Published:Updated:

மருத்துவத்தின் மகத்தான புரட்சி பிளாஸ்டிக் சர்ஜரி! #WorldPlasticSurgeryDay

மருத்துவத்தின் மகத்தான புரட்சி பிளாஸ்டிக் சர்ஜரி! #WorldPlasticSurgeryDay
மருத்துவத்தின் மகத்தான புரட்சி பிளாஸ்டிக் சர்ஜரி! #WorldPlasticSurgeryDay

மனிதனின் உடலிலுள்ள நோய்களைக் கண்டறிந்து அதனை குணப்படுத்துவதே மருத்துவம். போதிதர்மர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில மருத்துவக் குறிப்புகள்கூட இன்றும் நமக்குக் கைகொடுத்து உதவுகின்றன. மருத்துவத்தில், எத்தனையோ பேர் என்னென்னவோ கண்டுபிடித்து மருத்துவத் துறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்; இன்னும் நிறையப் பேர் நகர்த்திச் செல்லக் காத்திருக்கிறார்கள். இன்று மருத்துவத்தில் எண்ணிலடங்காத புதுப்புது தொழில்நுட்பங்களும் சிகிச்சைகளும் நம்மை பிரமிக்கவைக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. அதிலும் குறிப்பாக, தன் உடலமைப்பையே தனக்குப் பிடித்ததுபோல மாற்றி அமைத்துக்கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரி இன்று அதிகமாகிவருகிறது. இந்த அறுவைசிகிச்சை பற்றியும் இதிலுள்ள தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாகச் சொல்கிறார் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் சசிகுமார் முத்து.

வரலாறு

மருத்துவத்தின் மிக முக்கிய பிரிவான அறுவைசிகிச்சை முறையில், உலகளவில் சாதித்த பெருமை சுஸ்ருதரையே சாரும். இவர் `சுஸ்ருதா சம்ஹிதா’ என்ற அற்புதமான மருத்துவ நூலை கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த மூல நூல் நமக்குக் கிடைக்கவில்லை. மூல நூலின் மறு பதிப்பாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிடைத்த நூலில் இருந்துதான் நாம் இன்று சுஸ்ருதரின் அருமை, பெருமைகளைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். இவரை `அறுவைசிகிச்சை மருத்துவத்தின் தந்தை’ (Father of Surgery)

 என இன்று உலக அறிஞர்கள் போற்றுகின்றனர். சுஸ்ருதர், பலவகை அறுவைசிகிச்சை முறைகளுக்குப் பிரபலமானவராகக் கருதப்பட்டாலும், இன்று நாம் அவரை அதிகமாக நினைவுகூர்வது அவர் செய்த பிளாஸ்டிக் சர்ஜரிக்குத்தான். இந்த முறையை முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஸ்ருதர்தான். அவர் செய்த அறுவைசிகிச்சை இன்று `RhinoPlasty’ என அழைக்கப்படுகிறது. இதில் ஒருவர் இழந்த மூக்கை மீண்டும் பெறலாம். அந்தக் காலத்தில் தவறு செய்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டதை வரலாறின் மூலம் நாம் அறிவோம். அப்படி வழங்கப்பட்ட கடும் தண்டனைகளில் ஒன்று, தவறு செய்தவரின் மூக்கை அறுப்பது. அப்போதெல்லாம், ஒருவரின் மூக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தால், அவருக்கு சமுதாயத்தில் நன்மதிப்புக் கிடைத்தது. அது, கௌரவத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இந்த நிலையில்தான், தவறு செய்து மூக்கறுப்பட்டவர்களைக் காப்பாற்ற சுஸ்ருதர் முன்வந்தார்.

ஒருவரின் அறுபட்ட மூக்கைச் சரிசெய்ய, மூக்கின் அளவு, உருவ அமைப்பு ஆகியவை கணக்கிடப்படும். அதே அளவிலும், உருவ அமைப்பிலுமான தோலை ஒருவரின் முன்னந்தலையில் (நெற்றியில்) வரைந்து, பின் அதை அப்படியே கீறி எடுப்பார்கள். அதைக்கொண்டு, அறுபட்ட மூக்கின் பகுதியை நிரப்பி தையல் போடுவார்கள். இந்த மாபெரும் மருத்துவ முறையை சுஸ்ருதர் கையாண்டார். அறுவைசிகிச்சை செய்யப்பட்ட புதிய மூக்கின் பகுதி ஒன்றுசேர சிறிது காலம் பிடிக்கும். நெற்றியில் தோல் எடுத்த பகுதி, இந்தக் காயம் ஆறுவதற்கு முன்பே வளர்ந்து மீண்டும் ஒட்டிக்கொள்ளும். எனவே, முன்னந்தலையில் எந்த நஷ்டமும் இல்லாமல் இழந்த மூக்கை ஒருவர் மீண்டும் பெறலாம். சுஸ்ருதரின் இந்த வெற்றிகரமான சிகிச்சை காரணமாக, அவர் `பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை’ என்றும் அழைக்கப்பட்டார்.

பிளாஸ்டிக் சர்ஜரி - பிரிவுகள்...

மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை (Reconstructive Surgery)

இந்த அறுவைசிகிச்சையில் தீக்காயங்களை சீரமைத்தல், உதட்டில் பிளவு போன்ற பிறப்பிலேயே இருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்தல் ஆகியவை அடங்கும்.

ஒப்பனை அறுவைசிகிச்சை (Cosmetic surgery)

இது, தன் உடலமைப்பை, தனக்குப் பிடித்ததுபோல் அமைத்துக்கொள்ளச் செய்யப்படும் அறுவைசிகிச்சை. இதில், மார்பகச் சீரமைப்பு, தலைமுடியைச் சீரமைத்தல், வயிறு, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள கொழுப்பை நீக்குதல், உடல் பாகங்களை மாற்றி அமைத்தல் ஆகியவை அடங்கும். இது, தங்கள் அழகுக்காகப் பலர் செய்துகொள்ளும் அறுவைசிகிச்சை.

கை அறுவைசிகிச்சை (Hand Surgery)

வெட்டுக்காயம், கை விரல்கள் வெட்டப்பட்டு தனியாக இருந்தால், அவற்றைச் சேர்த்து ஒட்டவைத்து, மீண்டும் பழையநிலைக்கு மாற உதவி செய்வது இந்த அறுவைசிகிச்சை.

அறுவைசிகிச்சைக்கு முன்னர்...

பொதுவாக, தீ விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சிகிச்சை செய்யலாம். பிறப்பிலேயே உடலில் மாற்றம் உள்ளவர்களுக்கும் அவர்களின் நலன் கருதி உடனடி சிகிச்சை செய்யலாம். ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு, முதலில் அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு, அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்... `இந்த சிகிச்சை மேற்கொண்டால், இப்படித்தான் இருக்கும்; இதை எல்லாம் பின்பற்ற வேண்டும்’ என அவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். அவர்கள் அதையெல்லாம் புரிந்துகொள்ள, குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்க வேண்டும். அதன் பிறகும், அவர்கள் இந்தச் சிகிச்சையை செய்துகொள்ள விரும்பினால், செய்து கொள்ளலாம். முதலில் அவர்களுக்கு இதைச் செய்துகொள்ள தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

தகுதி

மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள எந்தத் தகுதியும் தேவை இல்லை. காரணம், தீக்காயம், பிறப்பிலேயே மாற்றம் போன்றவை அவர்களின் நலன் கருதியும் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்தும் செய்யப்படுவது. ஆனால், ஒப்பனை அறுவை சிகிச்சை செய்துகொள்ள 18 வயது நிரம்பி இருப்பது நல்லது. அதேபோல், சர்க்கரை, தைராய்டு போன்ற பிரச்னைகள் இருந்தால், முதலில் அவற்றைச் சரியான அளக்குக் கொண்டு வந்து பிறகு, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சைக்கு பின்னர்...

சிகிச்சைக்குப் பின்னர் பல வாரங்களுக்கு மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். உணவு, சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். நல்ல தூக்கம் வேண்டும். சிகிச்சை முடிந்து, உடல் முழுமையாகக் குணமாக இரண்டு மாதங்கள் ஆகும். அதேபோல, சிகிச்சை முடிந்த பிறகு, தழும்புகள் நிச்சயம் இருக்கும். ஆனால், அது வெளியே தெரியாமல் அமையும் வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்தச் சிகிச்சையைப் பொறுத்தவரை, நம் உடலில் இருந்தே தோல்களை எடுத்து சிகிச்சை நடைபெறும். பிறந்த குழந்தைக்கு செய்யவேண்டுமென்றால், அந்தத் தாயின் உடலில் இருந்து தோலை எடுத்து குழந்தைக்கு வைக்க வேண்டும்.

தொடர்ந்து ஒப்பனை அறுவை சிகிச்சை செய்தால்..?

திரை பிரபலங்கள், தங்கள் அழகைப் பெரிதும் நேசிப்பார்கள். அதனால், சிலவற்றை மனதில் கற்பனை செய்துகொண்டு சிகிச்சை செய்துகொள்வார்கள். அது அவர்களுக்குத் திருப்தி தராமல் இருக்கும் பட்சத்தில் திரும்பவும் செய்துகொள்வார்கள். இதுபோல் அதிகமாக இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது, ஒரு சிகிச்சை செய்த பிறகு, குறிப்பிட்ட காலம் கழித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இதன் தேவை

ஒப்பனை அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை, இந்தத் தலைமுறையினருக்கு இதன் தன்மை புரிந்திருக்கிறது. இப்போதெல்லாம் அழகில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இணையதளத்தில் தேடித் தெரிந்துகொள்கிறார்கள். ஆனால், அதில் அவர்களுக்கு முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை என்பதே உண்மை. இது குறித்த விழிப்புஉணர்வு வேண்டும். அரசு மருத்துவனையிலேயே பிளாஸ்டிக் சிகிச்சை செய்கிறார்கள். சிலர் இது அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை எனக் கருதி, இதைச் செய்துகொள்ள மறுக்கிறார்கள். உண்மையில், இதற்கும் மற்ற அறுவைசிகிச்சைகளுக்கு உண்டாகும் செலவுதான் ஆகும். ஆனால், ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு மட்டும் காப்பீடு பெற முடியாது.

அழகுக்காக செய்வது மட்டும்தான் பிளாஸ்டிக் சர்ஜரி என்ற தவறான கருத்து பலருக்கு உண்டு. தீக்காயம், பிறப்பில் உடல் மாற்றம் ஆகியவற்றால் சமூகத்தில் எழும் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்குக்கூட சிலர் முயற்சிக்கின்றனர். அந்த எண்ணத்தை மாற்றவும், அவர்களுக்கு உதவவும் இந்த அறுவைசிகிச்சை உதவும். அதற்குத் தேவையெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த முழுமையான விழிப்புஉணர்வு மட்டுமே.