டி.சாந்தி, சென்னை
எனக்கு 30 வயது. இன்னும் திருமணம் ஆகவில்லை. 62.5 கிலோ எடையும், 156 செ.மீ உயரமும் இருக்கிறேன். எனக்குத் தைராய்டு பிரச்னை உள்ளதால், மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். வாரத்தில் ஐந்து நாட்கள் தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். மேலும் டயட்டில் உள்ளேன். எனினும், எனது எடையைக் குறைக்க முடியவில்லை. ஹைப்போதைராய்டு பாதிப்பு உள்ளவர்கள், உடல் எடையைக் குறைப்பது சவாலான காரியமா?
டாக்டர் பாலமுருகேசன், பொது மருத்துவர், புதுச்சேரி
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'எதிர்மறை கலோரி சமநிலை, துடிப்பான உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் இயல்பான தைராய்டு

நிலையைப் பராமரித்தல்... இந்த மூன்றும் இருந்தால், ஹைப்போதைராய்டு உள்ளவர்களுக்கு எடை குறைப்பு என்பது சாத்தியமே. நீங்கள் தற்போது என்ன மருந்து உட்கொள்கிறீர்கள், உங்கள் தைராய்டு செயல்பாட்டின் தற்போதைய நிலை என்னவென்று குறிப்பிடவில்லை. இவற்றைப்பற்றித் தெரியாமல் ஆலோசனை கூற இயலாது. எனவே, தைராய்டு செயல்பாடு பரிசோதனையை (Thyroid function test) செய்து, என்னவென்று கண்டறியுங்கள். பரிசோதனையில், ஹைப்போதைராய்டாக இருந்தால், மருத்துவரை அணுகி, சரியான டோஸை எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பரிசோதனையில், நார்மலாக இருந்தால், நீங்கள் உட்கொள்ளும் மருந்தைத் தொடருங்கள். எந்தக் காரணத்தை முன்னிட்டும், மருந்தை உட்கொள்ளாமல் நிறுத்திவிடாதீர்கள்.
ஹைப்போதைராய்டு உள்ளவர்கள், வாழ்க்கை முழுவதும் மருந்துகளைத் தொடர்வது அவசியம். கர்ப்பக் காலத்தில், உட்கொள்ளும் தைராய்டு மருந்தின் டோஸை ஒன்றரை மடங்கு அதிகரிக்க வேண்டும். உங்கள் உயரத்துக்கு ஏற்ற சரியான எடை 55 கிலோ. எனவே, நீங்கள் உடல் எடையைக் கட்டாயம் குறைத்தே தீர வேண்டும். இதற்கு, நீங்கள் செய்யும் உடற்பயிற்சி துடிப்பானதாக இருக்கட்டும். தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செல்வது மிகவும் நல்லது. நீங்கள் உட்கொள்ளும் உணவில் செறிவூட்டப்பட்ட கொழுப்பின் (saturated fatty acids) அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். எதிர்மறை கலோரி சமநிலை (Negative calorie balance) இருந்தால்தான், எடை குறைப்பு சாத்தியம். உடல் எடைக் குறைப்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். குறுகிய காலத்துக்குள் அதிகப்படியான எடை குறைப்பும் உடல் நலத்திற்கு நல்லதல்ல. எனவே, உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது என்டோகிரைனாலஜிஸ்ட் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.'

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, சென்னை
'பொதுவாக மெனோபாஸுக்குப் பிறகுதான் பெண்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று படித்திருக்கிறேன். சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்த பெண் ஒருவர் திடீரென இறந்துவிட்டார். இதய நோய்தான் அதற்குக் காரணம் என்றார்கள். இளம் வயதிலேயே இதய நோய்கள் வருமா? அதைத் தவிர்க்க என்ன வழி?'
டாக்டர் சஞ்சய் செரியன்,
இதய நோய் சிகிச்சை நிபுணர், சென்னை
'இளம் பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்பட மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. எந்தவித

அறிகுறியும் இன்றி வரக்கூடிய, 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ வருவதற்குச் சர்க்கரை நோய், மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை, மோசமான உணவுப் பழக்கம் என்று சில காரணங்கள் உள்ளன. சிலருக்கு இதயத்தில் துளை போன்று பிறவிக் குறைபாடு இருக்கலாம். இதனாலும், இதயத்தினுள் ரத்தம் உறைந்து உயிரிழப்பு ஏற்படலாம். சிலருக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இந்தக் குறைபாடு காரணமாகவும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம். இவற்றைத் தவிர்க்க குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவேண்டும், தினசரி உடற்பயிற்சி செய்யவேண்டும். 'வீட்டில் செய்யும் வேலையே ஒருவிதப் பயிற்சிதான்’ என்று நினைப்பதும் தவறு. தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க, யோகா, காலாற நடப்பது, இசை கேட்பது போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தலாம். ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்தால், எந்த நோயும் நம்மை நெருங்காது.'
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
கன்சல்டிங் ரூம், டாக்டர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002.
doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்!