Published:Updated:

வளையணும், நெளியணும், குனியணும்... இடுப்புக்கும் கொஞ்சம் வேலை கொடுங்க பாஸ்!

வளையணும், நெளியணும், குனியணும்... இடுப்புக்கும் கொஞ்சம் வேலை கொடுங்க பாஸ்!
வளையணும், நெளியணும், குனியணும்... இடுப்புக்கும் கொஞ்சம் வேலை கொடுங்க பாஸ்!

வளையணும், நெளியணும், குனியணும்... இடுப்புக்கும் கொஞ்சம் வேலை கொடுங்க பாஸ்!

’ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பது பழமொழி. ஆனால் ’ஐந்தில் வளைந்தாலும், பதினைந்துக்கு மேல் வளையாமல் போய்விடுகிறது’ என்பதே சமீபத்திய மொழி. இதை, இளம் வயதில் சொல் பேச்சுக் கேட்காத பிள்ளை, வளர்ந்த பிறகு தறுதலையாவான் என்று எடுத்துக்கொள்ளலாம். உடல்ரீதியாக இன்னோர் அர்த்தமும் கொள்ளலாம். இளம் வயதிலேயே துடிப்புடன் இருக்கவேண்டியதும், உடலை வளைத்து, நெளித்து அதற்குப் பயிற்சி கொடுக்கவேண்டியதும் அவசியம் என்பதையும் இந்தப் பழமொழி வலியுறுத்துகிறது. அப்படி நம் உடலில் அக்கறைகொள்ளவேண்டிய முக்கியமான பகுதி, இடுப்பு. துடிப்பான சிறுவயதில் அசைவுக்கு உள்ளாகும் இடுப்பு, மாணவப் பருவத்துக்குப் பிறகு ஏனோ அசையாமல் அப்படியே நிலைத்துவிடுகிறது. யோசித்துப் பார்த்தால், இன்றைய அதிவேக உலகில் நாம் இடுப்புப் பகுதிக்கு அவ்வளவாக அசைவு கொடுப்பதில்லை என்பது புரியும். தினமும் நம் செயல்பாடுகளில் இடுப்புப் பகுதியை நாம் எவ்வளவு அசைக்கிறோம் என்று ஆராய்வோமா?!


இறுகும் இடுப்பு

மலம் கழிக்க இந்திய பாணியில் அமைந்த கழிப்பறையே சிறந்தது. ஆனால், பெருநகரங்களில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நவீனம் என்ற பெயரில் இடம்பிடித்திருப்பதோ மேற்கத்திய பாணி கழிப்பறைகள் மட்டுமே. வயதானவர்கள், மூட்டுவலித் தொந்தரவால் அவதிப்படுபவர்களுக்கு மேற்கத்திய பாணிக் கழிப்பறைகள் வரப்பிரசாதம்தான். ஆனால், சிறு வயது முதலே மேற்கத்திய பாணிக் கழிப்பறைகளைப் பயன்படுத்தத்தான் பெற்றோர்களால் நகரத்துச் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. மலத்தை முழுமையாக வெளியேற்றி, இடுப்புப் பகுதிக்கு வேலையும் கொடுக்கும் இந்திய பாணி கழிப்பறையின் பயன்பாடு குறைந்ததால், காலைப் பொழுதின் தொடகத்திலேயே இடுப்புப் பகுதி இறுகிவிடுகிறது. 

அசைவில்லாத குளியல்

சரி... குளிக்கும்போதாவது இடுப்பை வளைத்து, குனிந்து, வாளியில் உள்ள நீரை மேலே ஊற்றிக் குளிக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. அலுங்காமல், குலுங்காமல் குளிக்கத்தான் ஷவர் (Shower) பயன்படுத்துகிறோமே. படுத்துக்கொண்டே நீச்சல் அடித்து, உடற்பயிற்சியோடு உடல் தூய்மையையும் செய்து வந்தது சென்ற தலைமுறையில்... பெரிய ’பாத் டப்களில்’ நீரை நிரப்பி, படுத்துக்கொண்டே அசையாமல் உடற்பயிற்சியில்லாமல் உடலைத் தூய்மை செய்துகொள்வது இன்றைய தலைமுறையில்! குளிக்கும்போதுகூட, இடுப்புக்கோ, அதன் எலும்புப் பகுதிகளுக்கோ நாம்வேலை கொடுப்பதில்லை என்பது தெளிவு.

உடற்பயிற்சியை மறந்த பள்ளிகள்

உடற்பயிற்சியை ஊக்குவிக்கும்விதமாக, பள்ளிகளில் வாரம்தோறும் நடந்த ’மாஸ் டிரில்களின்’ எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றன. தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் படிப்பை மட்டுமே வலியுறுத்தி, வாழ்க்கையைச் சீரழிக்கும் பள்ளிகளில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வாய்ப்பில்லை. பத்தாம் வகுப்பில் குறிப்பிட்ட பள்ளியில் இடம் கிடைக்க, ’கிண்டர்கார்டனிலேயே லட்சக்கணக்கில் ரூபாய்களைக் கொட்டி பிஞ்சுக் குழந்தைகளை அவதிக்குள்ளாக்கும் பெற்றோர்களுக்கு, கல்வியைத் தாண்டி பெரிய உலகம் இருப்பது தெரிவதில்லை. இளவயதில் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் இடுப்புப் பொருத்துகளை (Joints) வளைக்க, மாணவர்களுக்கு வாய்ப்பும் அவகாசமும் வழங்காமல் போனால், பொருத்துகள் இளமையிலேயே ஸ்திரத் தன்மை அடைந்து மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். நல்ல கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல... தேவையான கல்வியோடு, நல்ல ஆரோக்கியமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.

வளைவதைத் தடுக்கும் நாற்காலி!

இடுப்புப் பகுதியை வளைத்து, சப்பணமிட்டு உணவருந்தாமல், நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து உணவருந்துகிறோம். கம்பீரத்தை வெளிப்படுத்த அது தகுந்த நேரமல்ல. நாற்காலியில் அமர்ந்து உணவருந்தும்போது, நாற்காலியின் இடுப்புப் பகுதி நன்றாக வளைந்திருக்கிறதே தவிர, மனிதனின் இடுப்புப் பகுதி கடப்பாறையைப்போல நேராக நிற்கிறது. வயிற்றில் தொப்பைவிழுவதை கிண்டல் செய்ய, ‘வயித்தைச் சுத்தி ’டயர்’ விழுந்திருச்சிப் பாரு...’ என்று கூறுவது வழக்கம். இடுப்புக்கு வேலை கொடுக்காமல், அதீத சுகபோகியாக வாழ்ந்தால், வயிற்றைச் சுற்றி லாரி டயர் அளவுக்கு தொப்பை விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பூஜ்ஜியத்தைத் தாண்டாத ’ஆப்’

எவ்வளவு தூரம் நடந்தோம் என்பதைக் கணக்கிட ‘ஆப்’ (App)... எவ்வளவு கலோரிகள் செலவிட்டோம் என்பதை உறுதிப்படுத்த ‘ஆப்’... ரத்த அழுத்தத்தை அளவிடவும் ’ஆப்’... இந்த வரிசையில் ஒருநாளைக்கு எத்தனை முறை இடுப்புப் பகுதியை அசைத்தோம் என்பதை கணக்கிட ’ஆப்’ பயன்படுத்தினால், ‘பூஜ்ஜியத்தை’விட்டு நகராது கணக்கு. 

பெருஞ்சதையைச் சுமக்கிறோம்!

போலீஸ்காரர்களைக் கிண்டல் செய்வதற்காகக் கூறப்பட்ட தொப்பை, இன்று அவ்வளவாக அவர்களுக்கு இல்லை. நமக்குத்தான் விதவிதமான சைஸ்களில் இருக்கிறது. அந்த வகையில் நாமும் போலீஸ்காரர்களே! கீழே விழும் பேனாவை குனிந்து எடுக்க முடியாமல், கால் விரல்களின் துணையைத் தேடுகிறது மனது. நமது இடுப்புப் பகுதிக்கு வேலை கொடுக்காமல் இருப்பது மிகப்பெரிய பாதகம். குழந்தை பாரத்தைச் சுமக்கும் கர்ப்பிணிகளுக்கே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால்தான் சுகப்பிரசவம் நடக்கும். ஆனால், சுகமாக வாழும் நாம், குனியவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் இருப்பதால், கருவின்றியே வயிற்றைச் சுற்றி பெருஞ்சதையை சுமக்கவேண்டியிருக்கிறது.
உடல் உழைப்பின்றி, உணவுக்கட்டுப்பாடு மூலம் மட்டுமே ’ஜீரோ சைஸ்’ இடுப்பையும், உடல் அசைவின்றி மருந்துகளின் மூலம் மட்டுமே ’ஒல்லியான பெல்லி’யையும் விரும்புவது சாத்தியப்படலாம். ஆனால், குறுக்குவழியால் கிடைத்த பலனுக்கு விரைவில் பக்கவிளைவுகளும் சாத்தியப்படும் என்பதே நிதர்சனம். உடல் உழைப்போடு இருந்தால் மருந்துகளின்றி, பக்கவிளைவுகளின்றி வயிற்றுத் தசைகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

துருப்பிடிக்கவிடக் கூடாது!

`உரலைப் பயன்படுத்த வாய்ப்பில்லை... வழக்கொழிந்து போய்விட்டது. கிணற்றில் நீர் இரைக்க முடியாது... மழையில்லை. சரி, குனிந்து, நிமிர்ந்து நமது அலுவல்களையாவது செய்யலாமே... முடியாது, வலி பாடாகப்படுத்துகிறது. இப்படியே சொல்லிக்கொண்டு போனால், பயன்படுத்தாமல் துருப்பிடித்த பகுதியாக இடுப்புப் பகுதி மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. 

என்ன செய்யலாம்? சிறுசிறு வேலைகளை நாமே செய்வது, எளிய உடற்பயிற்சிகள், சில யோகப் பயிற்சிகள் (வில்லாசனம் (தனுராசனம்), பவனமுக்தாசனம், கலப்பையாசனம், பாதஹஸ்தாசனம்) போன்றவை நிச்சயமாக இடுப்புப் பகுதிக்கு வேலையைக் கொடுக்கும். ஆனால், இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதுதான் பிரச்னையின் தொடக்கமே! இப்போதிருந்தே இடுப்புப் பகுதியை வளைத்து, அசைத்து இடுப்பைப் பற்றியுள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்போம்!

அடுத்த கட்டுரைக்கு