Published:Updated:

10 லட்சம் பேர் பலி... உயிர்க்கொல்லிக்கு எப்போது முற்றுப்புள்ளி?!

10 லட்சம் பேர் பலி... உயிர்க்கொல்லிக்கு எப்போது முற்றுப்புள்ளி?!
10 லட்சம் பேர் பலி... உயிர்க்கொல்லிக்கு எப்போது முற்றுப்புள்ளி?!

`எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழப்பு கடந்த ஆண்டைவிட பாதியாகக் குறைந்துள்ளது’ - ஐ.நா வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த ஆறுதல் செய்தி வெளியாகி இருக்கிறது. விழிப்பு உணர்வு பிரசாரங்கள் மூலம் எய்ட்ஸ் நோயாளிகளின் உயிரிழப்பு கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் ஐ.நா கூறியுள்ளது.

அண்மையில், ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் எய்ட்ஸ் குறித்த ஒரு கருத்தரங்கை ஐ.நா நடத்தியது. அதில், `கடந்த 1980-ம் ஆண்டுக்குப் பிறகு உலகம் முழுவதும் 7 கோடியே 61 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுவரை 3 கோடியே 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் புதிதாக 18 லட்சம் பேருக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 10 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டில் எய்ட்ஸ் காரணமாக 19 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்’ என்று ஐநா ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அதேநேரத்தில், எண்ணிக்கையின் அடிப்படையில், பார்க்கும்போது, 2005-ம் ஆண்டைவிட இறப்பு 9 லட்சம் குறைவு என்பது சற்றே ஆறுதல் தரக்கூடிய விஷயமே.

இருந்தாலும், உலக மக்கள்தொகை, அதிகரித்திருக்கும் மருத்துவ வசதி, விழிப்புஉணர்வு ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால், இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்திருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆக, மக்கள் மத்தியில் இன்னமும் எய்ட்ஸ் குறித்த விழிப்புஉணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. எனவே, எய்ட்ஸ் பற்றியும் அது பரவும் விதம் குறித்தும் அறிந்துகொண்டாலே இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து தப்பிவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் சில முக்கியமான அம்சங்கள் இங்கே...

நம்பிக்கைகளும் உண்மைகளும்...

குறிப்பாக, ஹெச்.ஐ.வி எப்படிப் பரவும், எப்படிப் பரவாது என்பதைத் தெரிந்துகொண்டாலே எய்ட்ஸ் வராமல் நம்மை காத்துக்கொள்ள முடியும். அதற்கு எய்ட்ஸ் குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள் களையப்பட வேண்டும். எய்ட்ஸ் குறித்த சில நம்பிக்கைகளையும், உண்மை நிலை என்ன என்பதையும் பார்ப்போம்.

நம்பிக்கை

`எய்ட்ஸ் நோய் வந்தால் காப்பாற்றவே முடியாது. உடனடி மரணம் நிச்சயம்’ என்கிற பயமுறுத்தல்.

உண்மை

இன்றைக்கு மருத்துவத் துறையில் அபரிமிதமான தொழில்நுட்பம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்டச் சூழலில்கூட எய்ட்ஸை முழுமையாக குணப்படுத்த முடியாது என்கிற நிலையே நிலவுகிறது. அதே நேரத்தில், எய்ட்ஸைக் கட்டுப்படுத்தவும், எய்ட்ஸின் காரணமாக ஏற்படும் பிற நோய்களைக் குணப்படுத்தவும் நம்மிடம் மருந்து உள்ளது. இதனால், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியும். எனவே, எய்ட்ஸ் என்றாலே உடனே மரணம் ஏற்பட்டுவிடும் என்று பயப்படத் தேவையில்லை.

நம்பிக்கை

ஹெச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் கைகுலுக்குதல், முத்தமிடுவது கூடாது. அதன் மூலம் ஹெச்.ஐ.வி பரவும்.

உண்மை

ஹெச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தமிடுதல், அவர் பயன்படுத்திய உணவுப்

பாத்திரங்கள், படுக்கை, உடைகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றால் ஹெச்.ஐ.வி மற்றவருக்குப் பரவாது. ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவரின் இருமல், தும்மலாலும், அவரைக் கடித்த கொசு பிறரைக் கடிப்பதாலும்கூட பரவாது. ஹெச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளுதல், ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் மற்றும் ஊசியை பயன்படுத்துதல் போன்றவற்றால் ஹெச்.ஐ.வி பரவும். எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவவும் வாய்ப்பு உள்ளது.

நம்பிக்கை

ஹெச்.ஐ.வியும் எய்ட்ஸும் ஒன்றுதான் . ஹெச்.ஐ.வி வந்தாலே எய்ட்ஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியாது.

உண்மை

ஹெச்.ஐ.வி வைரஸ் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களைப் பாதித்து அழிக்கும். இது எய்ட்ஸ் என்ற நிலையை அடைய மூன்று முதல் 15 ஆண்டுகள் வரைகூட ஆகும். அதாவது, ஹெச்.ஐ.வி பாதிப்பின் முற்றிய நிலைதான் எய்ட்ஸ். அது, உயிரைப் பறிக்கக்கூடிய மிக மோசமான நிலை. ஆனால், ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ஒருவரை, எய்ட்ஸ் நிலையை அடையவிடாமல் தடுக்க முடியும். இது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கிய நிலை சிடி-4 செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. பரிசோதனைக்கான மாதிரி ரத்தத்தில் சிடி-4 எண்ணிக்கையைக்கொண்டு ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் நிலையை அறிந்துகொள்ளலாம்.

எய்ட்ஸ் குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம். அதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம். எதிர்காலச் சந்ததியினருக்காகவாவது உயிர்க்கொல்லிக்கு வைப்போம் ஒரு முற்றுப்புள்ளி!