Published:Updated:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக ஒலித்து வருகிறது. அதை ஏற்று, ரூ.2 ஆயிரம் கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிபட்டி, ஈரோடு – பெருந்துறை மற்றும் மதுரையை அடுத்த தோப்பூர் ஆகிய 5 இடங்களை மத்திய அரசு பரிந்துரைத்தது.  அந்த இடங்களை மத்திய அரசின் குழுவினரும் பார்வையிட்டுச் சென்றனர். ஆனால், எங்கு மருத்துவமனை அமையப் போகிறது என்று இன்றைய தினம் வரை மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதுகுறித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையப் போகிறது என்பதை டிசம்பர் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். 

இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் அதிகரிக்கும். சாமானியர்களுக்கும் உலகத் தரமான சிகிச்சை எளிதாகக் கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.  

எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் என்னென்ன வசதிகள் அமையும்..?   

விளக்குகிறார், சமூக சமத்துவத்துக்கான  மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் 

"எய்ம்ஸ் (AIIMS) என்பது  All India Institute Of Medical Science என்பதன் சுருக்கம். மத்திய சுகாதாரத் துறையின் கீழ், அனைத்து மருத்துவ வசதிகளையும், மருத்துவக் கல்வியையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான்  இந்த மருத்துவமனை.  இந்நிறுவனம் டெல்லியில் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகத் தரத்திலான சிகிச்சைகள் மட்டுமின்றி, மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஏராளமான ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. நம் நாட்டில் முதன்முதலாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது இங்குதான். செயற்கை கருத்தரிப்பு மையமும் இங்குதான் முதலில் தொடங்கப்பட்டது. 

2012-ம் ஆண்டில் மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்ரகாண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் போன்ற  மாநிலங்களில் தொடங்கப்பட்டது. தமிழகத்தோடு சேர்த்து,  மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. 

எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் நிறைந்திருக்கும். அனைத்து துறைகளிலும் சிறப்பு வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் இருப்பார்கள். பணக்காரர்களுக்கு மட்டுமின்றி, எளிய மக்களும்  இங்கு சிகிச்சை பெறலாம். இலவச சிகிச்சை, மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட சலுகைக் கட்டண அடிப்படையிலான சிகிச்சை என பலதரப்பட்ட சிகிச்சைகள் இங்கே  வழங்கப்படும். உலகத் தரத்திலான ஆய்வுக்கூடங்கள் அமையும். 

மருத்துவர்களுக்கு இங்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு பணிபுரிபவர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடாது. மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வேண்டும்.  

மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, எய்ம்ஸ் நிறுவனங்களில் 650-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதுதவிர ஏராளமான துணை மருத்துவப் படிப்புகள், உயர் மருத்துவப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகளும் உண்டு. இப்படிப்புகளுக்கு மத்திய அரசு தனியாக நுழைவுத்தேர்வு நடத்துகிறது. தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் பட்சத்தில் கூடுதலாக 200 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாகும். 

தமிழக மருத்துவச் சூழலில் எய்ம்ஸின் வருகை புதிய உத்வேகத்தை உருவாக்கும். வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும். எளிய, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தரமான உயர் சிகிச்சை கிடைக்கும். 

வழக்கமாக மத்திய அரசு, தமிழக விஷயத்தில் காட்டும் அலட்சியத்தை எய்ம்ஸ் விஷயத்தில் காட்டாமல் உடனடியாக இடத்தை அறிவிக்க வேண்டும். கட்டுமானப் பணிகளையும் உடனே தொடங்க வேண்டும். தமிழக அரசு வழக்கம்போல் வளைந்து கொடுக்காமல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு