Published:Updated:

மனமே நலமா?-30

அழகு அழைத்துவந்த ஆபத்து!

மனமே நலமா?-30

அழகு அழைத்துவந்த ஆபத்து!

Published:Updated:

ந்தியாவுக்கு 36 வயது. கணவர் முருகன் தனியார் நிறுவனம் ஒன்றின் பொது மேலாளர்.  இரண்டு குழந்தைகள். இளம் பெண் போல் அழகாக இருக்கும் மனைவி சந்தியாவின் மீது அளவு கடந்த பாசம். வீடு, கார், பணம் என வசதிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

ஒருமுறை உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றபோது, உறவுக்காரப் பெண் ஒருவர்,

மனமே நலமா?-30

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எனக்கும் உன் வயசுதான். ஆனா, முகத்தில் சுருக்கம் வந்து வயசானமாதிரி தெரியறேன். உடம்பும் குண்டாயிடுச்சு. நீ மட்டும் எப்படி 'சிக்கு’ன்னு இளமையா இருக்க... ரெண்டு பிள்ளை பெத்தவ மாதிரியே இல்லையே' என்று கூறியிருக்கிறார். இதைச் சந்தியா பொருட்படுத்தவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, கல்லூரியில் படித்த தோழிகளின் சந்திப்பின்போது, உறவுக்காரப் பெண் கூறியது போலவே, அவரது தோழிகளும் கூறியிருக்கின்றனர். பார்ப்பவரெல்லாம் சந்தியாவைப் புகழ, சந்தியாவுக்கு உள்ளுக்குள் மகழ்ச்சி தாண்டவமாடியது.  வெளியே காட்டிக்கொள்ளாமல், வீட்டுக்கு வந்து ஆள் உயரக் கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தன் அழகை ரசித்திருக்கிறார். கணவர் வந்ததும், அவரிடம் தன் அழகைப் பற்றிக் கேட்டிருக்கிறார். அவரோ, அவரது அழகைப் பற்றிப் பெரிதாக எதையும் சொல்லவில்லை. இதனால், வேதனை அடைந்த சந்தியா, கணவர் கூறியதையும், தோழிகள் கூறியதையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, 'தான் மற்றவர்களால் ரசிக்கப்பட வேண்டும்’ என்ற ஆசை துளிர்விட்டது. தன்னை அழகுபடுத்திக்கொள்ளவும், நல்ல உடைகளை உடுத்தவும், மற்றவர்களுடன் மிகவும் சோஷியலாகப் பழகவும் அத்துடன் அடிக்கடி பியூட்டி பார்லர் போகவும் ஆரம்பித்தார்.

மனமே நலமா?-30

இந்தநிலையில் ஒருநாள், சந்தியாவின் வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. 'ராங்’ கால் என்றாலும், அதில் பேசியவன், 'உங்கள் குரல் இனிமை’ என்று கூறி, பேச்சைத் தொடர்ந்திருக்கிறான். இது சந்தியாவுக்குச் சந்தோஷத்தைத் தர, இருவருக்குமிடையே உரையாடல்கள் தொடர்ந்தன. ஆனால், வரம்பு மீறி எதையும் பேச சந்தியா அனுமதிக்கவில்லை. ஒருகட்டத்தில் வீட்டு வேலைகள் எதிலும் கவனம் செலுத்தாமல் கணவன் வேலைக்குச் சென்றதும், நான்கு ஐந்து பேரிடம் போன் பேசுவதிலேயே நேரத்தைச் செலவிட்டார்.

சந்தியாவின் நடவடிக்கையில் முருகனுக்குச் சந்தேகம் வந்து, அவரிடமே விசாரிக்க, நடப்பதை ஒப்புக்கொண்டார். 'சும்மா போனில்தான் பேசுறேன், வேற எதையும் செய்யலை. எனக்கு போன்ல எவ்வளவு ரசிகர்கள் இருக்காங்கனு தெரியுமா?' என்றாள் கர்வத்துடன். இது முருகனுக்குக் கோபத்தை ஏற்படுத்த, இருவருக்கும் சண்டை வர, ''இனிமேல், போனில் எந்த நபருடனும் பேச மாட்டேன்' என்று சந்தியா உறுதியளிக்கவே சண்டை முடிவுக்கு வந்தது.

சில ஆண்டுகள் கழிந்தன. முருகன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சந்தியாவை பார்ட்னராகப் போட்டு, சென்னையில் ஒரு தொழில் தொடங்கினார். சந்தியாவுக்குத் தனியாக ஒரு மொபைல் போன் வாங்கிக்கொடுத்தார். பிசினஸில் இருவரும் எப்போதும் பிஸியாகவே இருந்தனர். ஆனாலும் சந்தியாவின் மனதில் ஒருவித ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது.

