Published:Updated:

முட்டை மஞ்சள் கரு நல்லது... எப்படி?!

முட்டை மஞ்சள் கரு நல்லது... எப்படி?!
முட்டை மஞ்சள் கரு நல்லது... எப்படி?!

முட்டை மஞ்சள் கரு நல்லது... எப்படி?!

முட்டை... பல காலமாக சர்ச்சைக்குப் பேர் போன ஓர் உணவு. இது சைவமா, அசைவமா... பிளாஸ்டிக் முட்டை... நாட்டுக்கோழி முட்டையில் கலப்படம்... வெள்ளைக்கரு நல்லதுதானா... அழுகிய முட்டையை சாப்பிடலாமா... என முட்டை குறித்து நீண்டுகொண்டே போகிறது சர்ச்சைப் பட்டியல். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் `பிக் பாஸ்’ வீட்டுக்குள் முட்டை காணாமல் போவதும் நிகழ்கிறது. அதிலும் ‘முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்குகிறார்கள்’ என்று இது குறித்த ஆரோக்கியப் பேச்சுகள் எழுகின்றன. உண்மையில், இது நமக்கு எந்த அளவுக்கு அவசியம், இதன் மஞ்சள் கரு நல்லதா, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, இதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்... அனைத்தையும் விரிவாக விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் பத்மினி...

புரதச்சத்து நிறைந்தது, மலிவான விலையில் கிடைப்பது, எல்லோராலும் உண்ணக்கூடியது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும் தாய்ப்பாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பது முட்டை. இயற்கையாகவே நம் உடலுக்கு வைட்டமின் டி-யை அள்ளித்தரும் முட்டையின் மஞ்சள்கருவைப் பலரும் வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.

இப்போது அசைவம் சாப்பிடாதவர்கள்கூட, முட்டையை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். காரணம், முட்டையில் இறைச்சிக்கு நிகரான கொழுப்பும் புரதமும் நிறைந்துள்ளன. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடனடியாக புரதம் மற்றும் கொழுப்பு கிடைக்கச் சிறந்த உணவு முட்டை.

ஆனால், எப்போதும் பலர் செய்யும் ஒரே தவறு, முட்டையின் மஞ்சள்கருவை ஒதுக்குவது. முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்தை வைத்துக்கொண்டு பலரும் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுகிறார்கள்.

உண்மையில், முட்டையின் வெள்ளைக் கருவைவிட மஞ்சள்கருவில்தான் அதிக ஊட்டச்சத்துத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் கே, அமினோ அமிலங்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கோலின், செலினியம், துத்தநாகம் போன்றவை நிரம்பியுள்ளன.

மஞ்சள் கரு, சில தகவல்கள்...

* கோழியின் உணவைப் பொறுத்து அதன் மஞ்சள்கருவின் அடர்த்தி இருக்கும்.

* ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற உதவும்.

* வெள்ளைக் கருவில் புரதம் மட்டுமே நிறைந்துள்ளது. ஆனால், மஞ்சள்கருவில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளன.

* இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளுக்கு வலுகொடுக்கும். ஆஸ்டியோபோரசிஸ் வராமல் தடுக்கும்.

* மஞ்சள்கருவில் உள்ள செலினியம் மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

* ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். உடலில் ஆக்சிஜன் சீராகப் பரவ உதவும்.

* இதில் நிறைந்துள்ள கோலின் ஊட்டச்சத்து, மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். முதுமையில் வரும் கண்புரையைச் சரிசெய்யும். அல்சைமர் மற்றும் மனஅழுத்தத்துக்கு நிவாரணம் தரும்.

* மஞ்சள்கருவில் உள்ள கோலின் ரத்த நாளங்களைப் பாதிக்கும் ஹோமோசைஸ்டின் அளவை (Homocysteine Level) ஒழுங்குபடுத்தும். மேலும், இது ஆன்டிஇன்ஃப்ளாமேட்டரியாகச் (Anti-inflammatory) செயல்பட்டு இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

* நாள் ஒன்றுக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான கொழுப்பின் அளவு 300. இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் 200 கிராம் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கொழுப்பின் அளவைச் சரிவிகித உணவின் மூலம் பெறுவது நல்லது.

* உண்மையில், மஞ்சள் கரு கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு, கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

* வாரத்துக்கு நான்கு முதல் ஐந்து மஞ்சள்கருவைச் சாப்பிடலாம். அதை வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது.

* முட்டையின் மஞ்சள்கருவில் கொழுப்பு சற்று அதிகம் இருப்பதால், வயிற்றுப் பகுதியில் மட்டும் சதை அதிகரிக்கும். வயிற்றுப் பகுதொயை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஓடி, ஆடி வேலை செய்யலாம். உடற்பயிற்சி, உடல் உழைப்பு இவையே இப்படி சதை போடுவதைத் தவிர்க்கப் போதுமானது.

நீங்கள் ஃபிட்டாக இருக்க வேண்டுமா... அப்படியானால் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்துச் சாப்பிடுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு