Published:Updated:

வாய்ப்புண் ஆற்றும், மூட்டு வாதம் போக்கும், அம்மை நோய் தீர்க்கும்... காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!

வாய்ப்புண் ஆற்றும், மூட்டு வாதம் போக்கும், அம்மை நோய் தீர்க்கும்... காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!
வாய்ப்புண் ஆற்றும், மூட்டு வாதம் போக்கும், அம்மை நோய் தீர்க்கும்... காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!

மழைக்காலங்களில் வளரும் ஒருவகை பூஞ்சைத் தாவர உயிரினம் காளான். இது மண்ணில் வளரும் ஒரு தாவரம். ஆனாலும், பெரும்பாலும் மக்கிப்போன பொருள்களின் மீது வளரக்கூடியது. இயற்கையாக வளரக்கூடிய காளான்களில், சில விஷமற்றவை, சில விஷமுள்ளவை. பொதுவாக, விஷக்காளான்கள் பல வண்ணங்களில் காணப்படும். துர்நாற்றம் வீசக்கூடியவையாகவையும் இருக்கும். உண்ணத் தகுந்த விஷமற்ற காளான்கள், சுவையுள்ளவை. அதிகச் சத்துகள் நிறைந்த. அதோடு, நிறைய மருத்துவப் பயன்கள் கொண்டவை. பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் இவை பலதரப்பட்ட சூழல்களில் வளருபவை. முற்காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் உணவாக இருந்தது காளான். இப்போது பல நாடுகளில் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நாட்டுக் காளான் தொடங்கி, பால், அரிசி, முட்டை, மொக்கு, சிப்பி, பூஞ்சை, நாய்க்குடை காளான் உள்ளிட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 2,000 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியான சிக்கிம் மாநிலத்தில் காளான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.  

இதில், பச்சையம் இல்லாததால், ஒளிச்சேர்க்கை இல்லாமலேயே தனக்குவேண்டிய உணவைப் பெறக்கூடியது. எனவேதான், காளான்கள் உணவுக்காகப் பிற உயிர்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஒட்டுண்ணியாகவும் சாறுண்ணியாகவும் இருப்பதால் இவை தம் உணவுத்தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றன. உதாரணமாக, நச்சுக்காளான்கள் மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துகளை உறிஞ்சி அவற்றைப் பட்டுப்போகச் செய்துவிடுகின்றன. காய்கறிகள் அழுகிப்போகவும் இவை காரணமாக இருக்கின்றன.

 பேக்கரிப் பொருள்கள் தயாரிக்கவும், பீர் தயாரிக்கவும் ஈஸ்ட் காளான் மிகவும் அவசியம். அதே நேரத்தில் தொண்டை மற்றும் வாயில் கொப்பளங்களை ஏற்படுத்தித் தொல்லை தருவதும் அந்த ஈஸ்ட் காளான்தான்.

காளானில் எண்ணிலடங்கா சத்துகள் நிறைந்திருப்பதால், இறைச்சிகளுக்கு இணையான ஓர் உணவுப்பொருள் இது எனலாம். 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதச்சத்து. இறைச்சி மற்றும் முட்டையில் புரதமும் கொழுப்பும் இருக்கின்றன. ஆனால் அவை ரத்தக்குழாயில் கொலஸ்ட்ராலைச் சேமித்து, அபாயத்தை ஏற்படுத்திவிடும். மாறாக, காளானில் கொழுப்புச்சத்து இல்லாததால், அந்தப் பிரச்னை எதுவும் இல்லை. ஆகவேதான் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல் மற்றும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி போன்றவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் முதியோருக்கான உணவுகள் எளிதில் செரிமானமாக வேண்டும். அதனால் காளான் உணவை தாராளமாக அவர்களுக்கு உண்ணக் கொடுக்கலாம். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியைத் தந்துவிடும். இதில், இரும்புச்சத்தும் வைட்டமின்களும் உள்ளன. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத எட்டு வகை அமினோ அமிலங்களும் உள்ளன. ஆக, பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதால் ஏராளமான நோய்களைக் குணப்படுத்துகிறது காளான்.

ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமலும், ரத்த நாளங்களின் உள்பரப்பில் கொழுப்பு அடைக்காமலும் இது தடுக்கிறது. இதில் தாமிரச் சத்து இருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைச் சீர்செய்யும்.

காளானை சூப் செய்து குடித்துவந்தால், காலரா, அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாகும். இந்த நோய்களைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்துகளும்கூட காளானிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சூப்பை அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, புற்றுநோய் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையை இது பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குழந்தையின்மைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் கர்ப்பப்பை நோய் உள்ள பெண்களுக்கும் இது நல்ல தீர்வைத் தரக்கூடியது.

வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்புண் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் வரக்கூடிய புண்களைக் குணப்படுத்தும். மூட்டு வாதம் உள்ளவர்களுக்கும் அருமையான மருந்து. இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காளானை வெறுமனே சமைத்துச் சாப்பிடாமல், முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகச் செய்து சாப்பிடலாம். பிரியாணி செய்தால் முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் காளான் சேர்த்துச் சாப்பிடலாம். கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்களும் உடல் இளைத்தவர்களும் தினமும் காளான் சூப் அருந்திவந்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

இது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு உடம்பில் வலி, வீக்கம் வராமல் தடுக்கும். மூளையின் நினைவாற்றலை ஒழுங்குபடுத்தும். தசைநார்களின் இயக்கத்தைச் சீராக்கும். வயது முதிர்ச்சியடையாமல் காக்கும். மரபணுக்களின் தன்மையைக் காத்து பாரம்பர்ய நோய்களைத் தடுக்கும்.

இத்தனை நலன்களை அள்ளித்தரும் காளானை பாலூட்டும் தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது.

இயற்கையாக உருவான காளான்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதனின் உணவுப் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. இவற்றின் உற்பத்தி குறைவு என்பதால், மனிதர்களின் உணவிலிருந்து ஏறத்தாழ அகன்று போய்விட்டது. இந்தநிலையில்தான் காளான் வளர்க்கப்பட்டு, உணவுத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு அது ஒரு சிறந்த குடிசைத் தொழிலாகவும் உருவெடுத்திருக்கிறது. காளானின் பலன்கள் அறிவோம்... பயன்படுத்துவோம்!