Published:Updated:

மனமே நலமா?-28

ஏன் இந்த பயம்?

மனமே நலமா?-28

ஏன் இந்த பயம்?

Published:Updated:
மனமே நலமா?-28

'துப்பாக்கி’ படத்தில் ராணுவ வீரராக வரும் விஜயை, ரயில் நிலையத்திலிருந்து நேரடியாகப் பெண் பார்க்க அழைத்துச் செல்வது போல் ஒரு காட்சி வருமே... அதே போல்தான், இந்த உண்மை சம்பவத்தில் வரும் ஆதித்யனுக்கும் நடந்தது.  திருச்சி விமானநிலையம் வந்து இறங்கிய ஆதித்யனை நேரடியாகப் பெண் பார்க்க அழைத்துச் சென்றனர் அவனது பெற்றோர். லண்டனில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த ஆதித்யனுக்கு 29 வயது. ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவுக்கு வருவான். வரும்போதெல்லாம், 'திருமணம் செய்துகொள்’ என்று கெஞ்சும் அம்மாவிடம் பிடிகொடுக்க மட்டான் ஆதித்யன். 'நீ யாரையாவது லவ் பண்ணினா சொல்லுப்பா, அது யாரா இருந்தாலும் பரவாயில்லை... அவளையே உனக்குக் கல்யாணம் செஞ்சுவைக்கிறோம். ஆனா, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கடா' என்று அப்பா சொல்வார். 'அப்படி எல்லாம் ஏதும் இல்லைப்பா... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்... நான் இன்னும் செட்டில் ஆகலை' என்பான்.

நிறையப் பெண்ணின் போட்டோக்களை இ-மெயில் செய்வார்கள். அப்படி வந்ததில், மாலதியின் போட்டோவை பார்த்ததும் பிடித்துவிட்டது ஆதித்யனுக்கு. 'இந்த முறை இந்தியா வரும்போது பார்க்கிறேன்’ என்று கூறியிருந்தான். அதனால்தான் வந்து இறங்கியதுமே நேராகப் பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். பெண்கள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலை பார்த்துவரும் மாலதி, கல்லூரியில் என்.சி.சி. அதிகாரியும் கூட.

மனமே நலமா?-28

ஆதித்யன் ஒரு மாதம் விடுமுறையில் வந்திருந்தான். அதற்குள் திருமணம் முடிந்து லண்டன் செல்ல வேண்டும் என்பதால், மாலதிக்கும் விசா விண்ணப்பிக்கப்பட்டு, இரண்டு வாரத்தில் திருமணம் நடந்தது. நட்சத்திர ஹோட்டலில் முதலிரவுக்கு அறை எடுக்கப்பட்டது. மகிழ்ச்சியாகத் திருமண வாழ்வைத் தொடங்க காத்திருந்தான் ஆதித்யன். தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள் மாலதி.

ஆதித்யன் அன்போடு நெருங்கியதும் பயத்தில் தன் அருகில் நெருங்கவிடவில்லை மாலதி. இருவருக்கும் போதிய அறிமுகம் இல்லை, திடீர் கல்யாணம் என்பதால் மாலதி தயங்குகிறார் என்று நினைத்து, ஆதித்யனும் வற்புறுத்தவில்லை. தன்னைப்பற்றியும், தன்னுடைய வேலை பற்றியும் பேசி, மாலதியை ஆசுவாசப்படுத்த முயன்றான். ஆனால், மாலதி ஆதித்யனை கிட்ட நெருங்கவிடவில்லை. மேலும் அவளது நடவடிக்கையைப் பார்த்து சற்றுப் பயந்துபோனான் ஆதித்யன். முதல் நாள் என்பதால் சோர்வு, பயம் எல்லாம் இருந்திருக்கும் என்று நினைத்து, இதைப் பெரிதுபடுத்தவில்லை. இரண்டாவது நாள் மாமியார் வீட்டில் விருந்து. அன்று இரவு அங்கேயே தங்கினர் புதுமணத் தம்பதியர். அன்று ஆதித்யனை நெருங்கவிட்டாலும், தாம்பத்திய உறவின்போது மாலதி அலறியிருக்கிறார். வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் வந்து என்ன என்று கேட்கவே, ஆதித்யன் பயந்துவிட்டார்.

