Published:Updated:

மனமே நலமா?-29

காதில் கேட்ட காதல் குரல்!

மனமே நலமா?-29

காதில் கேட்ட காதல் குரல்!

Published:Updated:

முகம் வாடிப்போய், மௌனத்தில் ஆழ்ந்திருந்த அருணுக்கு வயது 26. சின்ன வயதில் இருந்தே படிப்பும் சரியாக ஏறவில்லை. எப்படியோ 10-வது வரை படித்தான். 10-ம் வகுப்பில் மார்க் குறைவாக வாங்கியதால், கஷ்டப்பட்டு 11-ம் வகுப்பில் சேர்த்துவிட்டார் அவன் அப்பா. ஆனால், 'இதுக்கு மேல என்னால படிக்க முடியாது. என்னை விட்டுடுங்க. நான் எங்காவது வேலைக்குப் போறேன்’ என்று பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி, தற்போது, சேல்ஸ் எக்ஸிகியூட்டிவாக வேலை பார்க்கிறான்.

மனமே நலமா?-29

அருண் வசிக்கும் தெருவிலேயே வசிப்பவள் கல்லூரி மாணவி ஷாலினி.  தினமும் ஷாலினி கல்லூரிக்கு காரில் செல்வதை தன் வீட்டு பால்கனியில் நின்றபடியே பார்ப்பான். திடீரென்று ஒரு நாள், ஷாலினி தன்னைக் காதலிப்பதாக நம்ப ஆரம்பித்திருக்கிறான் அருண். அதன் பிறகு, தினமும் ஷாலினியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தெரு முனையில் உள்ள டீக்கடையில் தவம் கிடக்க ஆரம்பித்திருக்கிறான். ஒருநாள் தன் பெற்றோரிடம், 'அந்தப் பொண்ணும் நானும் காதலிக்கிறோம். எங்களுக்குக் கல்யாணம் செஞ்சுவைங்க. நீங்கதான் இதுபத்தி அந்தப் பொண்ணு வீட்ல போய்ப் பேசணும்’ என்று கூறியிருக்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனமே நலமா?-29

முதலில் மறுத்த பெற்றோர் தொடர்ந்து அருணின் தொந்தரவு தாங்காமல் ஒரு கட்டத்தில், பெண் கேட்க ஷாலினியின் வீட்டுக்கு சென்றனர். ஷாலினியின் பெற்றோரோ, 'என்ன தைரியம் இருந்தா, என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்பீங்க? திரும்பவும் இப்படி வந்தீங்கன்னா, போலீஸில் புகார் கொடுத்து உள்ளே தள்ளிடுவேன்' என்று கோபத்துடன் துரத்திவிட்டனர். ஷாலினியும் 'அருண் யார் என்றே எனக்குத் தெரியாது’ என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அருண் எதையும் நம்பத் தயாராக இல்லை. 'பெற்றோருக்குப் பயந்துதான் ஷாலினி அப்படிச் சொன்னாள்’ என்று மட்டும் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறான்.

இருவரின் பெற்றோரும்தான் தங்கள் காதலுக்கு எதிரிகள் என்று தீவிரமாக நம்பிய அருண், அதிரடியாக சில விஷயங்களைச் செய்தான். தனக்கும், ஷாலினிக்கும் கல்யாணம் நடக்கப்போவதாக ஒரு திருமண அழைப்பிதழை அச்சடித்து, பலருக்கும் கொடுத்தான். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள், ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஷாலினியின் உறவினர்களின் முகவரியைத் திரட்டுவது அவனுக்குப் பெரிய விஷயமாக இருக்கவில்லை. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. உடனடியாக அருண் மீது போலீஸில் புகார் கொடுத்தனர் ஷாலினியின் பெற்றோர்.

'ஒருதலைக் காதல், அதனால்தான் அருண் இப்படிச் செய்திருக்கிறான்’ என்று நினைத்த போலீஸ் அருணைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. ஷாலினியின் பெற்றோருக்குப் பயந்து, அருணை ஜாமீனில் எடுக்க முன்வரவில்லை அவன் தந்தை. இப்படியே ஆறு மாதங்கள் சென்றன.

ஆறு மாத ஜெயில் வாழ்க்கை அருணை ரொம்பவே மாற்றியிருந்தது.  நாம்தான் தப்பாக நடந்துகொண்டோமோ என்று நினைக்க ஆரம்பித்தான். அதற்குள் ஷாலினியின் பெற்றோரின் கோபமும் குறைந்து, 'அவனுக்கு ஏதோ மனநலப் பிரச்னை. இனி, அவனை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்’ என்றனர். ஜாமீனில் வெளியே வந்த அருணை, இப்போது என்னிடம் அழைத்து வந்திருக்கின்றனர்.

அருணிடம் பேசினேன். 'எனக்குள் ஒரு குரல், 'அந்தப் பொண்ணு உன்னைக் காதலிக்கிறா’னு சொல்லிச்சு டாக்டர். அதனால இப்படிப் பண்ணிட்டேன்' என்றான்.

அருணுக்கு 'கிளாசிக்கல் எரடோமேனியா டெல்யூஷன்’ (Classical Erotomania Delusion) என்ற பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதாவது, சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள் நம்மைக் காதலிக்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றும். திடீரென்று காதில் ஒலி கேட்கிறது என்றால், அதை 'டெல்யூஷன்’ என்போம். 'எரடோமேனியா டெல்யூஷன்’ பிரச்னை மூளையில் உள்ள  செரட்டோனின் போன்ற ரசாயனங்களின் சமநிலைக் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. ஷாலினி தன்னைக் காதலிக்கிறாள் என்று அருண் நினைக்கத் தொடங்கி, ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நினைவிலேயே அவன் ஆறு மாதங்கள் ஓட்டியிருக்கிறான். அதன் பிறகு சிறையில் ஆறு மாதம்

மனமே நலமா?-29

இருந்திருக்கிறான். அதற்குள் அவனுக்குள் ஏற்பட்டிருந்த பிரச்னை சற்றுக் குறையத் தொடங்கவே, இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறான். இருப்பினும் அவனுக்குள் மன அழுத்த பாதிப்பும் இருந்தது.

தற்போது அருணுக்கு இந்தப் பாதிப்பு குறைந்திருந்தாலும் திரும்பவும் எப்போது வேண்டுமானாலும் அது வரலாம். எனவே, முதல் கட்டமாக, அவனது மூளையில் உள்ள ரசாயனங்களைச் சமநிலைக்குக் கொண்டுவர மாத்திரைகள் பரிந்துரைத்தேன்.

அதன் பிறகு அவனுக்கு சைக்கோஎஜுகேஷன் தெரப்பி அளித்தேன். அவனுக்கு ஏற்பட்ட பிரச்னை பற்றியும், ஏன் ஏற்பட்டது என்பது பற்றியும், இது எதிர்காலத்தில் மீண்டும் வராமல் தடுக்கவும், வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக்கொள்வதன் அவசியத்தைப் பற்றியும் கவுன்சலிங் அளித்தேன். அதன் பிறகு, 'காக்னேட்டிவ் பிஹேவியர்’ தெரப்பி அளிக்கப்பட்டது. அதாவது ஒரு தவறு செய்தோம் என்றால், அதற்கு நம்மையே குற்றம் சொல்லிக்கொண்டிருப்போம். இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்களைப் போக்குவதற்காக இந்தத் தெரப்பி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்து வரும் அருண், எந்தப் பிரச்னையும் இன்றித் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறான்.