
வாசகர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதுடன் அவர்களது ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் நடந்துவரும் டாக்டர் விகடனின் மருத்துவ முகாம் ஈரோட்டில் நடந்தது. டாக்டர் விகடனும் ஈரோடு மாருதி மெடிக்கல் சென்டரும் இணைந்த நடத்திய, இதயம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமில் ஈரோடு மட்டுமில்லாமல் திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் பி.எம்.ஐ., ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை பரிசோதனைகள் செய்யப்பட்டு, பொது மருத்துவரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டனர். பொதுமக்கள், தங்களுக்கு உள்ள உடல் நலப் பிரச்னைகளைச் சொன்னதன் அடிப்படையில் சிறப்பு மருத்துவரிடம் அனுப்பப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகாமில் பல துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் உணவு ஆலோசகர், பிசியோதெரப்பிஸ்ட் பங்கேற்று பொது மக்களைப் பரிசோதித்து ஆலோசனை வழங்கினர். முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்பு அடர்த்தியும், 50-க்கும் மேற்பட்ட வர்களுக்கு எக்கோ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இவர்களில் 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு மேல் சிகிச்சைக்கான வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து அவர்கள் தெளிவுபெற டாக்டர்கள் உதவியாக இருந்தனர்.
முகாம் குறித்து டாக்டர் சதாசிவம், 'ஏராளமானவர்களுக்கு இலவச பரிசோதனை அளித்திருக்கிறோம். ஒரு சிறுமிக்கு இதயத்தின் கீழ் அறைகள் நன்றாக இருந்தன. ஆனால் மேல் அறைகள் திரும்பி இருந்தன. அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் சரிப்படுத்திவிடமுடியும். தற்போது அந்தக் குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், வயது அதிகரிக்கும்போது பிரச்னை ஆரம்பமாகும். அந்தக் குழந்தையின் அப்பாவுக்குப் பெரிய வருமானம் இல்லை. சம்பாதிப்பதை எல்லாம் குழந்தையின் உடல் நலத்துக்காகவே செலவிட வேண்டி இருந்திருக்கும். முகாமில் பிரச்னை கண்டறியப்பட்டதன் மூலம், சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளோம். இதனால், அந்தக் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுடன், அந்தக் குடும்பத்தையும் பாதுகாக்கமுடியும்' என்றார்.

ஈரோட்டைச் சேர்ந்த அமுதா என்பவர் கூறுகையில், 'என் இடது கையில் ரொம்ப நாளா வலி. வெயிட் அதிகமா இருக்கிற எந்தப் பொருட்களையும் தூக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். இடது கையில் அதிகமா கொழுப்பு சேர்ந்துள்ளதால் அடைப்பு ஏற்பட்டிருக்குனு, இங்க வந்து பரிசோதிச்ச பின்புதான் தெரிஞ்சது. வெளியில், பரிசோதனை செஞ்சு இருந்தால், ஆயிரக்கணக்குல செலவாயிருக்கும். அதோட இவ்வளவு டெஸ்டையும் செய்து, டாக்டர்கிட்ட போகவே இரண்டு முணு நாள் ஆகியிருக்கும். ஆனா, ரொம்பச் சீக்கிரமா, பெரிய டாக்டர்கிட்ட செக்கப் செய்துகிற வசதியை ஏற்படுத்தித் தந்த டாக்டர் விகடனுக்கு நன்றி' என்று நெகிழ்ந்தார்.
முகாமில் கலந்துகொண்ட பலரும், முகாமில் நாங்கள் பயன்பெற்றது போல, பலரும் பயன்பெற வேண்டும். இதுபோன்ற முகாம்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றனர். அவர்களின் விருப்பத்தைப்போல டாக்டர் விகடனின் முகாம் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும். அடுத்த முகாமுக்கான வேலைகளில் இப்போதே இறங்கிவிட்டது டாக்டர் விகடன் குழு.
- மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: மு.சரவணக்குமார்