Published:Updated:

மனமே நலமா? 27

கற்பனையில் மிதந்த காதல்!

மனமே நலமா? 27

கற்பனையில் மிதந்த காதல்!

Published:Updated:
மனமே நலமா? 27

யாரிடமும் அதிகம் பேசாத ஸ்ரீதேவிக்கு 21 வயது. எம்.பி.ஏ முடித்ததும் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வீடு, வேலை என்று இருப்பார். சொந்தமாக கடை ஒன்றை நடத்தி வந்த ஸ்ரீதேவியின் அப்பா, எப்போதும் கடையே கதி என்று இருப்பார். ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு மன அழுத்த பாதிப்பு இருந்ததால், தொடர் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தார். சில சமயம் அம்மாவை ஸ்ரீதேவிதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். பெற்றோரிடம் இருந்து போதுமான அன்பு கிடைக்காமல் போனதால், ஸ்ரீதேவிக்கும் மன அழுத்த பிரச்னை இருந்தது.

அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, அங்கு இருந்த பயிற்சி டாக்டர் ஒருவர், 'எப்படி இருக்கீங்க, என்ன சாப்டீங்க, என்ன பிரச்னை?' என மிகவும் கனிவோடு விசாரிப்பது, ஸ்ரீதேவிக்கு அவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. அவரைப் பார்ப்பதற்காகவே அம்மாவை அடிக்கடி அந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆரம்பித்தார். சில மாதங்கள் சென்றன. ஒருநாள், அம்மாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தபோது, அந்தப் பயிற்சி டாக்டரை காணவில்லை. மருத்துவமனை பணியாளர்களிடம் கேட்டபோது, 'அவர் பயிற்சி முடிச்சுப் போயிட்டாரு. இனி வரமாட்டாரு' என்றனர். இதைக் கேட்டதும் ஸ்ரீதேவியின் கண்ணில் இருந்து பொலபொலவெனக் கண்ணீர் வடிய, அங்கு இருந்தவர்கள், 'என்னாச்சு?’ என்று கேட்க, 'ஒன்றுமில்லை’ என்று சமாளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனமே நலமா? 27

வீட்டில் யாரிடமும் சரியாகப் பேசாமல், சாப்பிடாமல் அழுதபடியே இருந்தார். வேலைக்கும் செல்லவில்லை. 'ஸ்ரீதேவியின் திடீர் மாற்றத்தைக் கவனித்த அப்பா விசாரித்திருக்கிறார். அவரிடம், 'நானும், அம்மாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த பயிற்சி டாக்டரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். ட்ரெய்னிங் முடிஞ்சிடுச்சுனு ஊரைவிட்டே போயிட்டாராம்...' என்று ஸ்ரீதேவி முடிக்கும் முன்பு,

'என்ன காரியம் செய்திட்ட... எப்படிக் காதலிக்கலாம்?' என்று ஸ்ரீதேவியை அடித்து உதைத்தார். ஆனாலும் ஸ்ரீதேவி அசரவில்லை. கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது அந்த டாக்டருடன்தான் என்பதில் உறுதியாக இருந்தார். 'சரி அடித்தால் வேலைக்கு ஆகாது... அன்பாகச் சொல்லிப் பார்க்கலாம்’ என்று ஸ்ரீதேவியிடம் அன்பாகப் பேசியும், அவர் மனதை மாற்ற முடியவில்லை.

'சரி அந்தப் பையன் யார்? எங்கே இருக்கான்? அவனை உனக்குக் கல்யாணம் செய்துவைக்கிறேன்' என்று இறங்கிவந்தார் அப்பா. 'அவர் ட்ரெய்னிங்காக இங்கே வந்தார். எந்த ஊர்னு தெரியாது. சொல்லாமலே போயிட்டார். அதுக்கு அப்புறம் நான் அவரைப் பார்க்கலை' என்றதும் 'நம் மகளை ஏமாற்றி விட்டுப் போய்விட்டானே’ என்று ஸ்ரீதேவியின் அப்பாவுக்கு அந்தப் டாக்டர் மீது கோபம் திரும்பியது.

மருத்துவமனைக்கு வந்து அந்தப் பயிற்சி டாக்டரைப் பற்றி விசாரிப்பதற்காக என்னைச் சந்தித்து, 'அவரது அட்ரஸ் கொடுங்க’ என்று கேட்டார். நான் பிரச்னையை முழுவதுமாகக் கேட்டுக்கொண்டு, அந்தப் பயிற்சி டாக்டரிடம் பேசினேன். 'டாக்டர் நான் எல்லா நோயாளிகளிடமும், அவர்கள் உறவினர்களிடமும் எப்படிப் பேசுவேனோ அதுபோலத்தான் அந்தப் பெண்ணிடமும் பேசினேன். நான் யாரையும் காதலிக்கவில்லை. இந்தப் பெண்ணைக் காதலிப்பதாக நான் சொன்னதே இல்லை. அந்தப் பெண்ணுக்கும் டிப்ரஷன் பிரச்னை இருந்தது. அதற்குச் சிகிச்சை அளித்தேன். அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்கலாம்’ என்று கூறினார்.

நான் அந்தப் பெண்ணின் அப்பாவிடம் இதைத் தெரிவித்தேன். ஆனால், அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. 'நீங்கள் உங்கள் பெண்ணிடம் என்ன நடந்தது என்று பொறுமையாக விசாரியுங்கள்' என்று கூறி அனுப்பினேன். அவர் வீட்டுக்குச் சென்று மகளிடம் பேசினார். 'நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்' என்று சொன்னாரே தவிர வேறு எதுவும் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை.

'டாக்டர், உன்னைக் காதலிக்கவே இல்லை. நீயாகக் கற்பனை செய்துகொள்கிறாய்' என்று அப்பா கூறியும், ஸ்ரீதேவி ஏற்றுக்கொள்ள வில்லை. அன்று இரவே தற்கொலைக்கு முயற்சித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும், அவர் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் என்ற நிலையில், அவரை என்னிடம் சிகிச்சைக்காகக் கொண்டுவந்தனர்.

மனமே நலமா? 27

'ஸ்ரீதேவியிடம் பேசினேன். தன் காதல் கதையைக் கூறினார். ஆனால், இப்போதும் காதலிப்பதாகக் கூறினார், எங்கு வைத்து காதலைச் சொன்னார் என்று எல்லாம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். அவருக்கு 'எரட்டா மேனியா’ (Erotomania) பிரச்னை இருப்பதை உணர்ந்தேன். அதிலும் குறிப்பாக 'டெல்யூஷன் ஆஃப் லவ்’ என்று சொல்லக்கூடிய பிரச்னை அவருக்கு. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் சமுதாயத்தில் பிரபலமானவர்கள் அல்லது தங்களுக்கு விருப்பமானவர்கள் தங்களைக் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொண்ட தாகவும் நினைத்து கற்பனை உலகில் வாழ்வார்கள். ஸ்ரீதேவியைப் பொருத்தவரை தனக்கு பெற்றோரிடம் இருந்து அன்பு கிடைக்காதநிலையில், தனக்குப்பிடித்த அந்த டாக்டர் கனிவாகப் பேசவே, அவரைக் காதலிப்பதாகக் கற்பனையில் வாழ்ந்திருக்கிறார். மூளையில் உள்ள 'டோபோமைன்’ உள்ளிட்ட ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்களால் இத்தகைய பிரச்னை ஏற்படுகிறது.

இதை கவுன்சலிங் மூலம் சரிப்படுத்தமுடியாது என்பதால் ஸ்ரீதேவியை உள்நோயாளியாக அனுமதித்து அவருக்கு மாத்திரைகள் அளிக்கப்பட்டது. கூடவே அவருக்கு 'கரண்ட் ஷாக்’ கொடுக்கப்பட்டது. தொடர் மருத்துவக் கண்காணிப்பிலேயே ஒருவாரம் கழிந்தது. 'அந்த டாக்டர் உங்களைக் காதலிப்பதாகக் கூறினாரா?' என்று கேட்டேன், 'அப்படி எதுவும் இல்லை. அந்த டாக்டர் கனிவாகப் பேசுவார். காதல் எல்லாம் ஒன்றும் இல்லை' என்றார். தொடர்ந்து மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து மீண்டும் பரிசோதனைக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி அவரை அனுப்பினோம். 'இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று அன்பு காட்டுங்கள். அதுதான் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்' என்று ஸ்ரீதேவியின் பெற்றோருக்கும் கவுன்சலிங் தரப்பட்டது.

தற்போது, ஸ்ரீதேவிக்குத் திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து செக்கப் செய்துகொள்வார். தவறாமல் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார். எந்தப் பிரச்னையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism