Published:Updated:

வைரஸ், டைபாய்டு, டெங்கு, சிக்கன்குன்யா... காய்ச்சல்களை அறிந்து வருமுன் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

வைரஸ், டைபாய்டு, டெங்கு, சிக்கன்குன்யா... காய்ச்சல்களை அறிந்து வருமுன் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
News
வைரஸ், டைபாய்டு, டெங்கு, சிக்கன்குன்யா... காய்ச்சல்களை அறிந்து வருமுன் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

வைரஸ், டைபாய்டு, டெங்கு, சிக்கன்குன்யா... காய்ச்சல்களை அறிந்து வருமுன் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

'காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்' காய்ச்சலின் கொடுமையை எளிதாய்  உணர்த்தும் பழமொழி இது. காய்ச்சல் வந்தாலே உடல் சோர்வடைந்து,  உடம்பு நெருப்பாய் கொதிக்கும், எதுவும் சாப்பிடப்பிடிக்காது, பசியின்மை, அடித்துப் போட்டதுபோல் உடம்பு வலி என சில நாள்கள் ஆளை படுத்த படுக்கை ஆக்கி, பாடாகப்படுத்தி எடுத்துவிடும். 

சாதாரண காய்ச்சலுக்கே இந்த நிலை என்னும்போது, இந்த காலகட்டத்தில் வைரஸ் காய்ச்சல், மலேரியா, சிக்கன் குனியா, பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என நித்தம் ஒரு புது பெயரில் காய்ச்சல் வருகின்றன. இதுமட்டுமல்லாது, இன்னமும் பெயர் வைக்காத காய்ச்சல் வகைகளும் உள்ளன. இப்படி பரவக்கூடிய காய்ச்சல்களில் உயிருக்கு உலை வைக்கும் அபாயகரமான காய்ச்சல்களும் உள்ளன. இந்நிலையில், மர்மக் காய்ச்சலுக்கு இத்தனை பேர் பலி, இவ்வளவு பேர் மருத்துவமனையில் அனுமதி என நாலாபுறமும் இருந்து வரும் செய்திகளும் நாளும் நம்மை பதைபதைக்க வைக்கிறது.

"பெரும்பாலான காய்ச்சல் கிருமிகள் மூலம் பரவக்கூடியவை. கொசு, ஈக்கள், காய்ச்சல் பாதித்த ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் காய்ச்சல் பரவக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நிலையில் அக்கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகி விடுகிறோம். இப்படி பரவக் கூடிய பல காய்ச்சலுக்கு அசுத்தமான காற்று, சுகாதாரமற்ற நிலையில் உள்ள குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவு என சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் ஆகியவைதான் பெரிதும் காரணமாக உள்ளன. இதற்கு காய்ச்சல் உருவாகும் மற்றும் பரவும் விதம் குறித்த அறியாமையால்தான் பல்வேறு விதமான நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்" என்கிறார் பொதுநல மருத்துவர் அமுதகுமார். மேலும் காய்ச்சலில் உள்ள வகைகளையும் அதன் அறிகுறிகளைக் கொண்டு எந்த காய்ச்சல் என இனம் காண்பது, தீர்வுகள் குறித்தும் விவரிக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸ்களினால் ஏற்படும். அவ்வாறு காய்ச்சல் ஏற்படும்போது, உடல்நிலை மிகவும் மோசமாவதுபோல், வேறு சில அறிகுறிகளுடன் காணப்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், நோய்கிருமிகளால் உடலில் பாதிப்பு ஏற்படும்போது காய்ச்சல் ஏற்படும். இதுவே, மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளில் கடுமையாகத் தாக்கும்போது உயிரிழப்பும் ஏற்படலாம். 

அதற்கு முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, நமக்கு வந்திருப்பது எந்த வகையான காய்ச்சல் என்பதுதான். எனவே, ஒவ்வொருவரும் காய்ச்சலை சாதாரணமாக எண்ணாமல், அவற்றில் உள்ள வகைகளை தெரிந்துகொள்ள வேண்டும். சரி, இப்போது காய்ச்சலில் உள்ள வகைகளைப் பார்ப்போம்.

காய்ச்சல்

உண்மையில் காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல அது பல நோய்களுக்கான அலெர்ட் அறிகுறிகள். உடலில் கிருமி தொற்று ஏற்படும்போது, அதை எதிர்த்து போராடும் உடல் எதிர்ப்பு சக்தியின் போராட்டமே காய்ச்சல் எனப்படும். இந்த போராட்டத்தின் தன்மையைப் பொறுத்து உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதாவது, சராசரியாக ஒரு மனிதனின் உடல் வெப்பநிலை 98.4°F (37°C) என்று இருக்க வேண்டும். அதற்கு மேல் வெப்பம் அதிகரிப்பதை காய்ச்சல்,  ஜுரம் என்கிறோம். காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.  இது சாதாரண காய்ச்சலாக இருந்தால் சில ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும். 

வைரஸ் காய்ச்சல்

பெரும்பாலான வைரஸ் காய்ச்சல், அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும். பொதுவான வைரஸ் காய்ச்சலானது, ஒரு வாரம் வரை நீடிக்கலாம். குறிப்பாக இந்த காய்ச்சலானது சாதாரண காய்ச்சலாகத் தொடங்கி மூன்று நாள்களுக்குப் பிறகு அதிகப்படியான காய்ச்சலை ஏற்படுத்தி, பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்து விடும். பொதுவாக இந்த வகையான காய்ச்சல் தொண்டையில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம்.

டைபாய்டு

பொதுவாக, மழைக்காலம் தொடங்கி, பனிக்காலம் முடியும் வரைக்கும் டைபாய்டு காய்ச்சல்  ஏற்படும். சுகாதாரமற்ற உணவு மற்றும் குடிநீர் போன்றவை மூலம் நம் உடலுக்குள் நுழையும் `சால்மோனல்லா டைபை’ (Salmonella typhi) எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் இந்தக் காய்ச்சல் வருகிறது. இந்தக் கிருமிகள் சிறுகுடலை அடைந்து உடனே ரத்தத்தில் கலந்துவிடும். தலைவலி, விட்டு விட்டு காய்ச்சல் முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும், காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசியின்மை. வாந்தி, வயிற்று வலி வரும். உடற்சோர்வினால் மயக்கம் உண்டாகலாம். 

மலேரியா

மலேரியாவும் கொசுக்கடியால் ஏற்படும் ஒரு வகையான காய்ச்சல் ஆகும். வெப்ப மண்டலப்பகுதியில் வாழும் பல மக்கள், இந்த காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். இது வந்தால், உடல் நடுக்கத்துடன் காய்ச்சல் இருக்கும். இதன் தீவிரம் அதிகம் இருந்தால், மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

சிக்கன் குன்யா

சிக்கன் குன்யா என்பது கொசுக்களின் மூலம் வைரஸானது உடலைத் தாக்கும். இது மலேரியா மற்றும் டெங்குவை விட சற்று வீரியம் குறைந்ததுதான். ஆனால் இந்த காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலியுடன் மூட்டு வலியும் அதிகமாக இருக்கும். 

பன்றிக் காய்ச்சல்

ஹெச் 1 என் 1 என்னும் ஒரு வகையான இன்புளுயன்சா வகை வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுவதே. இந்த வைரஸ் உடலைத் தாக்கினால், அதிகப்படியான காய்ச்சல், தொண்டையில் நோய்த்தொற்று மற்றும் கல்லீரலில் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தும். 2010-ம் ஆண்டில் இந்த நோய் தாக்கத்தினால், பலர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த நோய்க்கான

மருந்தான டாமிப்ளூ (Tamiflu) கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இந்தக் காய்ச்சலை சரியான நிலையில் கண்டுபிடித்து, சிகிச்சை பெற வேண்டும்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு ஒரு உயிர்க்கொல்லி காய்ச்சல்.  ‘டெங்கு' (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல். ‘ஏடிஸ்' (Aedes) எனும் கொசுவின் மூலம் மட்டுமே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் கிருமி பரவுகிறது. கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, வயிற்றுவலி, கண்ணுக்குப் பின்புறம் ஏற்படும் வலி, தொடர்ச்சியான வாந்தி, உடல்சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு உடலில் அரிப்பு, சிவப்புப் புள்ளிகள் தோன்றும். இந்த காய்ச்சலின் தீவிர நிலையில், உடலின் உட்பகுதியில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். ரத்த தட்டையணுக்கள் குறைந்து விடும்.

மூளைக்காய்ச்சல்

மூளைக்காய்ச்சல் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் காசநோய் கிருமித் தாக்குதலால் ஏற்படுகிறது. மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காற்றின் மூலமும் கொசுவின் மூலமும் பரவக்கூடியவை. மூளைக்காய்ச்சல் உள்ளவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் வெளிப்படும் கிருமி அருகில் இருப்பவரிடம் பரவி விடுகிறது. கழுத்து வலி, காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கம் ஆகியவை மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கலாம். இது மூளை பாதித்து, அடிக்கடி வலிப்பு மற்றும் தலைவலியை உண்டாக்கும்.  

பாதுகாத்துக்கொள்வது எப்படி? 

கொசுக்கடியிருந்து தப்பிப்பதன் மூலம் மலேரியா, டெங்கு,சிக்கன் குனியா, யானைகால் நோய், மூளைக்காய்ச்சல் போன்வற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

பாதுகாக்கப்பட்ட அல்லது காய்ச்சிய நீரை குடிப்பது, உணவுகளில் ஈ மொய்க்காமல் பாதுகாத்துக்கொள்வதன் மூலம் வயிற்றுப்போக்கு, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றால் ஏற்படும் காய்ச்சல்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். 

முறையான பரிசோதனை இன்றியோ, மருத்துவரின் ஆலோசனையின்றியோ, தாமாக மருந்து மாத்திரையை  உட்கொள்ளும்போது, அது நோய்க்கான அறிகுறிகளை குறைத்து விடும். நோயின் தீவிரம் வெளியே தெரியாமல் உடல்நிலை மோசமடைந்து உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம். 

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு மற்றும் மலைவேம்பு குடிநீர்  ஆகியவற்றைக் குடிக்கலாம்.

நோய்களின் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளும் பொதுவான வழிமுறைகள்:

* பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீரை அருந்த வேண்டும்.

* வீட்டிலும் வீட்டின் சுற்றுப்புறத்திலும் தண்ணீர் தேங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும்.

* வெளியே செல்லும்போது தவறாமல் காலணிகளை உபயோகிக்க வேண்டும்.

* பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

* இருமல், தும்மலின்போது கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்.

* பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.

* பாதுகாக்கப்படாத இறைச்சி உணவுகளை உண்ணக் கூடாது. 

* பாலைக் காய்ச்சி குடிக்க வேண்டும்.

* காய்கறி பழங்களை  நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

* நகங்களை வெட்டி அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* சுகாதாரமற்ற சூழ்நிலையில் விற்கப்படும் உணவுப்பொருள்களை வாங்கி உண்ணக்கூடாது.

* சாப்பிடும் முன்பு, மலம் கழித்த பின்பு கைகளைக் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.