Published:Updated:

சேவைக்கு ஒரு சல்யூட்!

ரத்ததான முகாமில் நெகிழ்ந்த வாசகர்

சேவைக்கு ஒரு சல்யூட்!

ரத்ததான முகாமில் நெகிழ்ந்த வாசகர்

Published:Updated:

பொதுவாக கோடையில்தான், மருத்துவமனைகளில் ரத்தத்தின் தட்டுப்பாடு அதிகம் இருக்கும். தானம் கொடுக்க முன்வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். இதை மனதில் வைத்துதான், உயிர் காக்கும் பயணத்தைத் தொடங்கியது டாக்டர் விகடன்.

சேவைக்கு ஒரு சல்யூட்!

மே 18-ம் தேதி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரத்த தான முகாம் மற்றும் உடல் உறுப்பு, கண் தான முகாம் நடத்தப்பட்டது. காலையில் முகாம் தொடங்கியவுடனே ஒருவர் பின் ஒருவராக வந்து ரத்ததானம் செய்தனர். பலர் உடல் உறுப்புதானம் செய்தனர். முகாமில், சங்கர நேத்ராலயாவில் இருந்து கண் தானத்துக்கும், அரசு கேடவர் டிரான்ஸ்பிளான்ட் புரோக்ராம் சார்பில் உறுப்பு தானம் செய்ய விரும்புவர்கள் பெயர்கள் பதிவுசெய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவேகானந்தா தன்னார்வக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள், ரத்த தானம் செய்ய வந்தவர்களை அனுசரனையோடு அணுகி, வழிநடத்தியது பாராட்டுக்குரியது.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து வந்திருந்த மருத்துவர் குழுவினர் பொது மக்களிடமிருந்து ரத்தத்தைத் தானமாகப் பெற்றனர்.

, 'உடல் உறுப்பு தானம் செய்துகொள்கிறோம்’ என்று வந்தவர்களுக்கு, அங்கேயே பதிவுசெய்யப்பட்டு, 'டோனர்’ கார்டும் வழங்கப்பட்டது.

சேவைக்கு ஒரு சல்யூட்!

81 பேர் தங்கள் உடல் உறுப்புக்களைத் தானம் செய்துகொள்ள பெயரைப் பதிவு செய்தனர். 141 பேர் தங்கள் கண் தானம் செய்வதாக பதிவுசெய்தனர். இவர்களுக்கு, மருத்துவமனையில் இருந்து நேரடியாக தபால் மூலம் 'கார்டு’ அனுப்பிவைக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

முகாமுக்கு மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த கே.ரவிச்சந்திரன், 'நான் ஒரு தமிழாசியர், ரத்த தான முகாம், உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தைப் பற்றி என் மனைவி, குழந்தைகளிடம் பேசினேன். அவர்களும் ஆர்வத்துடன் வந்தனர். அதனால் குடும்பத்துடன் வந்து கண் தானம், உடல் உறுப்புதானத்துக்குப் பதிவு செய்துகொண்டோம். ஒவ்வோர் ஊரிலும் இதுபோன்ற முகாம்களை நடத்த வேண்டும். உடல் உறுப்பு தானத்தின் அவசியம் பற்றி தொடர்ந்து வெளியிடுங்கள். டாக்டர் விகடன் சேவைக்கு ஒரு சல்யூட்!' என்றார் உற்சாகமாக!

- டாக்டர் விகடன் டீம்

 ஜூன் 14 உலக ரத்த தான விழிப்புஉணர்வு தினம்

சேவைக்கு ஒரு சல்யூட்!

'அன்பே சிவம்’ படத்தில் நெகிழ்ச்சியான ஒரு காட்சி. ஒரு கோர ரயில் விபத்து நடந்த இடத்தில், 'ஏபி நெகட்டிவ் ரத்தம் அவசரமாக தேவைப்படுது... யாராவது தானம் செய்யத் தயாரா?'' என்று ஒரு டாக்டர் கேட்க, தன் அருகில் நிற்கும் மாதவனைக் காட்டி, 'இவருக்கு, ஏபி நெகட்டிவ் பிளட் குரூப் தான்...  இவர் கொடுப்பார்’ என்று கமல் சொல்வார். ஆனால், 'எனக்கு ரத்தம் கொடுக்கப் பிடிக்கலை... நான் வேணும்னா வேறு வேலை செய்றேன்' என்பார் மாதவன். அந்த நேரம், காயம் அடைந்தவர்களுக்கு உதவ வந்திருக்கும் சிஸ்டர் வென்னாசா, ரத்தம் கொடுக்க மறுக்கும் மாதவனை விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவனிடம் கூட்டிச்செல்வார். 'என்னை எமோஷனல் பிளாக்மெயில் செய்யாதீங்க’ என்று முரண்டுபிடித்தபடி செல்லும் மாதவன், அந்த சிறுவனைப் பார்த்த நொடியில் மனம் மாறுவார்.

