Published:Updated:

ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 11

அரிசியைக் கைவிடேல்!

பிரீமியம் ஸ்டோரி

'லஞ்சுக்கு என்ன பாட்டி வெச்சிருக்கே!'

'சாதம், சாம்பார், பொரியல்...'

'என்னது அரிசிச் சோறா? எனக்கு வேணாம்பா... நானே இப்பதான் கஷ்டப்பட்டு 'ஜிம்’முக்குப் போய் உடம்பைக் குறைச்சுட்டு வர்றேன். அரிசிச் சோறு சாப்பிட்டா வெயிட் போடும்னு உனக்குத்

ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 11

தெரியாதா பாட்டி?'

'காலங்காலமா அரிசிதான்டி நம்ம பாரம்பரிய உணவு. 60, 70 வருசத்துக்கு முன்னால, நாங்க மூணு வேளையும் அரிசி உணவைத் தவிர வேற எதுவும் சாப்பிட்டதில்லையே. அப்படிப் பார்த்தா, மொத்த தமிழ் மக்களும் தொப்பையோடதானே திரிஞ்சிருக்கணும். நீங்க வேலை செய்யாம சோம்பேறியாத் திரிஞ்சிட்டு, சதா சர்வகாலமும் கண்ட ஸ்நாக்ஸை நொறுக்கிக்கிட்டு, அரிசி மேலே பழி போடுவீங்களா?'  

'வெள்ளை அரிசி வேணாம்னு எல்லாரும் சொல்றாங்க.. ஏன், நீ கூட முன்னாடி சொல்லியிருக்கியே பாட்டி'

'இப்போ ஈசியாக் கிடைக்கிற வெள்ளை நெல் அரிசி மட்டும் இல்லைடி. தினை, ராகி, கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணினு சிறுதானியங்கள் அத்தனையுமே அரிசிதான். அரிசி சமைக்கிற மாதிரியே.. ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கோ, இரண்டரை பங்கோ தண்ணீர் சேர்த்து வேகவெச்சு எடுத்தா, சாதம் ரெடி'

'ஓஹோ... அப்ப சிறுதானியம்கூட சிறப்பான அரிசிச் சோறுதானா?'

'சிறப்பு மட்டும் இல்லை. ஆரோக்கியமும்கூட. தினையில் கண்ணுக்கு நல்லதைத் தர்ற பீட்டாகரோட்டின் இருக்கு. கம்பு, இரும்புச் சத்தை தருது. சோளம், புரதச் சத்தைக் கொடுக்குது. வரகும், சாமையும், நார்ச்சத்தைத் தந்து எடையைக் குறைக்கும். ராகியில் உள்ள கால்சியம் சத்து எலும்பை உறுதியாக்கும்.'

'வெள்ளை அரிசியில் 'சுகர்’தான் அதிகம்னு நான் படிச்சேன். மத்த அரிசியில் இவ்ளோ நல்லது இருக்கா?'

'நெல் அரிசியும் நல்லாத்தான் இருந்துச்சு. அதை, பாலிஷ் போட்டே கெடுத்துட்டாங்க. குழியடிச்சான், குள்ளக்கார், கவுனி அரிசினு பல ஊரோட பாரம்பரிய அரிசியை, இப்போ தமிழ்நாட்டில் மீட்டெடுத்திருக்காங்க.''

ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 11

''ஓகே பாட்டி.. விஷயத்துக்கு வருவோம். அரிசி சாப்பிட்டா, எடை கூடுமா இல்லியா?'

'புழுங்கல் அரிசியில 'லோ கிளைசிமிக்’ தன்மை இருக்குறதால, எடையைக் கூட்டாது. அரிசியைச் சுத்தமா ஒதுக்கித் தள்ளிட்டா, பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் தொந்தரவு அதிகரிச்சிடும். இல்லேன்னா மூலநோயை ஏற்படுத்திடும். சரியான பாரம்பரிய ரகப் புழுங்கல் அரிசி, இல்லேன்னா சிறுதானிய அரிசி வகையில் சோறு சமைச்சு அடிக்கடி கீரை, காய்கறிகளோட சாப்பிட்டு வந்தா, இப்ப அதிகரிச்சிட்டு இருக்கிற பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையைத் தவிர்க்க முடியும்.''

'வடக்கத்திக்காரங்க எப்பவும் கோதுமையே சாப்பிடுறாங்களே?'

'அது அவங்க ஊரோட உணவு. நாம வாழற இடத்தோட தட்பவெப்பம், பழக்கமான மரபைப் பொறுத்து சாப்பிடுற உணவும் வேறுபடும். கிரீன்லாந்தில் வசிக்கிற 'எக்சிமோ’க்களுக்கு இட்லி சரிவராது. வட நாட்டுக்காரங்களுக்கு கோதுமை எவ்வளவு நல்லதோ, அதேமாதிரி, நமக்கு அரிசியும் சிறுதானியமும்தான் ரொம்ப நல்லது.''

'அப்படின்னா அரிசி சாப்பிடலாம்னு சொல்றியா?'

'இன்னைக்கும் பிறந்த குழந்திக்கு, தாய்ப்பால் தவிர, திட உணவுக்கு அரிசி கஞ்சிதான் கொடுக்கிறோம். மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, வீட்டுப் பெரியோருக்குக் கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், சிற்றுண்டியாக பொரி, ராத்திரியில் அரிசி கஞ்சினு ஒரே பருவத்துல விளைஞ்ச நெல்லைத் தேவைக்கு ஏற்றமாதிரி, தேவைப்படும் நபருக்கேற்றமாதிரி தயாரிச்சது தமிழ் பாரம்பரியம்.'

'சூப்பர் பாட்டி. ஆனா, கைக்குத்தல் புழுங்கல் அரிசி பிரவுன் கலர்ல இருக்கே!'

'புழுங்கல் அரிசியில் இருக்கிற தவிடு, உமியில் நிறைய சத்துக்கள் சேர்ந்து அரிசியைச் செறிவூட்டி மருத்துவ ஊட்டச்சத்து உணவாக்கிடுறாங்க. வைட்டமின் பி, நார்ச்சத்து, ஆன்ட்டிஆக்சிடெண்ட்னு இந்த அரிசியில்தான் கிடைக்கும். வெள்ளை அரிசியில் அது எதுவும் கிடையாது!'

'ஓகே... ஓகே... அப்ப என்னதான் லஞ்ச்?'

'வரகரிசியும், வழுதுணங்காயும்... ஒளவையார் காலப் பாரம்பரிய ரெசிப்பி.'

'என்னது வழுதுணங்காயா..?'

'கத்தரிக்காயோட பாரம்பரியப் பெயர். வரகரிசியில் சுண்டைவத்தல் போட்ட புளிக்குழம்பும், கத்தரிக்காய் பொரியலும் வெச்சிருக்கேன்னு சொன்னேன். சாப்பிட்டுப் பார்த்திட்டு, நீயே 'ஜொள்ளு’வே... இப்போ கிளம்பு.'

- மருந்து மணக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு