Published:Updated:

மனமே நலமா? - 26

காதலில் விழுந்தேன்!

மனமே நலமா? - 26

காதலில் விழுந்தேன்!

Published:Updated:

டாட்டர் கார்த்திகேயன், மனநல மருத்துவர், மதுரை

ரண்யாவுக்கு 18 வயது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். பொறியியல் படிப்பு என்பதால், எப்போதும் புத்தகம், கம்ப்யூட்டர் என்று இருப்பார். 'எப்பப் பார்த்தாலும் படிப்பு படிப்புன்னு இருக்காளே...' என்று பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்க, சரண்யாவோ படிப்பைத் தவிர்த்து, வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாவிலேயே நீண்ட நேரம் மூழ்கிக்கிடப்பார். அதன் மூலமாகத்தான் சரண்யாவுக்கு ஷியாமின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பவர்கள் என்பதுதான் இந்த அறிமுகத்துக்குக் காரணம். ஷியாம், அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். இருவரும் வெவ்வேறு துறை, வெவ்வேறு ஆண்டு மாணவர்கள் என்றாலும், சோஷியல் மீடியா இவர்கள் இருவரையும் ஒன்றுசேர்த்தது. ஷியாமின் அன்பான பேச்சு, அனுசரணையான கவனிப்பில் உருகினார் சரண்யா. சோஷியல் மீடியாவைத் தாண்டி கல்லூரியில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் நட்பு நாளடைவில் காதலானது.

மனமே நலமா? - 26

ப்ளஸ் டூ-வில் 1100-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற சரண்யா, முதன்முறையாக செமஸ்டர் தேர்வில் அரியர்ஸ் வைத்தார். தேர்ச்சி பெற்ற பாடங்களிலும் சொற்ப மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சரண்யாவின் அப்பா, மகளைப் பற்றி விசாரிக்க, சரண்யாவின் காதல் விவகாரம் வெளியே தெரிந்தது. 'படிக்கிற வயசுல என்ன காதல்?' என்று சரண்யாவுக்கு திட்டும் அடியும் கிடைத்தன. 'காதலிக்கிற வேலையை விட்டுட்டு, ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு' என்று அட்வைஸ் செய்தனர். ஆனால் சரண்யாவோ ஷியாமை மறப்பதாக இல்லை. சாப்பிடாமல் பட்டினி இருப்பதும், கையைக் கிழித்துக்கொள்வதுமாக ரொம்பவே வாழ்க்கையை வெறுத்த நிலையில் இருந்தார். சரண்யாவின் செய்கையைப் பார்த்து சற்று மனம் இறங்கிய அவருடைய அப்பா, ஷியாமுக்கே திருமணம் செய்துவைப்பதாகக் கூறினார்.

ஷியாமின் வீட்டிலும் இந்த விவகாரம் வெடித்தது. இவர்கள் திருமணத்தை ஷியாமின் பெற்றோர் ஏற்கவில்லை. 'இரண்டு பேருக்கும் 18 - 19 வயசுதான் ஆகுது. இதுக்குள்ள காதல், கல்யாணம் எல்லாம் எப்படி ஏத்துக்க முடியும்? படிக்கிற வயது... முதல்ல ரெண்டு பேரும் நல்லபடியாப் படிச்சு ஒரு வேலையில் சேரட்டும். உங்க பொண்ணையும் நல்லாப் படிக்கவைங்க... கல்யாணம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்' என்றனர் ஷியாமின் பெற்றோர். ஆனால், இவை எதையும் ஏற்றுக்கொள்ள சரண்யா தயாராக இல்லை. இரு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் யாரிடமும் பேசுவது இல்லை. பேசினால் எரிந்து எரிந்து விழுந்தார். எப்போதும் ஒருவித பயம், பதற்றத்திலேயே இருந்ததுடன், தூக்கமின்றித் தவித்தார் சரண்யா.

ஷியாமும் குடிப்பழக்கம், பெண்களுடன் சகவாசம் என்று மாறிவிட்டான். சரண்யாவுக்கு கால்கட்டு போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்த சரண்யாவின் அப்பா, தீவிரமாக மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்தார். இந்த நிலையில், ஷியாமின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்திருக்கிறார் சரண்யாவின் அப்பா. அதில், மது அருந்துவது போலவும், பல பெண்களுடன் இருப்பதுபோலவும் நிறையப் புகைப்படங்கள் இருந்திருக்கின்றன. உடனே, அந்தப் படங்கள் அனைத்தையும் சரண்யாவுக்குக் காண்பித்து, 'பார்... நீ காதலித்தவனின் லட்சணம்'' என்று கூறி, 'நான் பார்க்கும் பையனைத்தான் நீ கல்யாணம் செய்துக்கணும்' என்று சொல்லி இருக்கிறார்.

காதலை இரு வீட்டாரும் ஏற்காதது, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்ப்பது, நாம் நம்பியவனே மோசமானவனாக மாறியது இவை அனைத்தும் மனதை அழுத்தும் பெரும் சோகங்கள் ஆகிப் போனதால், குழம்பிய மனநிலையில் இருந்த சரண்யா, தூக்க மாத்திரைகளை விழுங்கி, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். மயங்கிக்கிடந்த சரண்யாவை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று காப்பாற்றினர். உயிரைக் காப்பாற்றினாலும், சரண்யாவின் மனம் மட்டும் பழையவற்றையே நினைத்துக்கொண்டிருந்தது. எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலையில், சரண்யாவின் அம்மா எனக்கு போன் செய்தார். சரண்யாவின் அம்மாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிர மனப்பதற்ற நோய் இருந்தது. இதற்காக என்னிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டார். கணவருக்கு இடமாற்றம் கிடைத்ததால், சென்னையில் குடியேறிவிட்டார். இப்போது சரண்யா தற்கொலைக்கு முயன்றதாலும், என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாததாலும் என்னிடம் அழைத்து வந்தார்.

சரண்யாவைக் குழந்தைப் பருவத்தில் இருந்து பார்த்து வருகிறேன். நல்ல பெண். இப்படிக் காதலில் விழுந்து, பெற்றோரை எதிர்த்துத் தற்கொலை வரைக்கும் சென்றிருக்கிறாளே என்று அவளிடம் பேசினேன். மனதில் உள்ள குறைகளை எல்லாம் கொட்டினார்.

இளம் வயதில் காதல், பெற்றோரின் எதிர்ப்பு, அன்புக் காதலனின் ஒழுங்கீனம், படிப்பில் அரியர் வைத்தது, படிப்பைப் பாதியில் நிறுத்தியது, வேறொரு மாப்பிள்ளை பார்த்தது எனப் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான சரண்யா, எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாற்றத்துக்கும், பதற்றத்துக்கும் ஒருவித மன அழுத்தத்துக்கும் ஆளாகித் தவித்திருக்கிறார். விளைவு, வாழ்வதைவிட சாவதே மேல் என்று தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். ஒருமுறை தற்கொலை எண்ணம் ஏற்பட்டுவிட்டால், மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் மனதில் துளிர்விடும்.

சரண்யாவுக்கு உள்ள மன அழுத்தம், பதற்றம், பயத்தைப் போக்கவும், நிம்மதியாகத் தூங்குவதற்கும் மாத்திரைகள் பரிந்துரைத்து, ஒரு வாரம் கழித்து வரும்படி சொன்னேன். ஒரு வாரத்துக்குப் பிறகு பயம், பதற்றம் குறைந்த நிலையில் மீண்டும் வந்தார். அவருக்கு சோஷியல் மீடியாக்கள் மற்றும் காதல் பிரச்னையில் இருந்து மீண்டு வருவதற்கான கவுன்சலிங்

மனமே நலமா? - 26

அளிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இதில் இருந்து மீண்டார் சரண்யா.

'நான் படிக்கணும் டாக்டர், இந்தப் பிரச்னையால் எனக்குக் கல்யாணம் செய்துவைக்க நினைக்கிறாங்க... நீங்க சொன்னா அப்பா அம்மா கேட்பாங்க' என்றார். சரண்யாவின் பெற்றோருக்கும் கவுன்சலிங் அளித்தேன். சரண்யா தொடர்ந்து படிக்க அனுமதித்தனர்.

பிள்ளைகளிடம் காட்டும் அதீத சுதந்திரம்கூட சில சமயம் ஆபத்தாக முடிந்துவிடும். திடீரென்று, ஒருநாள் கண்காணித்து அடக்க முயல்கையில், பிரச்னை விபரீதமாகி வாழ்வையே இழக்க நேரிடலாம்.

பி.இ. முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்ற சரண்யா, ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். தற்போது சிவில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வில் வெற்றிபெற்ற அவர், மெயின் தேர்வுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திவருகிறார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சோஷியல் மீடியாவை முற்றிலுமாக ஒதுக்கிவிடவில்லை. சமூக விழிப்புஉணர்வு உள்ளிட்ட ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துகிறார் சரண்யா.