Published:Updated:

இன்ஜினீயரிங் மேனியா என்ன செய்யப் போகிறது தெரியுமா?

இன்ஜினீயரிங் மேனியா என்ன செய்யப் போகிறது தெரியுமா?
இன்ஜினீயரிங் மேனியா என்ன செய்யப் போகிறது தெரியுமா?

நகரத்தின் வார இறுதி நாள்களில் ஒரு ஷாப்பிங்மாலின் மக்கள்திரளில் நின்றுகொண்டு ``மிஸ்டர் இன்ஜினீயர்...’’ என்று நீங்கள் உரக்கக் கத்தினால், கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். மீதமிருக்கும் ஐம்பதில் 25 சதவிகித இன்ஜினீயர்கள் ஹெட்போன் அணிந்திருப்பதால், நீங்கள் அழைத்தது அவர்களுக்குக் கேட்டிருக்காது.

இதில் என்ன வேடிக்கையென்றால், அந்த மையத்திற்குள் நாளையும், அடுத்த வார இறுதி நாள்களிலும் செல்ல இருப்பவர்கள் இன்ஜினீயர்களாகவே இருக்கப்போகிறார்கள் என்கிற அச்சம்தான் இந்தக் கட்டுரை. சரி பூடகமாகப் பேசுவதை விட்டுவிட்டு கொஞ்சம் தீவிரமாக இதை அணுகுவோம்.

சில தலைமுறைகளுக்கு முன்னர் வரையில், குடும்ப அமைப்பில் பெரியவர்களுக்குத்தான் அதிகச் செல்வாக்கும் மதிப்பும் இருந்தன. ஒரு குடும்பத்தின் மையமாக அவர்களே இருந்தார்கள். இப்போது அந்தச் சூழல் தலைகீழாக மாறிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள்தான் சர்வ அதிகாரமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். குழந்தையைச் சுமக்கும் நாள் முதல் அதன் ஒவ்வொரு நிலையிலும் அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டுவது இந்தத் தலைமுறை பெற்றோர்களுக்கான ஓர் இயல்பாகவே இருக்கிறது. இதில் பி.இ (B.E) கனவும் செயற்கையான இன்னொரு மூளையாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒரு குழந்தையாவது பி.இ-யாக இருக்கலாம் என்கிற நிலை இப்போது. பல குழந்தைகளும் படிக்கும்போதே அந்தக் கனவில்தான் இணைக்கப்படுகிறார்கள். ``நாமதான் சரியா வளரலை. நம்ம பிள்ளையாவது நல்லா வரணும்’’ எனச் சொல்லும் பெற்றோர் மனநிலை அல்லது எதிர்காலம் பற்றிய பாதுகாப்பின்மையின் அச்சுறுத்தல், அவர்கள் கல்வி மீது மிகப் பெரிய பொறுப்பை ஏற்கவைத்துவிடுகிறது. இதுவே பெரிய அளவில் பொறியியல் படிப்பை நோக்கி மந்தை மந்தையாக தங்கள் குழந்தைகளை அனுப்பப் பெற்றோர்களைத் தள்ளிவிடுகிறது.

முன்புபோல தற்சார்பு உடைய பாரம்பர்யத் தொழில்களான வேளாண்மை, நெசவு போன்றவை கைவிடப்பட்டுவிட்ட நிலையில், நவீனத்துடன் இணைந்துகொள்ள உருவானதே இந்த பி.இ கலாசாரம் (B.E Culture). உண்மையில் இதை, `ஐ.டி மோகம்’ என்றும் வரையறுக்கலாம். இந்த மாறுதல்கள், 20 ஆண்டுகளுக்குள் பெரிய அளவில் நல்ல மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்திவிட்டன. என்றாலும், இந்தநிலை ஏற்கெனவே கீழிறங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்தத் துறையில் ஏற்படப்போகும் அபாயம் தெரிந்தும், பெற்றோர்களும் மாணவர்களும் பொறியியல் படிப்பை, மிகக் குறிப்பாக ஐ.டி செக்டாரை நோக்கியே தவமிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தைக் கடந்து வரும்போது ஒருநாள் நான் பார்த்தக் காட்சி, எங்கிருந்தோ கிராமப்புறங்களில் இருந்து இன்னமும் சக மனிதர்களோடு பேசுவதற்கே தயங்கித் தயங்கிப் பேசும் மனிதர்களின் கனவு, தன் மகனோ/மகளோ இன்ஜினீயர் ஆனதும், தன் மொத்தக் குடும்பநிலையும் வேறாக மாறிவிடும் என்பது.

சமீபத்தில் சில சுயமுன்னேற்ற வாசகங்கள், இன்ஜினீயரிங்கைப் பொறுத்தவரை குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை நன்றாகத் திசை திருப்பியிருக்கிறது. அது, தன் நிலையையும், தான் விரும்பும் ஒன்றின் எதிர்காலத்தையும் பற்றிக்கூட கவலைகொள்வதில்லை. உதாரணமாக, `உனக்கு மனசுல என்ன தோணுதோ அதை மட்டுமே தேர்வுசெய்’ - இது தன்னம்பிக்கையூட்டும் அல்லது புதிய இளைஞர் சமூகத்தை இயக்குகிற முக்கியமான விசையாக, ஐகானாக இருக்கிறது. இதில் ஆழமான உண்மை உள்ளது என்றாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள், பெற்றோர்களையும் மாணவர்களையும் பொறியியல் படிப்பு வாயிலாக எல்லோருக்கும் ஒரு சொகுசான (Sophisticated) வாழ்க்கை இருக்கிறது என வலியுறுத்துவதிலும், 100% வேலைவாய்ப்பு (Placement) என்பதிலுமே கவனக் குவிப்பை உருவாக்குகின்றன.

ஒரு சாதாரண ஆன்சிலரி யூனிட்டாக (Ancillary unit) இருந்தாலும், அதன் தாய் நிறுவன லோகோக்களைப் பயன்படுத்தி, கேம்பஸ் இன்டர்வியூ வருவதாக உணரும் நிறைய கல்வி நிறுவனங்களுக்கு மேற்சொன்ன அந்த வாசகமே மிகப் பெரிய அளவில் வருமானத்துக்கு ஆதாயமாகிறது. 

அதாவது, இன்ஜினீயரிங் என்றாலே ஐ.டி-யில் வேலை வாய்ப்பு, ஐ,டி-யில் வேலை கிடைத்தாலே மாதம் லட்சக்கணக்கில் வேலை, வெளிநாட்டு வாய்ப்பு என்று மக்களை நம்பவைப்பது, அதன் வழியாக ஆசைகொள்ளவைப்பது. இந்த நிலை, நகரங்களில் மேல்தட்டு வர்க்கக் குடும்பங்களில் வெகுவாகக் குறைந்துவிட்டாலும், இதற்காக ஆசைப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை எப்போதும் கணிசம்தான்.

இன்ஜினீயரிங் மாணவர்களின் பெற்றோர்களை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, தன் மக்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்குப் பொருத்தமான அதே துறையில் வேலை கிடைப்பது, குறைந்த ஆதாயமே கிடைத்தாலும் வளர்ச்சியைக் கணக்கில்கொண்டு பணி செய்யட்டும் என்று அமைதி காப்பது. மற்றொரு ரகம், தங்கள் குழந்தைகள் ராஜபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஐ.டி கனவை அவர்களும் நித்தமும் காண்பவர்கள். கட் ஆஃபுக்காக ஏதாவது கோழிப்பண்ணை பள்ளியில் சேர்ப்பதிலிருந்து, தகுதிக்கும் மீறி கடன் வாங்கி, கவுன்சலிங்குக்கு முன்னாலேயே ஒரு கல்லூரியில் சேர்த்துவிட்டுக் காத்திருப்பவர்கள். இத்தனைக்கும் 50,000 சீட்டுகள் வரை பொறியியல் கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கின்றன என்று நான்கைந்து ஆண்டுகளாகப் பார்த்துவருகிறோம்.

மாணவர்களின் நாளைய எதிர்காலம் எப்படி இருக்கும்... அடுத்த பத்தாண்டுகளில் தொழில் வாய்ப்பு என்னவாக இருக்கும் என்று சிந்திப்பவர்கள் வெகு சிலரே. அவர்கள் மட்டுமே தாங்கள் விரும்பும் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும். கடிவாளம் கட்டிய குதிரையின் கண்களைப்போல் தங்கள் கண்களுக்கும் பொறியியல் படிப்பு போன்ற சில குறிப்பிட்டத் துறைகள் மட்டுமே தெரிவது மிக ஆபத்தான சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இது தனி மனிதர்களுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமான ஓர் எதிர் விளைவாகவே இருக்கும்.

ஒவ்வோர் அலுவலகத்திலும் புதிதாக `பியர் பிரஷர்’ (Peer pressure) என்று ஒன்றைச் சொல்கிறார்கள். இது, உடன் வேலை செய்பவர்களால் உருவாகும் அழுத்தம். ஒவ்வோரு வருடமும் லட்சக்கணக்கில் உற்பத்திச் செய்யப்படும் பொறியாளர்களின் எண்ணிக்கை, ஏற்கெனவே வேலை பார்ப்பவர்களுக்கும் ஒரு பணிப் பாதுகாப்பை உருவாக்கவில்லை. இப்போதே பி.பி.ஓ போன்ற நிறுவனங்களில் டிகிரி முடித்தவர்களையே அதிகம் தேர்வுசெய்கிறார்கள். பல இடங்களில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு இருக்கும் முன்னுரிமையைவிட, இன்ஜினீயரிங் மாணவர்களுக்குக் குறைவாகவே உள்ளது. காரணம் அவர்கள் டிகிரி மீது அவர்கள் கொண்டிருக்கும் எக்ஸ்ட்ரா நம்பிக்கை என்பதும் சிலரின் கருத்தாக இருக்கிறது.

லட்சக் கணக்கில் பள்ளிக்கும், ட்யூஷன், கல்லூரிச் சேர்க்கை போன்றவற்றுக்கும் சொத்தை விற்று, கடன் வாங்கி, இயல்பைவிட அதிகமான குடும்பச் சுமை ஏறியிருக்கும் நிலையில், கல்லூரியில் படித்து முடிக்கும் மாணவன் 5,000 ரூபாய்க்கும், 10,000 ரூபாய்க்கும் வேலையில் சேர்வதும், அதற்கும் ஆயிரம் தடைகள் இருப்பதும் ஓர் இளைஞனை அவனின் கனவுக் கோட்டையின் உச்சியில் அமர்த்தி, பின் தலைகுப்புறத் தரைக்கு தள்ளிவிடுவது போன்ற அதிர்ச்சியை மட்டுமே தருகிறது. இதில், அவன் வாழ் நாளும், அவனைச் சார்ந்த பெற்றோரின் எதிர்காலமும் இன்னமும் அதிகச் சுமையைச் சேர்ந்தே இழுக்கின்றன.

போதாக் குறைக்கு, ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, உலக அளவில் பல நிறுவனங்களின், உயர் அதிகாரிகளின் கனவே கலைத்துப்போடப்பட்டிருக்கிறது.

என் நண்பன் ஒருவன், `மூன்றாம்தர நகருக்குள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு உணவு விடுதியில் பில்லிங் போட்டுக்கொண்டிருப்பவன் ஒரு எம்.டெக்’ என்று என்னிடம் கூறியபோது, என் மனதில் ஓடிய கேள்விகள் இரண்டு...

* உண்மையில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடங்க ஆரம்பித்திருக்கிறதா?

* அல்லது, இது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடிப்படை ஆள்சேர்ப்புக் கொள்கைக்காக ஒரு சமுதாயம் தன் இளைஞனை உருவாக்குகிறதா?

கொஞ்சம் நிதானமா யோசிங்க பாஸ்!