பிரீமியம் ஸ்டோரி
மனமே நலமா?- 25

டாக்டர் ஆர்.டி.கண்ணபிரான், மனநல மருத்துவர், திருவாரூர்,

வீட்டில் தன்னுடைய அறையில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த 26 வயது ராமகிருஷ்ணனுக்கு திடீரென்று படபடப்பு. அதிக வியர்வையுடன் நெஞ்சு வலி ஏற்பட மூச்சுவிடவே சிரமப்பட்டிருக்கிறார். என்னமோ ஏதோ என்று பயந்த ராமகிருஷ்ணனின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அறிகுறிகள் மாரடைப்பு போல இருக்கவே, நிலைமை மிக மோசமாக இருப்பதை உணர்ந்த டாக்டர்கள் உடனடியாக ராமகிருஷ்ணனை ஐ.சி.யு. பிரிவில் சேர்த்து, சிகிச்சையைத் தொடங்கினர்.

முதல்கட்டமாக ராமகிருஷ்ணனுக்கு ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டது. ரிப்போர்ட்டைப் பார்த்த

மனமே நலமா?- 25

கார்டியாலஜிஸ்ட், குழப்பம் அடைந்தார். உடனே, 'எக்கோ எடுத்துப் பார்த்திடலாம்’ என்று அதையும் எடுத்தனர். ஆனால், அதிலும் எல்லாம் நார்மலாக இருந்தது. இதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக ராமகிருஷ்ணன் இயல்பு நிலைக்குத் திரும்பினார். 'உங்களுக்கு ஒண்ணும் இல்லை... நீங்க ஆரோக்கியமா இருக்கீங்க. உங்க இதயத்துல எந்த பிரச்னையும் இல்லை. நீங்க வீட்டுக்குப் போகலாம்'' என்று அவரை டிஸ்சார்ஜ் செய்ததும்தான் ராமகிருஷ்ணனின் பெற்றோருக்கு நிம்மதியே வந்தது.  

ஆனால் ராமகிருஷ்ணனோ, எங்கே தனக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து நடுங்கினார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சில நாட்கள் ஒழுங்காக ஆபீஸ் சென்றுவந்தார். தினமும் ஆபீஸுக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். 'பைக்கில் போகும்போது ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ, கீழே விழுந்து இறந்துவிடுவோமோ' என்று பயம் ராமகிருஷ்ணனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. அதனால், மோட்டார் சைக்கிளில் பயணிக்கையில் துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்வார். பின்னர், அதையும் தவிர்த்து பஸ்சில் பயணித்தார். பஸ்சில் போகும்போது, 'மாரடைப்பு வந்துவிடுமோ... இறந்துவிடுவோமோ'' என்று பயந்தபடியே சென்றுவருவார். இதனால் உடன் அப்பாவையும் அழைத்துச் சென்றார். அலுவலகத்திலும் சதாசர்வ காலமும் ஹார்ட் அட்டாக் பற்றிய சிந்தனையே சுழன்று கொண்டிருந்தது. 'வேலை பார்க்கும்போது ஹார்ட் அட்டாக் வந்துட்டா என்ன செய்றது?’ என்று அலுவலகம் செல்வதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தார். ஒரு கட்டத்தில் அவரால் வேலைக்குக்கூட போக முடியாத நிலை ஏற்பட்டது. அடிக்கடி நெஞ்சுவலி என்று மருத்துவமனைக்குச் செல்வார். பரிசோதனையில் எல்லாம் நார்மலாக இருக்கும். எல்லா டாக்டர்களும் நார்மலாகதான் இருக்கிறது என்று கூறுவதால் இவர் ஒவ்வொரு முறையும் மருத்துவமனையை மாற்றிக்கொண்டே இருந்தார்.

இந்தநிலையில், 'ராமகிருஷ்ணனின் உடலில் எந்தக் குறையும் இல்லை... மனதில்தான் ஆரோக்கியம் இல்லை’ என்பதைத் தெரிந்து கொண்ட டாக்டர் ஒருவர், ''நீங்க உங்க பையனை மனநல மருத்துவரிடம் கூட்டிட்டுப் போய்க் காட்டுங்க' என்று ஆலோசனை தரவும், ராமகிருஷ்ணனை என்னிடம் அழைத்துவந்தனர். ராமகிருஷ்ணனுக்கு உள்ள பிரச்னைகள் பற்றி அவர்கள் கூறியதை வைத்து அவருக்கு 'பேனிக் டிஸ்ஆர்டர்’ எனப்படும் 'அதிக பயம் நோய்’ இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அவரிடம் பேசினேன்.

மனமே நலமா?- 25

ராமகிருஷ்ணன் மூடி டைப். யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். ராமகிருஷ்ணனுடன் வேலை பார்க்கும் சரண்யாவுடன் காதல் மலர்ந்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். சரண்யாவின் தொடர் தொந்தரவு காரணமாகத் தன் வீட்டில் காதல் விஷயத்தை சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன். அதேபோல் சரண்யாவும் தன் வீட்டில் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டிருக்கிறார். இவர்கள் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு. ஒரு கட்டத்தில் பெண்ணின் வீட்டில் இறங்கி வந்திருக்கின்றனர். ஆனால், ராமகிருஷ்ணன் வீட்டிலோ சாதியைக் காரணம் காட்டி ஒப்புக்கொள்ளவில்லை. ராமகிருஷ்ணன் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அதை அவர் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. வேலை பார்க்கும் இடத்திலும் டார்கெட், பிரசன்டேஷன் என்று நிறைய 'பிரஷர்’. ஒரு கட்டத்தில், 'இனியும் உங்களை நம்பிக்கொண்டிருந்தால், என் வாழ்க்கை வீணாகப்போய்விடும்' என்று கூறி சரண்யா விலகிச் சென்றார். சரண்யா இப்படித் தன்னைப் புறக்கணித்துச் சென்றதை ராமகிருஷ்ணனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எவ்வளவோ சமரசம் செய்தாலும் அதை சரண்யா ஏற்றுக்கொள்ளவில்லை. சரண்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து, திருமணமும் நிச்சயம் ஆனது. வேலை டென்ஷன், சரண்யாவுக்கு திருமணம் என அனைத்தும் ஒன்று சேரவே ராமகிருஷ்ணனுக்குப் பதற்றம் அதிகரித்து, அது மாரடைப்பு போன்று வெளிப்பட்டிருக்கிறது.

உடலுக்கு ஒன்றும் இல்லை என்று டாக்டர்கள் கூறினாலும் ராமகிருஷ்ணனுக்கு பயம் மட்டும் போகவில்லை. ராமகிருஷ்ணனுக்கு பேனிக் டிஸ்ஆர்டருடன், அக்ரஸிவ் போபியாவும் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் வெளியே செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று பயந்து வேலைக்குப் போவதையே தவிர்த்திருக்கிறார். மன அழுத்தம், பதற்றம் காரணமாக அவருக்கு பய நோய் ஏற்பட்டிருக்கிறது. எனவே, பயம் மற்றும் பதற்றத்தைத் தணிக்க, அவருக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டன.

அதன் பிறகு அவருக்கு 'சிஸ்டமேட்டிக் டிசென்சிடைசேஷன் தெரப்பி’ அளிக்கப்பட்டது. அதாவது அவரது பயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கும் சிகிச்சை இது. இதன்படி, முதலில் பஸ்ஸில் அம்மா அல்லது அப்பாவுடன் பயணிக்கும்படி செய்தேன். ஒரு சில நாட்கள் அப்பாவுடன் அலுவலகம் சென்றுவந்தார். அதன் பிறகு அப்பாவை பஸ்சின் பின்பக்கத்திலும், ராமகிருஷ்ணனை பஸ்சின் முன் பக்கத்திலும் உட்கார்ந்து பயணிக்கும்படி செய்தேன். இப்படியே சில நாட்கள் அலுவலகம் சென்றுவந்தார். இதனால் வெளியே சென்று வருவதில் அவருக்கு இருந்த பயம் குறைந்திருந்தது. பின்னர் மோட்டார் சைக்கிளில் அப்பாவுடன் பயணிக்கும்படி அறிவுறுத்தினேன். இப்படி அவருக்கு எதில் எல்லாம் பயம் உள்ளதோ, அந்த விஷயங்களை ஒரு கட்டம் வரை மற்றவர்கள் உதவியுடன் செய்யவைத்து பின்னர் அவராகச் செய்யும்படி செய்தேன்.

தொடர் மருந்து மாத்திரைகள், கவுன்சிலிங் கொடுத்த பிறகு ராமகிருஷ்ணன் முற்றிலும் குணமடைந்துவிட்டார். குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறேன். அவரும் தவறாமல் வந்து பரிசோதித்துக்கொள்கிறார். ஒருமுறை வரும்போது திருமண அழைப்பிதழோடு வந்தார். ராமகிருஷ்ணனுக்கு திருமணம் ஆகி, தற்போது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு