ஸ்பெஷல் 1
Published:Updated:

'தும்மினால்கூட எலும்புகள் உடையலாம்...’

பெண்களை குறிவைக்கும் ஆஸ்டியோபோரோசிஸ்!வே.கிருஷ்ணவேணி,    படம்: ஜெ.வேங்கடராஜ்

''சேர்ல இருந்து எழுந்தப்போ, ஸ்லிப் ஆகி கீழே விழுந்துட்டேன். விழக்கூட இல்ல, லேசா சாஞ்சுட்டேன். பாம் தேய்ச்சுட்டுப் படுத்துடலாம்னு பார்த்தா, வலி தாங்க முடியல. ஹாஸ்பிடல் போனா, 'கால் எலும்பு உடைஞ்சுடுச்சு'னு சொன்னாங்க. 'சும்மா ஸ்லிப் ஆகி விழுந்ததுக்கு எலும்பு உடைஞ்சுருச்சா?'னு அதிர்ச்சியா கேட்டா, 'கீழ விழக்கூட வேணாம்... தும்மும்போதுகூட எலும்பு முறிஞ்சுடலாம். ஏன்னா, உங்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) நோய் இருக்குனு சொல்லிட்டாங்க!''

'தும்மினால்கூட எலும்புகள் உடையலாம்...’

- குரலில் பதற்றம் தெளியவில்லை போனில் பேசிய நம் சீனியர் வாசகிக்கு.

'ஆஸ்டியோபோரோசிஸ்' எனும் எலும்பு நுண்துளை நோய்தான், இன்று 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகமாகத் தாக்கி, நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறது. ஆண்களைவிட, பெண்களையே அதிகமாக இந்நோய் குறிவைத்து தாக்குவதேன்; இதன் விளைவுகள் என்ன; நோயை எப்படிக் கண்டறியலாம்; சிகிச்சை முறைகள் எப்படி; இதை சரிபடுத்தும் உணவுமுறை, உடற்பயிற்சிகள் என்னென்ன... இன்னும் பல கேள்விகளுக்கு விரிவாக பதில் சொல்கிறார்கள், துறைசார்ந்த வல்லுநர்கள்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன?

சென்னையைச் சேர்ந்த எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் பிரிவு நிபுணர் டாக்டர் ராஜா, விரிவாக பேசினார். ''பொதுவாக, நம் உடலில் வைட்டமின்-டி நார்மல் லெவல் 30-க்கு மேல் இருக்கவேண்டும். இதில் குறைபாடு ஏற்படும்போது, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உண்டாகிறது. 30 வயதுக்கு மேல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். 40 வயதுக்கு மேல் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாட்டால் சிலருக்கு எலும்புத் தேய்மானம் தீவிரமடைந்து, எலும்பு மிகவும் பலவீனமாகி, சிறு அடி பட்டாலும், ஏன்... உட்கார்ந்து எழும்போதுகூட நொறுங்கிவிடக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். இது தண்டுவடத்தைத்தான் அதிகமாக பாதிக்கும். அடுத்ததாக, இரண்டு இடுப்பு மூட்டுகளும் இதன் இலக்கு. சோர்வு, களைப்பு, சதை வலி ஏற்படுத்தும், எலும்பு வலிகளைத் தரும் இந்நோயை 'சைலன்ட் கில்லர்’ என்று அழைப்பதுண்டு. அந்தளவுக்கு, நாம் அறியாமலேயே நம்மைத் தாக்கும்.

பெண்களுக்கு ஏன் அதிக பாதிப்பு?

பெண்களைப் பொறுத்தவரை, எலும்புகளின் உறுதிக்கு அவர்களின் பாலின ஹார்மோனான எஸ்ட்ரோஜென் பங்கு இன்றிஅமையாதது. ஆனால், 40 வயதுக்கு மேல் அல்லது மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும்போதும், அந்த நிலையை அடையும்போதும் இந்த ஹார்மோன் சுரப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்து, பிறகு நின்றுவிடும். இதனால், எலும்புக்கான சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே, அவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எளிதில் இலக்காகிறார்கள். இது முதன்மைக் காரணம். இதேபோலவே மெனோபாஸ் கட்டத்துக்கு முன்பாகவே அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்களுக்கும் இந்த ஹார்மோன் சுரப்பு நிற்பதால், அவர்களுக்கும் எலும்புத் தேய்மானம் ஏற்படலாம்.

'தும்மினால்கூட எலும்புகள் உடையலாம்...’

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின்-டி, வீட்டைவிட்டு வெளியேசெல்லும் ஆண்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும். ஆனால், வீட்டுக்குள்ளே முடங்கும் பெண்களுக்கு அந்த அளவுக்குக் கிடைப்பதில்லை. அதனாலும் இந்த நோய் வரலாம். குழந்தைக்குப் பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு கால்சியம் சத்து இருமடங்காகத் தேவைப்படும். இதை ஈடுகட்டும் அளவுக்கு கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால், கால்சிய குறைபாடும் ஏற்படும். இப்படி கால்சியம் சத்துக் குறைவதற்கான சூழ்நிலைகள், ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இருப்பதால், அவர்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கண்டறிவது எப்படி... சிகிச்சைகள் என்னென்ன?

