Published:Updated:

அகத்தி, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி... உடல்நலனுக்கு உத்தரவாதம் தரும் கீரைகள்!

அகத்தி, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி... உடல்நலனுக்கு உத்தரவாதம் தரும் கீரைகள்!
அகத்தி, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி... உடல்நலனுக்கு உத்தரவாதம் தரும் கீரைகள்!

அகத்தி, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி... உடல்நலனுக்கு உத்தரவாதம் தரும் கீரைகள்!

கீரைகள் சத்து நிறைந்தவை மட்டுமல்ல... அவை நோய் தீர்க்கும் வல்லமை படைத்தவை என்றால் அது மிகையாகாது. அவற்றில் சில கீரைகளைப் பார்ப்போம்.

அகத்தி
அகத்தி... சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி, பேய் அகத்தி போன்றவை இதன் குடும்பமாகும். பொதுவாக அகத்தியில் இரண்டு வகை உள்ளது. ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று சிவப்பு நிற பூக்களைக்கொண்டது. அதை செவ்வகத்தி என்பார்கள். வறட்சியைத் தாங்கி வளரும் அகத்தி கரிசல் மண்ணில் வேகமாக வளரக்கூடியது. அகத்திக்கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது.

அகம் + தீ = அகத்தீ. உடலின் உட்புற உஷ்ணத்தைத் தணிப்பதால் அகத்தி என அழைக்கப்பட்டதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர். மருத்துவக்குணம் உள்ள அகத்தியை வாரம் ஒருநாள் சாப்பிட்டு வந்தால் உடல்சூடு குறைவதோடு கண்கள் குளிர்ச்சியடையும். சிறுநீர் தடையில்லாமல் தாராளமாகப் போவதுடன் மலம் இளகலாக வெளியேறும். மேலும் வாய்ப்புண், தொண்டைப்புண், குடல்புண் போன்றவற்றை ஆற்றக்கூடியது அகத்திக்கீரை.

அரைக்கீரை
தமிழர்களின் சமையலில் தவறாமல் இடம்பெறும் உணவுகளில் ஒன்று அரைக்கீரை. காய்ச்சல், சளி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அரைக்கீரையின் தாவரவியல் பெயர் Amaranthus Tristis. அறுகீரை, கிள்ளுக்கீரை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு. உடலுக்கு வெப்பத்தைத் தரக்கூடிய அரைக்கீரை நல்ல பலன் தரக்கூடியது. பிரசவமான பெண்களுக்கு இதைச் சாப்பிடக் கொடுப்பதால் போதிய சக்தி கிடைக்கும்.

அரைக்கீரைச் சாற்றில் மிளகை ஊற வைத்து காய வைத்து தூளாக்கி தினமும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி விலகும். கசகசா, தேங்காய்ப்பால், குடமிளகாய் போன்றவற்றுடன் அரைக்கீரை சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். இதேபோல் பருப்புடன் இதைச் சமைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் சோகை நோய்கள் மறையும்.

ஆரைக்கீரை
நீரோடை மற்றும் ஏரிகளின் கரைகளிலும் நீர் நிறைந்த வயல்களிலும் வளரக்கூடியது ஆரைக்கீரை. நீர் ஆவாரை, சதுப்பன்னி என்ற வேறு பெயர்களில் அழைக்கப்படும் குளிர்ச்சித்தன்மை உடையது. நல்ல சுவையுள்ள இந்தக் கீரை உடல் உஷ்ணம் தணித்து குளிர்ச்சி குறையாமல் வைத்திருக்கும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை சரி செய்வதுடன் பித்தத்தைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதுடன் பெண்களைப் பாடாய்ப்படுத்தி வரும் வெள்ளைப்படுதலை குறைக்கும்.

அதிகமாக ஏற்படும் தாகத்தைத் தணிக்கும் இந்தக் கீரை சிறுநீருடன் ரத்தம் கலந்து போகும் பிரச்னையை சரிசெய்யும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் மதிய வேளைகளில் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். மேலும் பொதுவாக உடலுக்கு வலுவூட்டும் இந்தக்கீரை எல்லா நாள்களிலும் கிடைக்காது என்பதால் வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்திக் கொள்ளவும். அதில் தேவையான அளவு எடுத்துத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் குடித்து வந்தால் வேறு நோய்கள் எதுவும் நம்மை அண்டாது.

