Published:Updated:

நலம் பெற்றோம்.. நன்றி சொல்வோம்!

நெகிழும் விகடன் வாசகர்கள்

நலம் பெற்றோம்.. நன்றி சொல்வோம்!

நெகிழும் விகடன் வாசகர்கள்

Published:Updated:
நலம் பெற்றோம்.. நன்றி சொல்வோம்!

ல்வாவுக்குப் பேர் போன திருநெல்வேலியில், ஆரோக்கியத்துக்கும் அச்சாரம் இட நினைத்த டாக்டர் விகடன் திருநெல்வேலியில் கடந்த 15-ம் தேதி மாபெரும் சிறப்பு முகாமை நடத்தியது. சைபால் மற்றும் நெல்லை ஷிபா மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த முகாமில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தேவைப்படுபவர்களுக்கு இ.சி.ஜி, எக்கோ மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

முகாமில் இதயம், பொது மருத்துவம், எலும்பு மூட்டு, மூளை நரம்பியல், மகளிர் மற்றும் மகப்பேறு, பொது அறுவைசிகிச்சை, வயிறு இரைப்பை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டு இலவச ஆலோசனைகளை வழங்கினார்கள்.

நெல்லை ஜங்ஷனில் இருந்து குடும்பத்துடன் முகாமுக்கு வந்திருந்த முத்துகிருஷ்ணன் - நித்யா தம்பதியினர், 'தொடர்ந்து டாக்டர் விகடன் வாங்குறோம். அதுல வர்ற மெடிக்கல் டிப்ஸ் எல்லாமே பயனுள்ளவை. ஒவ்வொரு ஊர்லயும் முகாம் நடக்கிறப்ப, நம்ம ஊர்ல எப்ப நடக்கும்னு காத்திட்டிருந்தேன். அதான், குடும்பத்தோட வந்திட்டேன். முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்ய, ஆயிரக்கணக்கில் செலவு ஆகும். ஆனா, இங்கே அத்தனையும் இலவசம். மனசுக்கு நிறைவா இருந்தது... நன்றிங்க!' என்றனர் நெகிழ்ச்சியாக.

நலம் பெற்றோம்.. நன்றி சொல்வோம்!

நெல்லை டவுனில் இருந்து வந்திருந்த 78 வயதான சீனிவாசன் கூறுகையில், ' சின்ன வயசுல கீழே விழுந்ததால் இடது கை உடைஞ்சுபோச்சு. அதை அப்பவே கட்டு போட்டு சரிசெஞ்சிட்டாங்க. ஆனா, என்னவோ தெரியலை. வயசான காலத்துல, மறுபடி வலி எடுக்க ஆரம்பிச்சிருச்சு. கையை ஒரு பக்கமாகத் திருப்பினா, உயிர் போற வலி. இந்தக் கை வலிக்கு, எங்கே போய் யார்கிட்ட காண்பிக்கிறதுனு தவிச்சிட்டு இருந்தேன். இங்கே வந்ததும் எனக்கு டெஸ்ட், ஸ்கேன் செஞ்சாங்க. சீக்கிரமே சரி செய்யலாம்னு நம்பிக்கை கொடுத்தாங்க. இந்த மாதிரி இலவச முகாம் நடத்துறது எங்களை மாதிரி ஏழைகளுக்கு ரொம்ப உதவியா இருக்கு' என்று மனசார வாழ்த்தினார்.

ஜெயஸ்ரீ என்பவர் கூறுகையில், 'நான் என் அக்காவோடு வந்தேன். வெறும் 35 கிலோதான் இருக்கேன். உடல் எடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்னு ரொம்பத் தெளிவா ஆலோசனை சொன்னாங்க. என் அக்காவுக்கும் இ.சி.ஜி, எக்கோ, ஸ்கேன் செஞ்சு பார்த்து இதயத்துல அடைப்பு இருக்கிறதைக் கண்டுபிடிச்சாங்க. இந்த முகாம் மட்டும் நடக்கலைன்னா, எங்களுக்கு இது தெரிஞ்சிருக்காது.  இப்போ என் மகனுக்குக் கால் வலி பிரச்னை இருக்கு. அதுக்காக அவனையும் கூட்டிட்டு வந்தேன். டாக்டர் ரொம்பப் பொறுமையாக் கவனிச்சாங்க. இந்த முகாமை ஏற்பாடு செஞ்சதுக்காக விகடனுக்கும், சைபாலுக்கும், ஷிபா மருத்துவமனைக்கும் என்னைக்கும் நன்றி சொல்வோம்' என்றார்.

வாசகர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் டாக்டர் விகடனின் ஆர்வத்துக்கு என்றுமே பஞ்சம் இல்லை என்பதற்கு, இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

-  தி.ஹரிஹரன்,

படங்கள்: எல்.ராஜேந்திரன்