படி உற்சாகத்தில், கட்டுப்படுத்த முடியாத வேகத்துடன் வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு கை, கால்கள் இழத்தல், மாறாத தழும்புகள் என மோசமான விளைவுகளைச் சந்திக்கின்றனர். இறுதியில் கிடைப்பது இழப்புதான். இது, உடல் அளவில் மட்டும் இல்லாமல் மனதளவிலும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்திவிடும்'' என்ற டாக்டர் சத்தியநாதன், சிறுவர்களின் மனதில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதையும் கூறினார்.  

''இந்த வயது மாணவர்களுக்கு அறிவுரை சொல்லி புரியவைக்க முடியாது. எந்த விஷயத்தையும் அதன் விளைவுகள், விளைவுகளால் ஏற்பட்ட வலி, பாதிப்புகளை 'விர்ச்சுவல்’ முறையில் புகைப்படங்களா கவோ அல்லது குறும்படமாகவோ காண்பித்து, 'இவர்கள் இப்படிச் செய்தார்கள். அதனால் இப்போது இப்படி இருக்கிறார்கள்’ என்று எடுத்துச் சொன்னால் சுலபமாக அவர்கள் மனதில் பதிந்துவிடும். இந்த முறைதான் இவர்களிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்' என்கிறார்.

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவதைப் பற்றி சென்னை போக்குவரத்துக் காவல் உயர் அதிகாரியிடம் கேட்டோம்.

'பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்களாகதான் இருப்பார்கள். அவர்கள் பைக் ஓட்டுவதே தவறு. அவர்களிடம்  லைசென்ஸ் இருக்காது. சட்டப்படி ஒருவர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். ஓட்டி வந்தவரின் பெயரில் வண்டி இல்லாமல் பெற்றோர் பெயரிலோ அல்லது வேறு ஒருவரின் பெயரிலோ இருந்தால், அவர்களுக்கும் சேர்த்து 1,000 ரூபாய் கட்ட வேண்டும். அப்படி கட்டத் தவறும்பட்சத்தில், கோர்ட்டில் ஆஜர்படுத்தி 30 நாட்கள் வரை சிறைத் தண்டனை அளிக்கவும் அதிகாரம் உள்ளது. 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சிறைக்குப் பதில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

பெற்றோர்கள், பிள்ளைகளின் வயதுக்குத் தகுந்தவற்றை வாங்கி கொடுக்க வேண்டும். பள்ளி நிர்வாகமும் இதைக் கவனத்தில்கொண்டு, விழிப்பு உணர்வு ஏற்படுத்தி எங்களுக்குத் துணையாக நின்றால்தான், இளம் மாணவர்கள் வண்டி ஓட்டுவதை முற்றிலும் தடுக்க முடியும்'' என்றார்.

- ஹெச்.ராசிக் ராஜா

படங்கள்: தி.குமரகுருபரன் , மாடல்கள்: நீரஜ், மகேஷ், சௌந்தரராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு