Published:Updated:

ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 12

ஆழ்ந்தத் தூக்கத்துக்கு அமுக்கராங்கிழங்கு

ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 12

ஆழ்ந்தத் தூக்கத்துக்கு அமுக்கராங்கிழங்கு

Published:Updated:

'ஷாலூ குட்டி... இன்னும் என்ன தூக்கம்.. காலேஜுக்கு நேரமாச்சு... சீக்கிரம் எழுந்திரிம்மா!'

'நைட் தூங்க எவ்வளவு லேட்டாயிடுச்சு. உனக்கே தெரியாதா? எட்டு மணிக்குக் குறைஞ்சு என்னை எழுப்பாத பாட்டி ப்ளீஸ்...'

''உனக்கு, தூங்குற நேரம் ராத்திரி ஒரு மணியிலிருந்து... எட்டு மணியா? இப்படி நோயை நீயே வரவழைச்சுக்கிறியேம்மா?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'என்ன பாட்டி? லேட்டா தூங்கி, லேட்டா எழுந்தாக்கூட வியாதியா..?''

'ஆமாம்டீமா... நிலவு இந்த உலகத்தை ஆளறப்ப தூங்கியும், சூரியன் ஆளும்போது விழிச்சிட்டும் இருக்கிறதுதான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளா சகல ஜீவராசிகளும் பழகியிருக்கு. அதை, கரன்ட்டும் பல்பும் கண்டுபிடிச்ச அன்னைக்கே நாம் மீற ஆரம்பிச்சுட்டோம்.'

'லைட்டு வெளிச்சம்தானே தரும். வியாதியையா தரப்போகுது. என்ன பாட்டி சொல்ற நீ..?'

''எல்லா அறிவியல் பயன்பாடுமே அறத்தோடு, அதன் அளவோடு பயன்படுத்தும் வரைதான் சரி... இயற்கையை ஜெயிச்சுட்டோம்கிற அகந்தை வரும்போது அது நம்மளை அழிக்க ஆரம்பிச்சிடும்.'

'சரி பாட்டி... ராத்திரியில் தூக்கம் சீக்கிரம் வர மாட்டேங்குது... என்ன செய்யட்டும்?'

'தினமும் சாயங்காலத்துல 45 நிமிஷம் நடைப்பயிற்சி செய்யணும். போயிட்டு வந்ததும் குளிக்கணும். இரவு தண்ணீர் அதிகம் கலந்த பாலில் ஜாதிக்காய்த்தூள் ஒரு சிட்டிகை போட்டுக் குடிச்சிட்டு, சின்னதா ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்'

ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 12

'பால், பழமா.. அய்யோ வெயிட் போடுமே...'

'நீ சரியா தூங்கலைன்னாலும் வெயிட் போடத்தான் செய்யும்; அத்தோட பாலை மருந்தாகக் கொஞ்சம் சாப்பிடுறதுனால வெயிட் போடாது. சின்ன வாழைப்பழம், ஒரு இட்லியின் கலோரி அளவுதான். கூடவே, செரட்டோனின் சத்தையும் தருதுனு மருத்துவர்களே சொல்லி இருக்காங்க.'

'சரி... இதைச் சாப்பிட்டும் தூக்கம் வரலைன்னா, என்ன செய்யறது?'

'சித்தமருத்துவத்தில், அமுக்கராங் கிழங்குனு ஒரு வேர்க்கிழங்கு இருக்கு. அதைப் பாலில் போட்டு வேகவெச்சு எடுத்து, பொடிச்சுக்கணும். இதை அரை டீஸ்பூன் அளவு பாலில் சேர்த்து ராத்திரியில் குடிக்கலாம்.  நல்லாத் தூக்கமும் வரும். நரம்புகளுக்கும் நல்லது. வயசானவங்களுக்கு வரும் மூட்டு வலிக்கும் சேர்த்து, இது நல்ல பலனைத் தரும்.'

'பாட்டி, என் ஃப்ரண்டோட அம்மா, எப்பவும் கவலையும், ஏதோ சிந்தனையுமா மனசைப் போட்டுட்டு உழட்டிட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது உன் கை வைத்தியம் இருக்கா?'

'அவங்க மருத்துவரை பார்த்து வைத்தியம் செஞ்சுக்கிறதுதான் நல்லது.  சித்த மருத்துவர்கிட்ட போனால், 'சடாமாஞ்சில்’னு ஒரு மூலிகையில் செஞ்ச மருந்து தருவாங்க; அது மன உளைச்சல் போக்கி, தூக்கத்தை வரவழைக்கும்.'

'மருந்தே இல்லாமல் தூங்கவைக்க முடியாதா பாட்டி'

''ஏன் முடியாது... யோகாவில் இப்ப,  ரிலாக்சேஷன் டெக்னிக்ஸ் (Relaxation Techniques-) நிறையவே வந்திடுச்சு. 'யோக நித்திரா பயிற்சியில் இருக்கிற அந்த  உடனடி விரைவான ஆழ்ந்த ரிலாக்சேஷன் டெக்னிக்ஸ் (Instant, Quick, Deep, Relaxation Techniques) மூலமா ஆழ்ந்த தூக்கத்தை வரவைக்க முடியும்’னு அறிவியல்பூர்வமா நிருபிச்சிருக்காங்க... இதெல்லாம்விட, தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சாலே, நல்ல தூக்கம் வரும்.'

ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 12

'ஆமா பாட்டி. போன சனிக்கிழமை, எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சிட்டு, காலேஜுக்குப் போய் கெமிஸ்ட்ரி கிளாஸ்ல தூங்கி வழிஞ்சு திட்டு வாங்கினேன். அப்படியொரு சுகமான தூக்கம்... ராத்திரியில் வர மாட்டேங்குது.'

''நல்லெண்ணெயில் சீரகத்தைப் போட்டுக் காய்ச்சிவெச்சுக்கலாம். வாரம் இரண்டு நாள் இந்தத் தைலத்தைத் தடவிக் குளிச்சிட்டு வந்தா, தூக்கமின்மைக்குக் காரணமான பித்தத்தைப் போக்கிடும்.'

'தூக்கம் வரலைன்னா, ரத்த அழுத்தம் கூடிடும்னு சொல்றாங்களே பாட்டி...'

'ரத்த அழுத்தம் இருந்தா, தூக்கம் வராது; தூக்கமில்லைன்னா, ரத்த அழுத்தம் அதிகமாயிடும்.  உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கிறவங்க, காலையில் முருங்கைக் கீரை சூப் செஞ்சு சாப்பிடுறது, மோர் சாதத்தில் சின்ன வெங்காயம் சேர்ப்பது, சாப்பாட்டுக்குப் பிறகு சீரகத்தண்ணீர் குடிக்கிறதுன்னு பழக்கப்படுத்திக்கிட்டா, பீபியும் சீராகும்.   தூக்கமும் தன்னால வரும்.'

- மருந்து மணக்கும்...