Published:Updated:

பால், வெங்காயச் சாறு, விளக்கெண்ணெய்... புருவம் அழகாக்க 9 வழிகள்!

பால், வெங்காயச் சாறு, விளக்கெண்ணெய்... புருவம் அழகாக்க 9 வழிகள்!
பால், வெங்காயச் சாறு, விளக்கெண்ணெய்... புருவம் அழகாக்க 9 வழிகள்!

மாசம் பொறந்து பத்து நாளாச்சு! இ.பி பில் கட்ட மறந்துட்டேனே...' என்று பதறியதெல்லாம் அந்தக் காலம். `மாசம் பொறந்து பத்து நாளாச்சு! த்ரெட்டிங் பண்ண மறந்துட்டேனே..!’ என்பது இந்தக் காலம். இளம் பெண்கள் முதல் அம்மாக்கள் வரை தங்கள் அழகைப் பாதுகாக்கக் காட்டும் அக்கறையை அப்பாக்களும் கணவர்களுமே அறிவார்கள்! இது ஒருபுறம் இருக்கட்டும்... ``நாங்க நேபாளி பரத் மாதிரியா வேணும்னு கேக்குறோம்?! புருவம் கொஞ்சமாச்சும் வளர்ந்தா போதும்... வளரவே மாட்டேங்குதுபா!'' என அலுத்துக்கொள்ளும் மக்களே... புருவம் அழகாக, நேர்த்தியாக வளர உங்களுக்கான சில வழிமுறைகள்...

புருவங்கள் எதற்காக?!

`நடிகை கார்த்திகாவோட புருவம் எவ்வளவு அழகு!’ என்று வியக்காதோர் மிகவும் சொற்பம். விஜயகாந்த் புருவத்தை உயர்த்தி, 'சிவ சிவ சங்கர...' என்று கோபமாக நடந்து வரும்போது என்னா கெத்து! நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதே புருவங்கள்தான். கண்களின் முக்கியத்துவத்தைக் காதலர்களே அறிவர்! அப்படிப்பட்ட கண்களுக்கு கிரீடமாக விளங்குபவை புருவங்களே! அதையும் தாண்டி நம் கண்களைச் சூரியன், தூசி, வியர்வை ஆகியவற்றில் இருந்து காத்து, பார்வையை மங்கவிடாமல் பார்த்துக்கொள்பவை இவை. சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும்... வேறு சிலருக்கு திடீரென்று அவற்றில் இருக்கும் முடி உதிர ஆரம்பித்து வயிற்றில் புளியைக் கரைக்கும்..

புருவ முடிகள் உதிர்வது ஏன்?

இதை ஆங்கிலத்தில் `Superciliary madarosis’ என்கிறார்கள். இது ஏற்படக் காரணம் தொற்றுநோய், தொழுநோய் போன்ற தோல் வியாதிகள், பிறவியிலேயே வரும் மரபுவழிக் குறைபாடு, தைராக்ஸின் சுரப்பி குறைபாடு, கீமோதெரபி (Chemotherapy) எனப்படும் புற்றுநோய் சிகிச்சை, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்களால் ஏற்படும் டெர்மடிட்டிஸ் (Dermatitis), தன்னுடல் தாக்குநோய் (Auto Immune Disease) போன்றவை.

புருவம் காக்க வீட்டிலேயே பின்பற்றக்கூடிய இயற்கை வழிமுறைகள்...

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து செய்துவரவும். விளக்கெண்ணெய் புருவ வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தேங்காய் எண்ணெய்

இதைத் தூங்குவதற்கு முன்னர் புருவத்தில் தேய்த்து, காலையில் கழுவிவிடவும். இது முடியின் புரோட்டீன் இழப்பைத் தடுக்கும். இதிலிருக்கும் லாரிக் அமிலம் (Lauric acid) புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து, முடி வளர உதவும்.

ஆலிவ் எண்ணெய்

இதை விரலால் புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்துக் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு இதைச் செய்துவந்தால் முடி வளரும். ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும். வைட்டமின் ஏ உடம்பில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெயை (Sebum) அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெய்

தூங்குவதற்கு முன்னர் இதைத் தேய்த்துவிட்டு காலையில் கழுவவும். இதிலிருக்கும் வைட்டமின் ஏ, பி, இ முடி வளர உதவும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லைத் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது விரைவில் முடி வளர உதவும்.

வெங்காயச் சாறு

ஒரு வெங்காயத்தைச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, மூன்று டீஸ்பூன் தண்ணீர் கலந்து தேய்த்துவந்தால், முடி வளரும். வாரம் மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் சல்ஃபர் முடி உதிர்வைத் தடுக்கும்.

முட்டை மஞ்சள் கரு

இதைப் புருவங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் பயோட்டின் முடி வளர உதவும்.

பால்

பாலைப் பஞ்சால் தொட்டுத் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். ஆறு மாதங்களுக்கு இதைத் தொடர்ந்து செய்துவர புருவ முடி சீராக வளரும்.

செம்பருத்தி இலை

செம்பருத்தி இலையை அரைத்து, புருவங்களில் தேய்த்துவர புருவ முடி வளரும்.

ஐப்ரோ ட்ரான்ஸ்ப்ளான்ட் (Eyebrow Transplant)

மரபுவழி நோய், தொழுநோய் போன்றவை உள்ளவர்களுக்கு இயற்கை முறையில் புருவ முடிகளை வளரவைப்பது கடினம். அவர்களுக்கான வரப்பிரசாதம்தான் இந்த ஐப்ரோ ட்ரான்ஸ்ப்ளான்ட் (உடலின் மற்ற பாகங்களில் இருந்து முடிகளை எடுத்து, புருவங்களில் மறு நடவு செய்தல்). பின்னந்தலை அல்லது உடலின் மற்ற பாகங்களில் முடி மிருதுவாக இருப்பதால், அவை இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

காஸ்மட்டாலஜிஸ்ட் (Cosmetologists) எனப்படும் ஒப்பனையியல் வல்லுநர்கள் மூலம் இது செய்யப்படுகிறது. உங்கள் விருப்பம்போல் புருவங்களை வடிவமைத்துக்கொள்ளலாம்! மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை இந்தச் சிகிச்சை செய்யப்படும். இதில் பக்கவிளைவுகள் மிகவும் அரிது. இரண்டு அல்லது மூன்று நாள்கள் புருவங்களில் வெள்ளைத் துணுக்குகள் இருக்கும். தோல் சிவப்பு நிறமாக இருக்கும். ஒரு வாரத்தில் பழையபடி அலுவலகத்துகு அல்லது நம் பணிக்குத் திரும்பலாம். ட்ரான்ஸ்ப்ளான்ட் செய்து மூன்று வாரங்களில் மறு நடவு செய்யப்பட்ட முடிகள் உதிர்ந்து, அதன் வேர்களில் இருந்து மறுபடி முடி வளரும். பின்னந்தலை முடிகள் என்பதால், அவை அடர்த்தியாக வளர்வதைத் தடுக்க 15 நாள்களுக்கு ஒருமுறை ட்ரிம் செய்ய வேண்டும். மறுநடவு செய்யப்படும் முடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 35,000 ரூபாய் வரை செலவாகும். ஆறே மாதங்களில் அழகான புருவங்களோடும் கொள்ளை கொள்ளும் அழகோடும் 'வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!' என்று கெத்து காண்பிக்கலாம்!