கரிசலாங்கண்ணி
கரிசாலை, அரிப்பான் பொற்கொடி, கைகேசி, கையாந்தகரை, தேகராசம் என்ற பல பெயர்களைக் கொண்ட கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி என இரண்டு வகைப்படும். தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகள் அதிகம் உள்ள கரிசலாங்கண்ணியை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மஞ்சள்காமாலையில் தொடங்கி தலைப்பொடுகு, முடி உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு நோய், பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கும் வல்லமை படைத்தது கரிசலாங்கண்ணி. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உள்ளவர்கள் 30 மி.லி கரிசலாங்கண்ணி இலைச்சாற்றை தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக, கோடை காலங்களில் இந்தச் சிகிச்சை பலனளிக்கும். குழந்தைகளுக்கு வரக்கூடிய சளித்தொல்லைக்கு இரண்டு சொட்டு கரிசாலைச்சாற்றுடன் 8 சொட்டு தேன் கலந்து குடிக்கக் கொடுத்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

சிறுகீரை
முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற கீரைகளின் இனத்தைச் சேர்ந்த சிறிய வகையே சிறுகீரை. இது, இந்தியா முழுவதும் தோட்டங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் பயிர் செய்யப்படும் கீரை வகைகளுள் ஒன்று. சாதாரணமாக வட இந்தியாவின் மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் இந்தக் கீரை சுமார் 20 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. ஆனாலும் 10 செ.மீ உயரம் வளர்ந்ததுமே இதைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். இது பெயரில்தான் சிறுகீரையே தவிர இதில் பலன்கள் அதிகம்.

சிறுகீரையைக் கடைந்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். சீரகம், மிளகு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு சேர்த்து வேக வைத்து சூப்பாகவும் அருந்தலாம். இது உடலுக்கு அழகும் வனப்பும் தரக்கூடியது. அத்துடன் வாத நோயை விரட்டும் வல்லமை படைத்த இந்தக்கீரை கல்லீரலுக்கு நன்மை செய்யக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுகீரையை உணவில் சேர்த்து வந்தால் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும். துவரம்பருப்பு, வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

பசலைக்கீரை
பச்சைப் பசலை, சிவப்புத் தண்டு பசலை, கத்திப் பசலை எனப் பல வகைகள் உள்ளன. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எனப் பல்வேறு சத்துகள் நிறைந்த பசலைக்கீரை அளவுக்கு உடலுக்கு நன்மை தரும் காய்கறிகள் வேறு எதுவும் இல்லை. குறிப்பாக இதில் உள்ள ஃபோலோசின் நோய்களைத் தடுப்பதற்கு முக்கியமானது என்பதால் அது இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதேநேரத்தில் இதயநோய் வந்தவர்கள் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது.

ரத்தசோகை நோயாளிகளுக்குப் பசலைக்கீரை மிகுந்த நன்மையை அள்ளித்தருகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுக்கு உதவக்கூடிய ஹீமோகுளோபின் இதில் அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, பி, சி சத்துகளும், பொட்டாசியம் உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. வைட்டமின் ஏ பார்வைக்கோளாறைக் குணப்படுத்துவதோடு ரத்தத்தை விருத்தி செய்யும். மேலும் இதிலுள்ள இரும்புச்சத்து மிக எளிதாக செரிமானமாகி உடம்பில் ஒட்டிக்கொள்ளும். தலைவலி வந்தவர்கள் பசலைக்கீரையைத் தீயில் வாட்டி தலையில் பற்று போட்டால் எளிதாகக் குணமாகும்.

புளிச்சக்கீரை
புளிச்சக்கீரை...  இது ஆந்திரா பகுதியில் ‘கோங்குரா’ என்ற பெயரில் பிரசித்தி பெற்ற ஒன்று. தாதுப்பொருள்களான இரும்புச் சத்துகளும், சுண்ணாம்புச் சத்துகளும் நிறைந்த இந்தப் புளிச்சக்கீரையைச் சாப்பிடுவதால் ரத்தம் தூய்மை பெறுவதோடு மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. உடல் குளிர்ச்சி பெறுவதோடு மந்தம் நீங்கி விந்து கெட்டிப்படும். பொதுவாக புளிச்சக்கீரையுடன்  மிளகாய் சேர்த்து வேக வைத்து உப்புச் சேர்த்துத் துவையலாகச் செய்து சாப்பிடுவார்கள்.

வாத நோய் உள்ளவர்கள் இரண்டு மூன்று நாள்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் அவர்களுக்கு வாத நோய் தணிந்துவிடும். இதேபோல், மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறவர்கள் இரண்டு, மூன்று  நாள்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரை சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும்.


முடக்கத்தான்
Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயரைக்கொண்ட முடக்கத்தான் கீரையை முடக்கு + அறுத்தான் = முடக்கத்தான் என்பார்கள். முடக்கத்தான் என்பது ஒரு கீரையா? என்று பலர் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த கீரையின் மகிமை பலருக்குத் தெரியாது. பொதுவாக மழைநேரங்களில் சாதாரணமாக வேலியோரமாகப் படர்ந்து கிடக்கும் இந்த முடக்கத்தான். வயல்வெளிகளில் எல்லாச் சூழலிலும் வளரக்கூடியது இது.

மூட்டுகளை முடக்கி வைக்கும் இது மூட்டுவாதத்தை முடக்கி வைக்கக்கூடிய வல்லமை உண்டு என்பதால் இதை முடக்கத்தான், மொடக்கத்தான் என்று அழைக்கிறார்கள். முடக்கத்தான் ரசம் அல்லது சூப் வைத்துக் குடிக்கலாம். பொதுவாக தோசை மாவுடன் இதன் இலையை அரைத்து ஊற்றிச் சாப்பிட்டு வந்தால் வாத நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


மணத்தக்காளி
மணத்தக்காளி அல்லது மணித்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகுத் தக்காளி அல்லது மணல் தக்காளி என்ற வேறு பெயர்களைக் கொண்டது. இந்தக் கீரையைச் சாப்பிடுவதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்புள்ள நோய்களுக்கு உகந்த ஒரு சிறப்பான மருத்துவக் கீரையாகும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல்புண் என்று அவதிப்படும் பலரை பார்த்திருப்போம். இவற்றுக்கெல்லாம் எவ்வளவோ எளிய சிகிச்சைகள் உள்ளன. மணத்தக்காளிக் கீரையை வெறுமனே மென்று சாப்பிட்டாலும் இந்தப் பிரச்னைகள் குணமாகும். இதைச் சமைத்தும் சாப்பிடலாம். மணத்தக்காளியின் பழத்தையும் சாப்பிடலாம். கொஞ்சம் இனிப்புச்சுவையுடன் இருக்கும். திராட்சைப்பழத்தை வெறுமனே சாப்பிடலாம். இல்லையென்றால் ஜூஸாக்கியும் சாப்பிடலாம். வெள்ளை நிறத்தில் உள்ள கல்யாணப் பூசணிக்காயை ஜூஸாக்கி அதனுடன் வெல்லம் கொஞ்சம் ஏலக்காய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

முருங்கை
முருங்கை மரத்தில் (Moringa Oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப்பூ என அனைத்துமே மருத்துவக்குணம் நிறைந்த உணவே. இதில் உள்ள Muringa என்ற பெயர் முருங்கை என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. முருங்கையில் தாது உப்புகளும், சுண்ணாம்பு, இரும்பு சத்துகளும், வைட்டமின் ஏ, சி போன்றவையும் உள்ளன.

முருங்கையில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் சொறி சிரங்கு போன்றவை குணமாகும். வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால் கண் பார்வைக் கோளாறு நீங்கும். தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. முருங்கையை அரைத்து சுண்ணாம்பு சேர்த்துக் குழைத்து தொண்டையில் பற்று போட்டு வந்தால் தொண்டைக்கட்டு நீங்கும். முருங்கையில் நெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு