Published:Updated:

வாந்தி முதல் காலரா வரை... ஆற்றல் இழப்பை ஈடுகட்டும் குளூக்கோஸ்!

வாந்தி முதல் காலரா வரை... ஆற்றல் இழப்பை ஈடுகட்டும்  குளூக்கோஸ்!
வாந்தி முதல் காலரா வரை... ஆற்றல் இழப்பை ஈடுகட்டும் குளூக்கோஸ்!

வாந்தி முதல் காலரா வரை... ஆற்றல் இழப்பை ஈடுகட்டும் குளூக்கோஸ்!

சி மருந்து ஒன்றின் பெயரை, சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள்கூட அறிந்துவைத்திருக்கும் மருத்துவப் பெயர் `குளூக்கோஸ்.’ பாமரர்களுக்குக்கூட இது வெகு பரிச்சயம். `வாந்தி மயக்கம்னு போனேன்... ரெண்டு பாட்டில் குளூக்கோஸ் ஏத்தணும்னுட்டாரு டாக்டரு’ என்கிற வாசகத்தைச் சர்வ சாதாரணமாக நாம் கேட்டிருப்போம். சிலருக்குக் குளூக்கோஸை ஏற்றியவுடனேயே உடலில் தெம்பு கூடிவிட்டதாக ஓர் உணர்வு வரும்! இதை ஒரு சத்து டானிக் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களும் உண்டு. நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் சரிவிகித சத்தான உணவுகளை உண்பதால் மட்டும்தான் வருமே தவிர, ஒரு பாட்டில் குளூக்கோஸ் ஏற்றுவதால் வருவதில்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது நல்லது. சரி, குளூக்கோஸை யார் கண்டுபிடித்தார்கள், அதன் பயன்கள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாமா?

1747-ம் ஆண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்டிரியாஸ் மார்காஃப் (Andreas Sigismund Marggraf) என்பவர்தான் முதன்முதலில் உலர் திராட்சையில் இருந்து குளூக்கோஸைத் தனிமைப்படுத்தி அறிமுகப்படுத்தினார். 1838-ம் ஆண்டு, `குளுக்கோஸ்’ என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. குளுக்கோஸ் தொடர்பாக பல ஆய்வுகள் செய்து அதன் தனித்தன்மையை விரிவாக உலகுக்கு எடுத்துச் சொன்னவர், ஜெர்மனியைச் சேர்ந்த எமில் ஃபிஷர் (Hermann Emil Fischer).

குளூக்கோஸை (C6H12O6) என்பது, ஆறு கரிம அணுக்களும், ஆறு ஆக்சிஜன் அணுக்களும், 12 ஹைட்ரஜன் அணுக்களும் சேர்ந்திருக்கும் ஓர் எளிய சர்க்கரை என்று சொல்லலாம்.. குளுக்கோஸ் உயிரியலில் முக்கியமான ஓர் அங்கம். உயிரணுக்கள், இதை ஆற்றல் தரும் பொருளாகவும் வளர் சிதை மாற்றத்துக்கான பொருளாகவும் பயன்படுத்துகின்றன. பாக்டீரியா முதல் மனிதர்கள் வரை அநேக உயிரினங்களில் இது சக்திக்கான ஆதாரமாக இருக்கிறது. இன்சுலின் வேதிவினையும் மற்ற இயங்குமுறைகளும்தான் ரத்தத்தில் குளூக்கோஸின் செறிவைக் கட்டுப்படுத்துகின்றன. சர்க்கரைநோயை அறிய ரத்தத்தில் இருக்கும் குளூக்கோஸின் அளவுதான் முக்கியமாகக் கணக்கிடப்படுகிறது. நம் உடலில் குளுக்கோஸ் குறைவாக இருந்தால், மூளை செயல்திறன்கூட பாதிக்கப்படலாம்.

நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது என்பது அனைவருக்கும் தெரிந்தது. சராசரியாக 65 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் 40 லிட்டர் தண்ணீர் இருக்கும். இதில் 28 லிட்டர் நீர், உடலின் பல்வேறு உறுப்புகளில் இருக்கும் பல ஆயிரம் செல்களுக்குள் இருக்கும். செல்லுக்குள் இருக்கும் நீர் (Intracellular Water) எனப்படும். 3 லிட்டர் நீர், ரத்தத்திலுள்ள திரவ நீரான பிளாஸ்மாவில் இருக்கும். மீதமுள்ள 9 லிட்டர் நீர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இணைப்பு பாகங்களில் இருக்கும். இவற்றின் அளவுகள் குறைகிறபோதுதான் நமக்கு குளூக்கோஸ் ஏற்றவேண்டியிருக்கிறது. முக்கியமாக, நம் உடம்பிலிருந்து நீர் வெளியேறிவிட்டால் அந்த நீரை உடனே குளூக்கோஸ் மூலம் ஏற்றிவிடுவது மிக மிக முக்கியம். அப்படி ஏற்றாவிட்டால், உடம்பின் நீர் முழுவதும் வற்றி (Dehydration) கை, கால்கள் குளிர்ந்து, நரம்புத் துடிப்பு இறங்கி, ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, மயக்கநிலைக்கு போய்விடுவார்கள். இது ஓர் அபாயகரமான சூழ்நிலை. அந்த நிலையில் உடனே குளூக்கோஸ் ஏற்றவில்லையென்றால், உயிருக்கே ஆபத்தாகிவிடும். சாதாரணமாக இப்படிப்பட்ட நிலை, பேதி, வாந்தி, காலரா போன்ற நோய்கள் ஏற்படும்போது உண்டாகலாம். இப்போது இது, பாக்கெட்டுகளில் ORS பவுடர்கள் எனக் கடைகளிலேயே கிடைக்கிறது. வாந்தி, பேதி, காலரா போன்றவை ஏற்படும்போது, ஆரம்பநிலையிலேயே சுத்தமான நீரில் அந்தப் பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீருடன் கலந்து இதைக் கொடுத்தால், குளூக்கோஸ் ஏற்றவேண்டிய நிலையைத் தவிர்க்கலாம்.

நாம் சாப்பிடும் உணவு, நமது உணவுக்குழாயில் குளூக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. இது, ரத்தத்தின் மூலமாக நமது உடம்பின் ஒவ்வொரு திசுக்களுக்கும் சென்று அடைகிறது. அதன் மூலம் நமக்கு சக்தி கிடைக்கிறது. இந்தச் சக்தி உடலின் எந்தப் பகுதிக்குத் தேவையோ, அங்கு ரத்தத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நம்மிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, அதைச் சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளூக்கோஸ் எந்த அளவு உள்ளது எனக் கண்டறியலாம். சோதனையின் மூலம் சர்க்கரைநோய், உடலின் இன்சுலின் செயல்பாட்டைத் தடுக்கும் திறன் (Insulin resistance) போன்றவறை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை அறிந்துகொள்ள `குளுக்கோமீட்டர்’ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. மருந்துக் கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கும் ஒன்றாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குளூக்கோஸை நாம் பயன்படுத்தக் கூடாது.

அடுத்த கட்டுரைக்கு