படத்தைப் பார்த்தே பதறும் நாம், நிஜத்தில் நடக்கும் விபத்துக்களைப் பார்த்தால் விக்கித்துப் போய்விடுவோம். அந்த சிறுவனைப்போல நாள்தோறும் ஆயிரக் கணக்கானவர்கள் ரத்தத்துக்காகக் காத்திருக்கின்றனர். என்னதான் விழிப்புஉணர்வு இருந்தும் பலருக்கும் ரத்தம் கொடுப்பதில் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு நாளும், 'ரத்தம் தேவை’ என்று செல்போனில் வரும் எஸ்.எம்.எஸ்-ஐ பார்வர்ட் செய்வதுடன் நம் கடமை முடிந்துவிடக் கூடாது. அடுத்தவர்களுக்காக சில துளி கண்ணீர் சிந்துவதைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்காக பல துளிகள் ரத்தத்தைத் தானமாகக் கொடுப்பதுதான், உயிரையே மீட்டுத்தரும் உன்னத சேவை.

ஜூன் 14 உலக ரத்த தான விழிப்புஉணர்வு தினம். ரத்த தானம் செய்வது பற்றி சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவுத் தலைவர் டாக்டர் ஜோத்சனா கோடாதியிடம் கேட்டோம்:

'உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை நம் உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லவும், கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது ரத்தம். இந்த ரத்தம் தேவைப்படுவோருக்கு வழங்கக்கூடிய ஒரு சிறந்த பரிசுப் பொருள். நாம் ஒவ்வொரு முறை தானமாகக் கொடுக்கும் ரத்தம் மூன்று உயிர்களைக் காக்கும்.

சேவைக்கு ஒரு சல்யூட்!

பொதுவாக பெரிய அறுவைசிகிச்சை செய்யும்போதும், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த இழப்பு ஏற்பட்டவர்கள், தீக்காயம் அடைந்தவர்கள், ரத்தப் புற்றுநோயாளிகளுக்கு என, ரத்த தானம் உயிர் காக்கும் ஒன்று. பிரசவத்தின்போது ரத்த இழப்பு ஏற்பட்டு தாயும் சேயும் இறக்கும் கொடுமை இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு தேவையான ரத்தம் கிடைப்பதன் மூலம் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.

இதுபற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு பிரசவ காலத்தில் ரத்த இழப்பால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கத்தில் ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது' என்றவர், யார் எல்லாம் ரத்தம் கொடுக்கலாம், யார் கொடுக்கக்கூடாது என்பதையும் விவரித்தார்.

'18 வயது முதல் 65 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம்.

தானம் கொடுப்பவர், எடை 45 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 100 மி.லி.க்கு 12.5 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ரத்த அழுத்தம் இயல்பான நிலையில் இருக்க வேண்டும். அதாவது சிஸ்டாலிக் என்பது 160/100 என்றும் டயாசிஸ்டாலிக் என்பது 90/60-க்குள் இருக்க வேண்டும்.

ரத்தம் தானமாகப் பெறப்படுவதற்கு முன், இவை அனைத்தையும் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளப்படும். மேலும் ரத்த வகை, ஆர்.எச். பிரிவு போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்ட பின்னரே ரத்தம் எடுக்கப்படும்.

சேவைக்கு ஒரு சல்யூட்!

18 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் புகட்டும் பெண்கள், மாதவிலக்கு நேரத்தில் உள்ள பெண்கள், பெரிய அறுவைசிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதங்களுக்கு உள்ளாகவும், சிறிய அறுவைசிகிச்சை செய்தவர்கள் மூன்று மாதங்களுக்கு உள்ளாகவும் ரத்த தானம் செய்யக் கூடாது. மேலும், மலேரியா காய்ச்சல் வந்தவர்கள் ஆறு மாதம் வரையிலும், மஞ்சள் காமாலை உள்ளவர்கள் ஒரு வருடம் வரையிலும், காசநோய் உள்ளிட்ட வேறு எந்த ஒரு நோய்க்கு சிகிச்சை எடுத்து வருபவர்களும், தடுப்பூசி ஏதேனும் எடுத்துக் கொண்டவர்கள், ஸ்டீராய்டு - ஹார்மோன் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், பால்வினை எச்.ஐ.வி. நோய் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது. மேலும், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்களும் ரத்த தானம் செய்யக் கூடாது. ஒரு முறை ரத்த தானம் செய்தவர்கள் மூன்று மாதங்கள் கழித்தே மீண்டும் ரத்த தானம் செய்யலாம்.

சினிமாவில் காட்டுவதுபோல, தானமாகப் பெறப்படும் ரத்தம் அப்படியே மற்றவர்களுக்கு ஏற்றப்படுவது இல்லை. ரத்தத்தின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய்கள் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதித்து உறுதிப்படுத்திய பிறகே பயன்படுத்தப்படும். ஒருவேளை பாதிப்பு இருப்பது தெரியவந்தால், அதை அப்புறப்படுத்திவிடுவோம். தானமாக வழங்கியவர் விருப்பத்தின்பேரில் அவருக்கு அதுபற்றிய தகவலும் தெரியப்படுத்தப்படும்.

ரத்தத்தை அரசு ரத்த வங்கிகள், அரசு அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகளில் மட்டுமே தானம் செய்ய வேண்டும். அரசு ரத்த வங்கி நடத்தும் அல்லது அரசின் ஆர்.பி.டி.சி. அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கி நடத்தும் ரத்த தான முகாமிலும் கலந்துகொண்டு ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன என்று ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. இவை அனைத்தையும் காட்டிலும் ரத்த தானம் செய்ததின் மூலம் மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்றிய சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்' என்றார் டாக்டர் ஜோத்சனா.

- பா.பிரவீன் குமார்