மீண்டும் பழையபடி சென்னையில் உள்ள ஒரு நபரிடம் பேச ஆரம்பித்தாள். அவன் தன் நண்பர்கள் சிலருக்கும் சந்தியாவின் எண்ணைக் கொடுக்க, அவர்களும் சந்தியாவுடன் பேச ஆரம்பித்தனர். 'வாட்ஸ்ஆப்’-ல் போட்டோவைப் பரிமாறிக்கொண்டனர். சந்தியாவைப் பார்த்ததும் அவர்களுக்குப் பிடித்துவிட்டது. 'நீங்க ரொம்பச் சின்னப் பெண் போல அழகா இருக்கீங்க. உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணணும்போல இருக்கு’ என்றெல்லாம் தேனொழுகப் பேச, 'போனில்தானே பேசுகிறோம், நேரிலா தப்புச் செய்கிறோம்’ என்று நினைத்தவர், ஒரு கட்டத்தில் வரம்பு மீறிப் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் சந்தியா போனில் பேசுவதைக் கண்டதும் முருகன் கண்டித்திருக்கிறார். சந்தியா அலட்டிக்கொள்ளாமல், 'நான் என்ன தப்பா செய்யறேன். போன்லதானே பேசுறேன். எனக்கு இப்படிப் பேசுறது பிடிச்சிருக்கு’ என்றார். இதனால் குடும்பத்தில் அமைதி குறைந்து, தொழிலும் பாதித்தது. கடைசியில் விவாகரத்து செய்யும் அளவுக்குப் பிரச்னை முற்றியது. இந்த நிலையில்தான் முருகனும், சந்தியாவும் என்னைச் சந்திக்க வந்தனர். நடந்தவற்றைப் பற்றி இருவரும் சொன்னார்கள்.

மனமே நலமா?-30

சந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை 'பிஹேவியரல் அடிக்ஷன்’  என்போம். சந்தியாவைப் பொறுத்தவரை 'பலருடன் பேசுகிறோமே தவிர, உடல்ரீதியான தவறு செய்யும் நிலைக்குப் போகவில்லை’ என்று சமரசம் செய்துகொண்டு அதைத் தொடர்ந்திருக்கிறார். எல்லோருக்குமே மற்றவர்கள் நம்மைப் புகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் சமூகம், குடும்பம், தனிமனித ஒழுக்கத்துக்குப் பயந்து நம் வாழ்க்கையை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறோம். சமூகம், சுற்றுப்புறச் சூழல், நண்பர்கள் என எங்காவது சில காரணிகள் அதைத் தூண்டிவிடும்போது நம் நிலையில் இருந்து விலக வாய்ப்பு ஏற்படுகிறது. அது நம்மைப் பற்றிய நல்ல விஷயமாகவும் இருக்கலாம், கெட்ட விஷயமாகவும் இருக்கலாம். இப்படி விலகும்போதுதான் சிலர் வாழ்வில் தடம் மாறிப்போகிறார்கள். சந்தியாவுக்கு அந்தத் திருமண விழாவில் உறவினர்களும், கல்லூரித் தோழிகளும் சொல்லியது அவரைத் தூண்டிவிட்டிருக்கிறது.

கவுன்சிலிங் மூலமாகவே இந்தப் பிரச்னையைச் சரிப்படுத்திவிட முடியும். 'வெறும் வார்த்தை என்பது ஒரு கட்டத்தில் நிஜமாகும், அதுவே விதியாக மாறிவிடும். இப்போது நீங்கள் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பம் வாய்க்காதவரை தவறு எதுவும் நடக்கவில்லை என்று கூறலாம். அதற்கான சந்தர்ப்பம் வாய்த்துவிட்டால்...? எந்த ஒரு பிரச்னையையும் முன்கூட்டியே தவிர்ப்பது நல்லது' என்று கவுன்சிலிங் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தவறுகளைப் புரிந்துகொண்டார் சந்தியா. அவர் கணவருக்கும் கவுன்சிலிங் அளித்தேன். இப்போது சந்தியாவுக்குக் குடும்பத்தினர், அலுவலகத்தைத் தவிர்த்து வேறு யாரிடமிருந்தும் போன்கால் வருவது இல்லை. சந்தியாவின் குடும்பம் இன்று சந்தோஷமாக இருக்கிறது.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism