Published:Updated:

அலட்சியம் தவிர்ப்போம்!

அலட்சியம் தவிர்ப்போம்!

அலட்சியம் தவிர்ப்போம்!

அலட்சியம் தவிர்ப்போம்!

Published:Updated:
அலட்சியம் தவிர்ப்போம்!

'''வயசான காலத்துல, இப்படி ஒரு நோய்... நான் என்ன பாவம் செஞ்சேன் டாக்டர்?’ என்று கேட்ட 85 வயதான அந்த மூதாட்டியின் பரிதாபமும் பரிதவிப்பும் கலந்த குரல் இன்றும் என் மனதைப் பிசைகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு, அவரைப்போல இன்னொரு மூதாட்டியும் இப்படித்தான் நடை தளர்ந்து என்னிடம் வந்தார். மார்பகத்தில் வலி இருப்பதாகச் சொல்ல, பரிசோதித்ததில், அவருக்கு முற்றிய நிலையில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, ஒரு மார்பகத்தையே எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது'' - துயரச் சம்பவத்துடன் தொடங்கினார், பேட்டர்சன் கேன்சர் சென்டரின் மூத்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர்        எஸ். விஜயராகவன். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவ முகாம்களை நடத்திவருபவர். பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய் பற்றியும், எப்படிப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது பற்றியும் விவரிக்கிறார்.  

''மார்பகப் புற்றுநோய், மார்பக சுரப்பிகளில் இணைந்துள்ள குழாய்களின் உட்சுவர் அணுக்களில் 80 சதவிகிதம் வரை காணப்படுகிறது.  மூளையின் கட்டுபாட்டுக்கு அடங்காமல் இந்த வகையான உயிரணுக்கள் மிக வேகமாகப் பிரிந்து வளர்ந்து இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும் பல்கிப் பெருகி, சுற்றிலும் உள்ள திசுக்களை ஆக்கிரமித்துவிடுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலட்சியம் தவிர்ப்போம்!

மிகச் சீக்கிரத்தில் பூப்படைந்தவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், 35 வயதுக்கு மேல், தாமதமாகக் குழந்தை பெற்றவர்கள், 55 வயதுக்கு மேல் மெனோபாஸ் அடைந்தவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். குடும்பத்தில் ரத்தவழியில் யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய் நோய் இருந்தாலும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும், அதிக அளவில் ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்பவர்கள், தைராய்டு பிரச்னை, மன அழுத்தம், சில வகை நோய்கள், இறுக்கமான ஆடைகளை அணிவது, ரசாயனப் பூச்சுக்களை அதிக அளவு பயன்படுத்துதல் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்ஸ், எண்ணெயில் பொரித்த அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரலாம்.  

பொதுவாக மெனோபாஸுக்குப் பிறகு மார்பகம் தளர்ந்து, அளவில் சிறுத்துப் போகலாம். அந்த நேரத்தில் சிலருக்குக் கட்டிகள் தோன்றலாம். அவை சாதாரணக் கட்டிகளாகவோ அல்லது புற்றுநோய்க் கட்டிகளாகவோ இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் மாதம் ஒருமுறை சுய மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

புற்றுநோயின் ஆரம்ப நிலையில் அறிகுறிகள் தென்படாது. மார்பகத்தில் வலி இருந்தால், அது மிகவும் முற்றிய நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். மார்பகத்தில் வீக்கம், அக்குள் பகுதியில் தடிப்பு, முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளுதல், ரத்தம் அல்லது திரவம் கசிதல், முலைக்காம்பின் தோல் தடித்து, கருத்து நிறம் மாறி இருத்தல் இப்படி எந்த அறிகுறிகள் தென்பட்டாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். 80 சதவிகிதக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகள் இல்லை என்பதுதான் உண்மை.

அலட்சியம் தவிர்ப்போம்!

சந்தேகத்தின் பேரில் வருபவர்களுக்கு, புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய மேமோகிராம் பரிசோதனை செய்யப்படும். மார்பகத்தில் கட்டி இருப்பது உறுதியானால், மிக நுண்ணிய ஊசியின் மூலமாகக் கட்டியின் திசுக்களைச் சேகரித்து 'பயாப்சி’ செய்து, மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படும்.

மார்பகப் புற்றுநோய் கண்டறிந்த பிறகு, மார்பகத்தை அகற்றாமலேயே குணப்படுத்தக்கூடிய நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. எனவே அச்சப்படத் தேவை இல்லை. இந்த நிலை ஏற்படுவதைத் தவிர்க்க, பெண்கள் கண்டிப்பாக மாதம் ஒருமுறை வீட்டிலேயே மார்பகத்தை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். இதன் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்திவிடலாம்'' என்கிறார்.

- ரேவதி, படம்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism