Published:Updated:

இந்தியப் பெண்கள் இருவரில் ஒருவருக்கு ரத்தச்சோகை... அறிகுறிகள், தவிர்க்கும் வழிமுறைகள்! #AnemiaAlert

இந்தியப் பெண்கள் இருவரில் ஒருவருக்கு ரத்தச்சோகை... அறிகுறிகள், தவிர்க்கும் வழிமுறைகள்! #AnemiaAlert
News
இந்தியப் பெண்கள் இருவரில் ஒருவருக்கு ரத்தச்சோகை... அறிகுறிகள், தவிர்க்கும் வழிமுறைகள்! #AnemiaAlert

இந்தியப் பெண்கள் இருவரில் ஒருவருக்கு ரத்தச்சோகை... அறிகுறிகள், தவிர்க்கும் வழிமுறைகள்! #AnemiaAlert

னைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகிவரும் காலம் இது. அதே நேரத்தில் அவர்களைத் துரத்தும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருவதுதான் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் ரத்தச்சோகை நோயின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது.

2016-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு ரத்தச்சோகை இருப்பது தெரியவந்தது. நாடு முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட 2,18,200 மாதிரித் தரவுகளை ஆய்வுசெய்ததில், இந்தியப் பெண்களிடையே மிகவும் சர்வ சாதாரணமாக நிலவும் முக்கிய ஆரோக்கியக் குறைபாடாக ரத்தச்சோகை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு ரத்தச்சோகையின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தென்படுகின்றன. எனினும், 90.4 சதவிகிதம் பேருக்கு மிதமான ரத்தச்சோகையும் 9 சதவிகிதம் பேருக்குத் தீவிரமான ரத்தச்சோகையும் இருப்பதாக சோதனையின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கான இரண்டு முக்கியக் காரணங்கள், மாதவிலக்கு மற்றும் மகப்பேறு. இக்காலக் கட்டங்களில்தான் ரத்தச் சிவப்பு அணுக்கள் பெண்களுக்குக் குறையத் தொடங்கும். ரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவதால் பீட்டா தலசீமியா, பெருஞ்செல்சோகை போன்ற நோய்களும் ஏற்படும்.

இந்த ஆய்வில், 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்குத் தீவிரமான ரத்தச்சோகை இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, 8.4 சதவிகிதம் பேருக்கு பீட்டா தலசீமியா இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதற்குக் காரணம், மார்பகக் கோளாறுகளால் ஏற்படும் ரத்தச்சோகை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி, இந்தியப் பெண்களை இடைவிடாது துரத்தும் இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள், வகைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், தடுப்புமுறைகள் பற்றி விரிவாக விளக்குகிறார், பொதுநல மருத்துவர் அனன்யா...

ஏன், எப்படி?

ரத்தச்சோகை, ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் உருவாகக்கூடியது. இந்தச் சிவப்பணுக்கள்தான் ஆக்சிஜனை நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகளுக்கு எடுத்துச்செல்லும் வேலையைச்செய்கிறது. சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும்போது, உடலின் உள்ளுறுப்புகளுக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்படுகிறது.

காரணம்

இது உருவாகக் காரணம், ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதுதான். சோர்வு, வாழ்க்கை முறை மாற்றமும் காரணமாக இருக்கிறது.

அறிகுறிகள்...

* உடல் பலவீனம்

* சோர்வு

* மூச்சுத்திணறல்

* கை, கால்கள் குளிர்ந்து போதல்

* சீரற்ற இதயத்துடிப்பு

* உள் ரத்தக் கசிவு

* நகங்கள் பிளவுறுதல்

* சருமம் வெளுத்துப்போதல்.

அதிகம் பாதிக்கப்படுபவர்கள்...

* மகப்பேறு அடையக்கூடிய வயதை எட்டிய பெண்கள்

* கர்ப்பிணிகள்

* சத்தான உணவைச் சாப்பிடாதவர்கள்

* அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள்

* கைக்குழந்தைகள்

* குறைமாதத்தில் பிறந்தவர்கள்

* வளர்ச்சியில் குறைபாடு உடையவர்கள்

* அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள்.

வகைகள்

* ரத்த இழப்புக் காரணமாக வருவது: வயிறு, குடல் சம்பந்தப்பட்டப் புண்கள், மூலம், இரைப்பை அழற்சி, வயிற்றில் திசுக்கள் பாதிப்பு, புற்றுநோய், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் குழந்தைப் பிறப்பில் பிரச்னை போன்றவை ஏற்படும்.

* குறைந்த அல்லது தவறான ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியால் வருவது: இரும்புச்சத்துக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, எலும்பு மஜ்ஜை மற்றும் செல்களில் பிரச்னை போன்றவை ஏற்படும்.

* மற்ற உடல்நிலை காரணங்களால் வருவது: முற்றிய, தீவிர சிறுநீரக நோய், தைராய்டு சுரப்புக் குறைவு, புற்றுநோய், நோய்த்தொற்று, தோல் முடிச்சு நோய் (Lupus), சர்க்கரைநோய் மற்றும் மூட்டழற்சி நோய்கள் போன்றவை ஏற்படும்.

* ரத்தச் சிவப்பணுக்கள் அழிக்கப்படுவதால் ஏற்படுவது: பரம்பரை நோய்களான அரிவாள் அணு ரத்தச்சோகை, தலசீமியா, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் காரணமாக ஏற்படும் நச்சுப் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சத்துக் குறைவு, கர்ப்பிணியின் கருப்பையிலுள்ள கரு பாதிப்பு, பிறவி சிவப்பணு அழிவுச்சோகை நோய், ரத்த உறைதல் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை உண்டாகும்.

பெண்களின் கவனத்துக்கு...

* வேலைக்குப் போகும் பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ள பெண்களாக இருந்தாலும் சரி, சிறு உடல் உபாதை என்றாலும், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

* பெரும்பாலான ரத்தச்சோகைக்குக் காரணம், 'இது ரத்தச்சோகை' என்று அறியாமல் இருப்பதே.

* உடலில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும், இது இயல்பானது என்று எடுத்துக்கொள்ளாதீர்கள்.

* உடல்நிலை சரியில்லாது போவதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், நீண்டகாலமாக ஒரே அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்துக் குறைபாடு சோதனை செய்துகொள்வது நல்லது.

ரத்தப் பரிசோதனையின்போது ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை மற்றும் சிவப்பணு நிறப்பொருள், அணுக்கூறுகள் போன்றவற்றின் தகவல்கள் தெரிவிக்கப்படும். ஆயினும், ஒரு முழுமையான பரிசோதனையின் மூலம் ரத்தச்சோகைக்கான காரணமும் சேர்த்து கண்டறியப்படும்.

தவிர்க்க... தடுக்க...

* ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிகவும் அவசியம்.

* ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

* கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* இஞ்சி, தேனுடன் சிறிதளவு பேரீச்சம்பழம் சேர்த்து தினசரி சாப்பிட்டுவர இதைத் தடுக்கலாம்.

* உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை போன்றவற்றை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்துச் சாறாகக் குடிக்கலாம். இது உடல் வலுப்பெற உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

* தினசரி இரண்டு நெல்லிக்காய் மற்றும் 100 கிராம் அளவு கேரட்டை பச்சையாகச் சாப்பிட்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

* தினசரி ஒரு வகையான பழம் என்னும் வீதம் பழமாகவோ பழச் சாறாகவோ குடிக்கலாம்.