Published:Updated:

நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ

நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ
News
நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ

நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ

முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும். அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று! அதன் மகிமை அறிந்த ஒருவர் கவிதையாக வடித்துள்ளார்.

‘அவென்யூ அழகுபெறட்டுமே என்று

பூச்செடிகள் வளர்க்க...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதில் தப்பி வளர்ந்தது முருங்கை ஒன்று!

அதை வெட்டவேண்டும் என

சொன்னபோது பூச்சொரிந்து நின்றது.

முருங்கைப்பூ பால்கூட்டும்

முளைத்த பிஞ்சுக்குழம்பும் ருசியோ ருசி!

பிரசவித்த அக்காவுக்கு

மருந்தாகக் கொடுக்கையில்

நானும் ருசித்து ரசித்தேன்!'

சிலாகித்து எழுதும் அளவுக்கு முருங்கைப்பூவில் அத்தனை சத்துகள் நிறைந்திருக்கின்றன.

முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை எங்கு பார்த்தாலும் பரவிக் காணப்படுகிறது முருங்கை!

வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவ குணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்குப் பயன்படுத்திப் பழகியிருக்கிறோம். முருங்கைப்பூக்களின் பயன் அறிந்து இனிமேலாவது அவற்றைச் சமைத்து ருசிப்போமா?

முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி, “இன்றைக்கு பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்தப் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது இந்த முருங்கைப்பூ. இதை `இயற்கையின் வயாகரா' என்று சொல்வார்கள்.

இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. .

அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கஷாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.

மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.

முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு விந்து முந்துதல் பிரச்னை குறையும்.

முருங்கைப்பூக்களை உணவாகவோ மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் சிறக்கும். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூ சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வரலாம்.

முருங்கைப்பூவை துவையல் செய்தும் சாப்பிடலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் முருங்கைப்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.

இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, மேக நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும். மேலும், மாதவிலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி எனப் பல்வேறுவிதமான மனம், உடல் அவதிகளுக்கு ஆளாவார்கள். அப்போது முருங்கைப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மனம் அமைதி பெறும். உடல் கோளாறுகளும் நீங்கும். 

பள்ளி, கல்லூரி பயிலும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் இருந்தால்தான் அவர்கள் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். ஆகவே குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும் முதியோருக்கு வரக்கூடிய மறதி நோயைத் தடுக்கவும், வந்த நோயை விரட்டவும் இது நல்ல மருந்தாகிறது. கைப்பிடி அளவு முருங்கைப்பூவை அரைத்து அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை எனக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் நாம் எல்லோருமே கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். கம்ப்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கு 40 வயதுக்குமேல் ஆகிவிட்டால் கண்ணாடி அணியாமல் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களால் பேப்பர்கூட படிக்க முடியாது. 

வீடுகளில் இருப்பவர்கள் தொலைக்காட்சியே கதி என்று இருப்பதால் அவர்களுக்கும் விரைவில் கண்கள் வறண்டுபோதல், கண்ணிமைகளைச் சிமிட்டும் தன்மை குறைந்துபோவது, கண்களின்முன் மின்மினிப்பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம் ஏற்படுதல், தலைவலி, பார்வை மங்கல் எனக் கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில் முருங்கைப்பூவை நிழலில் உலர்த்தி பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிப்பதோடு கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறி கண் கோளாறுகள் சரியாகும். பூக்களுடன் பசும்பால் சேர்த்துக் காய்ச்சி அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து பிரச்னைகள் நீங்கும்.

முருங்கைப்பூ பால்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முருங்கைப்பூ பால் அருந்தி வந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும். இரண்டு கைப்பிடி முருங்கைப்பூவை 100 மி.லி பாலில் கொட்டி நன்றாக வெந்ததும் மசித்து, மூன்று ஏலக்காய், நான்கு பாதாம்பருப்பு பொடித்துப்போட்டு மேலும் 200 மி.லி பாலைச் சேர்த்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். முதலில் பச்சை வாசனை வீசும், குடித்துப் பழகினால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.

முருங்கைப்பூ சூப்

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத்தாளிக்க வேண்டும். அத்துடன் ஒன்றாகச் சேர்த்து அரைத்த தனியா, சீரகம், மிளகு மற்றும் சுக்கு, பூண்டு,வெங்காய கலவைகளைப் போட்டு லேசாக வதக்க வேண்டும். பிறகு அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பச்சை வாசனை போகுமளவு கொதிக்க விட வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய முருங்கைப்பூக்களைச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். பூ நன்றாக வெந்ததும் இறக்கினால் சூடான சுவையான முருங்கைப்பூ சூப் தயார். விரும்பினால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். அடிக்கடி இதைச் செய்து குடித்து வந்தால் சளித்தொல்லைகள் நெருங்காது.

முருங்கைப்பூ சாதம்

பாசுமதி அரிசியை உதிரியாக வடித்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது நெய் சேர்த்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையே இட்லித்தட்டில் முருங்கைப்பூக்களை வைத்து அரை வேக்காடாக வேக வைக்கவும். அதன்பிறகு சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாதம், முருங்கைப்பூ சேர்த்துக் கலக்க வேண்டும். அத்துடன் சிறிது சிறிதாக நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் சுவையான முருங்கைப்பூ சாதம் தயார். இது சத்தானது மட்டுமல்ல சுவையானதும்கூட!

முட்டைப் பொரியல்

வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய சீரகம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதைத்தொடர்ந்து நறுக்கிய பச்சை மிளகாய், கிள்ளிய கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் காம்பு நீக்கி தண்ணீரில் அலசிய முருங்கைப்பூக்களைப் போட்டுக் கிளற வேண்டும். நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி வைக்க வேண்டும். வெந்ததும் கிளறிவிட்டு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறினால் முருங்கைப்பூ முட்டைப் பொரியல் தயார். சாப்பிடச் சுவையாக இருக்கும்.

ஆண்மை அதிகரிக்கும்

முருங்கைக் கீரை, முருங்கைப்பூ இரண்டையும் சம அளவு எடுத்து நறுக்கி, எண்ணெயிட்டு வதக்கி  வறுத்த வேர்க்கடலையைப் பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். தாம்பத்யம்  சிறக்கும். இதை வேக வைத்துக் கடைந்து குழம்பாகவும் செய்து சாப்பிடலாம்.” என்றார்.

இது மட்டுமல்ல... முருங்கைப்பூவின் மகிமையைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.