
தா.காயத்ரி, கும்மிடிபூண்டி.
'எனக்கு வயது 42. 15 வருடங்களாக டூவீலர் ஓட்டி வருகிறேன். கடந்த மூன்று மாதங்களாக கழுத்து மற்றும் இடது கையில் அதிக வலி ஏற்படுகிறது. தூங்கி எழுந்ததும் என் இடது கையைத் தூக்கமுடியவில்லை. தொடர்ந்து சில மணி நேரங்கள் வலி நீடிக்கிறது. எனக்கு என்ன பிரச்சனை? எந்த மருத்துவரை அணுக வேண்டும்?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டாக்டர் துரைராஜ்,நரம்பியல் நிபுணர், மதுரை.
'கழுத்துப் பகுதிகளில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடைந்து, நரம்புகளை அழுத்துவதால் வலி ஏற்படும். பெரும்பாலும் இந்தப் பாதிப்பு வந்த பிறகு கைகளில் மதமதப்பு, பிறகு வலி என்று மாறி மாறி இருக்கும். ஒரே மாதிரியான வேலையை வெகு நேரம் செய்வது, அதிக நேரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது போன்றவற்றால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். இைதத் தவிர்க்க, நேராகப் படுத்துத்தான் தூங்க வேண்டும். தூங்கும்போது மல்லாக்க அல்லது குப்புறப் படுத்துத் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். தலையை ஒரு பக்கமாக வைத்துத் தூங்கக்கூடாது. வீட்டிலோ அலுவலகப் பணியின் போதோ அவ்வப்போது தலையை முன்னும் பின்னும் ஆட்டுவது, மெதுவாகத் திருப்பி கீழேமேலே பார்த்துத் தலையை அசைப்பது போன்ற சின்னச் சின்னப் பயிற்சிகளைச் செய்வது நல்லது. வலி அதிகமாக இருந்தால் மூளை நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.'

அமுதவள்ளி, மேட்டுபாளையம்
'எனக்கு வயது 44. சர்க்கரை நோய்க்கு முந்தைய ஸ்டேஜில் நான் இருப்பதாகப் பரிசோதனையில் தெரியவந்தது. அன்று முதல் என் மகள், தினமும் பாகற்காயைப் பொரியலாகச் செய்து தந்து, சாப்பிடச் சொல்கிறாள். தினமும் பாகற்காயை அதிகம் சாப்பிடுவது ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா? டயாபடீசுக்கான வாய்ப்பைக் குறைப்பதற்கான வழிகளைச் சொல்லுங்கள்.'
டாக்டர் டி.சுரேந்திர மோகன், பொது மற்றும் சர்க்கரை நோய் நிபுணர், காஞ்சிபுரம்.
'பாகற்காய் சாப்பிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், வறுத்துச் சாப்பிடும்போது அதிக அளவில் எண்ணெய் சேர்ப்பார்கள். எண்ணெய்் இல்லாமல் பாகற்காயைச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. வெறும் பாகற்காயை மட்டும் சாப்பிடுவதால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைத்துவிட முடியாது. சர்க்கரை நோயைத் தவிர்க்க மாவுச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் அரிசி உணவைத் தவிர்த்து சப்பாத்தி போன்ற கோதுமை உணவுகளை எடுத்துக்கொள்
ளலாம். தினமும் கட்டாயம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முறையான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்து சர்க்கரை நோயாளியாக மாறு
வதைத் தவிர்க்கலாம். சர்க்கரை நோய் வந்தபின் உணவுகளில் காட்டும் கட்டுப்பாடுகளை, இப்போதே கடைப்பிடிக்கத் தொடங்கினால் முன் கூட்டியே தடுக்கமுடியும்!'
எச்.தீபா, பிள்ளையார்பட்டி
'எனக்கு 18 வயதுதான். டீ, காபி கப் போன்றவற்றை எடுக்கும்போது, கைகள் லேசாக நடுங்குகின்றன. சின்ன வயதிலிருந்தே எனக்கு இப்படி இருப்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், என் சக தோழிகள், 'உனக்கு நரம்பு தளர்ச்சி இருக்கு... போய் டாக்டரைப் பார்’ என்கிறார்கள். நான் என்ன செய்ய, டாக்டர்?'

டாக்டர் பி.கே.முருகன், நரம்பியல் நிபுணர், மதுரை.
'இதை நரம்புத் தளர்ச்சி என்று சொல்ல முடியாது. தைராய்டு பிரச்னை, முறையான தூக்கமின்மை போன்ற காரணங்களால்கூட இந்த நடுக்கம் வரலாம். பதற்ற நோய் (Anxiety disorder) இருந்தாலும் கை நடுக்கம் ஏற்படும். நரம்புத் தளர்ச்சியாக இருந்தால் கை நடுங்கும்போது லேசான மயக்கம் வரும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பரம்பரையில் யாருக்காவது நரம்புத் தளர்ச்சி இருந்தால் உங்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. எதனால் கை நடுக்கம் ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிய, தயக்கமின்றி உங்கள் அருகில் உள்ள பொது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்!'