அடுத்த நாள் மாலதியை அருகில் இருந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் மாலதியின் அம்மா. மாலதியைப் பரிசோதித்துவிட்டு, 'எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது. புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள்தானே... போகப் போக எல்லாம் சரியாகிவிடும்' என்று கூறியிருக்கிறார். ஆனால், அன்று இரவும் ஆதித்யனை மாலதி நெருங்கவிடவில்லை. மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்தால் பெரிய பிரச்னை ஆகிவிடுமே என்று பயந்த மாலதியின் பெற்றோர், மறுநாள் காலையில் மாலதி மற்றும் ஆதித்யனை அழைத்துக்கொண்டு என்னிடம் வந்தனர். என்னுடைய அறைக்குள் நுழையும்போதே ஆதித்யன் மிகவும் பதற்றத்துடனும், படபடப்புடனும் இருந்தார். மாலதியும் மிகவும் பயந்துபோய் இருந்தார். மாலதியின் பெற்றோர் நடந்ததைச் சொன்னார்கள்.

அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு மாலதி - ஆதித்யனிடம் பேசினேன். நடந்ததை வைத்துப் பார்க்கையில் மாலதிக்கு வெஜைனிஸ்மஸ் (Vaginismus) பிரச்னை இருப்பது புரிந்தது. அதாவது, உடல் மற்றும் மனநலப் பிரச்னை காரணமாக அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பு இல்லறத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு இறுக்கம் அடைந்திருந்தது. இதற்குச் செக்ஸ் பற்றிய தவறான புரிதல், தவறான கதைகள், கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்பு பற்றிய பயம், இளம் வயதில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் என்று நிறையக் காரணங்கள் உள்ளன. எனவே, மாலதியிடம் பேசினால்தான் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதால் ஆதித்யனை வெளியே உட்காரவைத்துவிட்டு மாலதியிடம் பேசினேன்.

மனமே நலமா?-28

செக்ஸ் தொடர்பாக மாலதிக்குப் பயம் ஏதேனும் உள்ளதா, ஏதேனும் பாலியல் அத்துமீறல் இருந்ததா என்பது பற்றிக் கேட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பற்றி விவரித்தார் மாலதி.

மாலதியின் நெருங்கிய தோழி ஒருவரின் தம்பி மிகவும் அன்பாகப் பழகியிருக்கிறான். ஒருமுறை மாலதி தனிமையில் இருந்தபோது அத்துமீற முயற்சித்திருக்கிறான். கூச்சல் போட்ட மாலதி, அவனை அடித்து உதைத்திருக்கிறார். மற்றவர்கள் வரவே தப்பி ஓடிவிட்டான். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு செக்ஸ் என்றாலே ஒருவித பயம் அவர் ஆழ் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் ஆதித்யனை அருகில் நெருங்கவிடாமல் செய்திருக்கிறது.

மாலதியின் பயத்தைப் போக்க, அவருக்கு ரிலாக்சேஷன் தெரப்பி, சிகிச்சை அளித்தோம். ஆதித்யனின் பதற்றத்தைப் போக்க அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. மாலதி தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை மனதுக்குள்போட்டுக் குழப்புவதைத் தவிர்க்க, புலம்பித் தீர்த்தால்தான் மனது ரிலாக்ஸ் ஆகும் என்பதால் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசவைத்தேன். மேலும், இடுப்புப் பகுதி மற்றும் பிறப்பு உறுப்புத் தசைகள் தளர்வடைவதற்காகப் பிரத்யேக உடற்பயிற்சிகள் சொல்லித்தரப்பட்டன. இவற்றை, மாலதி முறையாகச் செய்ததினால் இரண்டு வாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது. இப்போது மாலதிக்குச் செக்ஸ் பற்றிய பயம் இல்லை. இதற்குள் மாலதிக்கும் விசா கிடைக்க, இருவரும் லண்டனுக்குச் சென்றனர். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இளம் வயதில் ஆழ்மனதில் பதிந்துபோகும் சில கசப்பான அனுபவங்களால் பயம்... மன அழுத்தம் எனப் பல்வேறு பாதிப்புகள் சூழலாம். இது தம்பதிக்குள் நிரந்தரப் பிரிவையும் ஏற்படுத்திவிடும். மாலதி-ஆதித்யனைப் போல், பிரச்னையின் ஆணிவேரைத் தெரிந்து அதற்கான சிகிச்சை அளிப்பதுதான் குடும்ப உறவும் பலப்படும். வாழ்வும் தித்திக்கும்'' என்றார்.