45 வயதுக்கு மேலானவர்கள், எலும்பின் அடர்த்தித் தன்மையை தெரிந்துகொள்ளும் 'டெக்ஸா' (Dexa) பரிசோதனையை, ஆண்டுக்கு ஒரு தடவை செய்துகொள்வது அவசியம். இதன் மூலமாக நோயைக் கண்டறிய முடியும். இந்நோயில் இரண்டு நிலைகள் உண்டு. முதல் நிலை பாதிப்பு 'ஆஸ்டியாபீனியா' (Osteopenia) என்பார்கள். இதைக் கண்டுபிடித்துவிட்டால், மாத்திரைகள் வாயிலாகவே சரிசெய்துவிடலாம். இதன் அடுத்த நிலைதான், ஆஸ்டியோபோரோசிஸ். இந்நிலைக்குச் சென்றுவிட்டால் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து ஊசி மூலமாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதன்பிறகு, மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலே போதுமானது'' என்று சொன்னார் டாக்டர் ராஜா.

'தும்மினால்கூட எலும்புகள் உடையலாம்...’

காப்பாற்றும் காலை வெயில்!

இந்த நோயை தடுக்கும் வழிமுறைகள் பற்றி பேசிய குழந்தை நரம்பியல் நிபுணர் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் முருகன், ''குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரை பெண்கள் உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வைட்டமின்-டி சத்துள்ள உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற் க£க தினமும் காலை வெயிலில் 15 நிமிடங்கள் அதிகாலை வெயிலில் இருப்பது நல்லது. 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்றால், இந்த சத்துக்கான மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். மது மற்றும் புகைப்பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். எலும்பின் திறத்தன்மையை அறிந்துகொள்ளும் பரிசோதனையை மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு தடவை செய்துகொள்ள வேண்டும்'' என்று சொன்னார்.

உணவே மருந்து!

ஆஸ்டியோபோரோசிஸ் நோயைத் தவிர்க்கச் செய்யும் உணவுமுறைகள் பற்றி பேசிய சித்த மருத்துவர் கு.சிவராமன், ''கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானது என்று அனைவரும் அறிவார்கள். ஆனால், இதய துடிப்புக்கும், தசை வலுவுக்கும், ரத்தக்கொதிப்பு சீராக இருக்கவும், ரத்த நாளங்களில் புண் ஏற்படாமல் தடுக்கவும் கால்சியம் தேவை என்பது பலரும் அறியாதது. பெண்களுக்கு மாதவிடாய் துவக்கம் முதல், முடியும் வரை கூடுதல் தேவையுள்ள மிகமுக்கிய உணவுக் கூறு, கால்சியம். தைராய்டு குறைவு இருந்தாலோ, பாரா தைராய்டு இருந்தாலோ, கால்சியக் குறைவும், அதைத் தொடரும் முதுகு மற்றும் மூட்டு வலிகளும் வரலாம்.

தினசரி நம் உடலுக்கு கிட்டத்தட்ட 1 முதல் 1.3 கிராம் வரை கால்சியம் சத்து தேவை. இதைப் பெற, காலை - மதிய உணவுக்கிடையே தினமும் 1 கப் மோர் சாப்பிடலாம். மதிய உணவில் வாரம் இரு நாள் ராகி ரொட்டி அல்லது கம்பஞ்சோறு, கூடவே மறக்காமல் கீரை, 1 கப் பீன்ஸ், மாலையில் 1 கப் பழச் சாறு, இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால்... இந்த 1 கிராம் கால்சியம் கிடைத்து விடும்.

பசும்பாலில் கால்சியம் நிரம்ப உள்ளது. ஆனால், பாக்கெட்டில் விற்கப்படும், பால் குறித்து இப்போது நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, கால்சிய மாற்றுணவுக்கு வாய்ப்பில்லாதவர்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி பால் சாப்பிடலாம். மற்றவர்கள் பழங்கள், கீரைகள் என்று குறிப்பிட்ட சிலவற்றை தொடர்ந்து எடுத்துக் கொண்டாலே போதும்'' என்ற சொன்ன சிவராமன், அவற்றைப் பட்டியலிட்டார்.

'தும்மினால்கூட எலும்புகள் உடையலாம்...’

சிவராமன் தரும் உணவு டிப்ஸ்!

 உ லராத சீமை அத்திப்பழம், ஆரஞ்சு, வாழைப்பழம், கொய்யா, வெந்தயக்கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிகீரை, பாலக்கீரை, காலிஃப்ளவர் கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

தானிய வகைகளில், கால்சியத்தில் ராகிதான் டாப். பெரியவர்களுக்கு ராகி தோசையும், சிறுவர்களுக்கு ராகி - பனைவெல்ல உருண்டையும் செய்துகொடுக்கலாம். கொள்ளு, ரஜ்மா இரண்டுமே சோயாவுக்கு இணையாக கால்சியம் உள்ளவை.

அசைவத்தில், நண்டில் எக்கச்சக்க கால்சியம் கிடைக்கும். அதேபோல் மீனிலும் கால்சியம் அதிகம்.