பிரீமியம் ஸ்டோரி

இதயம் காக்கும் சிறப்பு மையம்!

அக்கம் பக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில், இறுதி நிலை இதய செயலிழப்பு மற்றும் இதய மாற்று சிகிச்சை மையம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் தொடக்க விழாவின்போது மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சைப் பிரிவு இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன், 'இதய நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. சிகிச்சை மேற்கொண்டும் சில நேரங்களில் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு பலர் உயிர் இழக்கின்றனர். இந்த உயிரிழப்பைத் தடுப்பதற்கான சிறப்பு சிகிச்சைகளை இந்த மையத்தில் பெறலாம். மேலும், மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து இதயத்தைத் தானமாகப் பெற்று வேறு ஒருவருக்குப் பொருத்துவது, செயற்கை இதயம் பொருத்துதல், எல்வாட் (LVad) என்ற இயந்திரத்தின் மூலம் இதய செயல் இழப்பைத் தடுத்து, இதய செயல்பாட்டை சீராக்குவது போன்ற சிறப்பு சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. சாதாரண மக்களும் இதில் பயனடையும் வகையில் தமிழக அரசு உயிர்காக்கும் காப்பீட்டு திட்டத்துடன் இந்த சிகிச்சையை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இது முடிவு செய்யப்படும்' என்றார். ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மொஹமத் சூபைர், சென்னையைச் சேர்ந்த மோனிகா, எல்வாட் கருவி மூலம் வாழும் சென்னையை சேர்ந்த சதீஸ் குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது நெகழ்ச்சியாக இருந்தது.

ஆச்சர்யமூட்டும் கருவி!

அக்கம் பக்கம்

மாத்திரை மருந்து, உணவுக் கட்டுப்பாடு என்று இருந்தும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரவில்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கருவி ஒன்றை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தற்போது எலிகளுக்கு இந்தக் கருவியைப் பொருத்தி சோதனை செய்யப்பட்டதில் ரத்த அழுத்தத்தை எந்தப் பெரிய பக்கவிளைவுகள் ஏதும் இன்றி 40 சதவிகிதம் அளவுக்குக் குறைத்துள்ளதாம். இந்தக் கருவியை மேலும் நவீனப்படுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தக் கருவியைப் பொருத்துவதற்கு அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும். உடலுக்குள் இருந்தபடியே இந்த கருவி மூளைக்கு சிக்னல் அனுப்பி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். ரத்தக் குழாயின் சுருங்கி விரியும் தன்மையைக்கொண்டு ரத்த அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதைக் கணக்கிட்டு, ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது அதை சரிக்கட்ட மூளைக்கு சிக்னல் அனுப்பும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கருவி பயன்பாட்டுக்கு வரும் வரை காத்திருப்போம்.

புரட்சியை ஏற்படுத்திய புள்ளிவிவரங்கள்!

தமிழ்நாட்டில் தீவிர மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துகொண்டே இருக்கும் நிலையில், திருப்பூர்,  மடத்துக்குளத்தைச் சேர்ந்த

அக்கம் பக்கம்

பெண்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள்தான் ஹாட் டாப்பிக். அந்த மனுவில், 'ஆண்டுக்கு 70 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துக்களுக்கு போதை தான் காரணம் என்பதும் சர்வேக்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்களில் பலஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி, பெண்களை விதவையாக்கி, குழந்தைகளை அனாதைகளாக்கி, பலரை அங்ககீனப்படுத்தி, மக்களின் சிந்தைனையை மழுங்கடிக்கும் மது விற்பனையை படிப்படியாகக் குறைக்க வேண்டும். விபத்துகளில் பாதிக்கப்படும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரம் தொலைந்து போகிறது. சட்டவிரோதமான காரியங்களுக்கும் போதை தான் அடிப்படைக் காரணமாக உள்ளது. மதுவை அருந்துவது என்பது, சமுதாய சீர்கேட்டின் முதல்படி. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்று மது அருந்துவது தவறில்லை என்பது போல் மாயதோற்றம் உருவாகி உள்ளது. இதனால் தலைமுறைகள் பாதிக்கப்படும் என்பது உறுதி. மது அருந்துவதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு பின் ஆரோக்கியம் இல்லாத, தொழில் மற்றும் கல்வியில் நுணுக்க அறிவு குறைந்த சமுதாயம் உருவாகி விடும் என்பதை உணர்ந்து மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்' என்று கூறியுள்ளனர்.

ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அசுத்தம்!

அக்கம் பக்கம்

வளர்ந்து வரும் இந்தியாவில் இன்னும் 55 கோடி பேர் திறந்தவெளிக் கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது உலக நாடுகள் அமைப்பு. பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான ஓர் அறிக்கையை உலக நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. உலக அளவில் 100 கோடி பேர் இன்னும் திறந்தவெளியைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 82 சதவிகிதம் பேர் இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட 10 நாடுகளில் வசிக்கின்றன. இந்த 10 நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. காலரா உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய் ஏற்படுவதற்கு நீர் மாசுபாடுதான் காரணமாக இருக்கிறது. எனவே இந்த நிலையை 2025-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று உலக நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதேபோன்று உலக அளவில் கிராமப்புறங்களில் வாழும் 75 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்னும் கிடைக்கவில்லை என்றும் உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளது.

சட்டத்துக்கே சவால்விடும் சிறுநீரகத் திருட்டு

என்னதான் சட்டம் போட்டாலும், அதை எப்படி எல்லாம் மீறலாம் என்று யோசிப்பார்கள் சிலர்.

அக்கம் பக்கம்

இந்தியாவில் சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு, உறவினர்கள் மட்டுமே சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முடியும். இல்லை என்றால், மூளைச் சாவு அடைந்தவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்டு பொருத்தப்படும். அதற்கு பெயரைப் பதிவுசெய்துவிட்டு காத்திருக்க வேண்டும். சிலர் ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு ஆசைவார்த்தை கூறி சிறுநீரகத்தை அறுவைசிகிச்சை செய்து எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க இப்படிக் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது. சட்டத்தை எப்படி ஏமாற்றலாம் என்று நினைத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த கொடூர எண்ணம் கொண்ட சிலர், இங்கிருந்து சிலரை இலங்கைக்கு அழைத்துச் சென்று உறவினரைப் போல் நடித்து, அங்குள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்திருக்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறது ஆந்திர போலீஸ். இலங்கை மருத்துவமனையிடமும், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இப்படி, குறுக்குவழியில் சிறுநீரகத் திருட்டு நடப்பதைத் தடுக்க இந்திய அரசு ஏதேனும் சட்டம் கொண்டுவருமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு