Published:Updated:

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 15

கீரைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் அற்புதம்டாக்டர் கு.சிவராமன், ஓவியம்: ஹரன்

பிரீமியம் ஸ்டோரி

'என்ன பாட்டி... இன்னைக்கும் கீரையா? இந்தக் கீரையை விடவே மாட்டியா நீ?'

'கீரை, பசிக்கான சாப்பாடு மட்டும் இல்லை. இது வைட்டமின் சத்துக்களைத் தர்ற டானிக். ஆரோக்கியத்துக்கு ரொம்ப அவசியமான உணவு.'

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 15

'அதுசரி, இந்தக் கீரை என்ன முள்ளுமுள்ளா இருக்கு?'

'வீசிங் இருக்கிறவங்களுக்கான தூதுவளைக் கீரை இது. இதை பருப்புக் கடைசலாக, ரசமாக, துவையலாக எப்படி வேணாலும் சாப்பிடலாம். முள்ளை நீக்கிட்டு எல்லாக் கீரையும் மாதிரி சமைக்க வேண்டியதுதான். நெஞ்சுல சளி ரொம்ப அதிகமா இருந்து, 'கள் கள்’ சத்தத்தோட இருமலும் சேர்ந்து வந்தா, கரிசலாங்கண்ணிக் கீரையை சாறு எடுத்து, சம பங்கா நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, நீர் வத்திப்போறவரைக்கும் விட்டு எடுத்துக்கணும். தொடர்ந்து அஞ்சு நாளைக்கு ரெண்டு வேளை, இந்தக் கீரைத்தைலத்தை ஒரு ஸ்பூன் கொடுத்தாலே, சளி போயிடும்.'

'இந்த கீரை தானே முடி வளர உதவும்னு சொன்னே?'

'நல்லா ஞாபகம் வெச்சிருக்கியே! முடி கறுப்பா வளர உதவுறதும், கல்லீரலைப் பாதுகாக்கிறதும் கரிசாலைதான். காமாலைக்கும், கல்லீரல் சுருக்க நோயான சிரோசிஸுக்கும் இந்த கரிசாலைதான் மருந்து.'

''படிச்சது அடிக்கடி மறந்து போயிடுது. ஞாபகசக்திக்கு ஏதாவது கீரை இருக்கா?'

'உன்னை மாதிரி மக்கு

பிளாஸ்திரிக்கெல்லாம், புத்தியைத் தீட்ட, வல்லாரைக் கீரை இருக்கே. வாரத்துக்கு ரெண்டு முறை துவையல் அரைச்சு சாப்பிடலாம்.'

'அன்னைக்கு வளைஞ்சு நெளிஞ்ச முருங்கைக்காய் மாதிரி ஒரு கீரையை சமைச்சியே... அது என்ன பாட்டி..?'

'பிரண்டை! பிரண்டைக் கீரையை உப்பு, புளி, வர மிளகாய் சேர்த்துத் துவையலா அரைச்சு சாப்பிட்டா, எலும்பு நல்ல உறுதியா இருக்கும். வயித்துல வர்ற குடற்புண்ணை ஆத்திடும். பிள்ளைகளுக்கு வயிறு மந்தமா இருந்தா, இந்த கீரை சமைச்சுக் குடுக்கலாம்.  நல்லா பசியைத் தூண்ட வைக்கும்.'

'கர்ப்பிணிகளுக்கு எந்த கீரை நல்லது?'

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 15

'புள்ளத்தாச்சிக்குன்னே இருக்கு பசலைக் கீரை. லேசா கால் வீக்கம் இருந்தா, பருப்பு சேர்த்து சமைச்சுக் குடுக்கலாம். வீக்கம் போயிடும். பசலை மாதிரியே, சிறுநீரகக் கல்லைப் போக்க, காசினிக் கீரை இருக்கு. இந்தக் கீரையை சமைச்சு சாப்பிட்டா, சிறுநீரகக் கல்லும் படிப்படியா கரைஞ்சிடும்.

அகத்திக் கீரையை மாசத்துக்கு ரெண்டு முறை சாப்பிடுறது அக உறுப்புகளுக்கு நல்லது. அகச் சூட்டை குறைக்கிறதாலதான், இதுக்கு ’அகத்தி’னு பேர் வந்ததாம். ஆனா, சித்த மருந்து எடுக்கறப்ப, இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது.'

''இப்ப, மார்க்கெட்ல சிகப்பு கலர்ல கூட கீரை இருக்கு பாட்டி?'

'அது சிகப்பு பொன்னாங்கண்ணி. இந்தக் கீரையை சாப்பிடறவங்க உடம்பு தகதகனு பொன் மாதிரி மின்னும். 'போன கண்ணும் திரும்புமாம் பொன்னாங்கண்ணியால’னு ஒரு வழக்கு மொழியும் இருக்கு. வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி கீரை, ஆரோக்கியமில்லாத, மந்தமான பிள்ளைக்கு முருங்கைக் கீரை, உடல்சூடுக்கு தண்டுக்கீரை, அஜீரணத்துக்கு கொத்துமல்லி/புதினா கீரை, மூட்டுவலிக்கு முடக்கறுத்தான், சர்க்கரை நோய்க்கு வெந்தயக் கீரைனு எல்லாக் கீரையுமே உணவுக்கு பக்கபலமாவும், நோய் வராமல் தடுக்கிற மருந்தாவும் இருக்கு.'  

'இந்த கீரையை எல்லாம் குட்டிப் பாப்பாவுக்கு கொடுக்கலாமா?'

''ரெண்டு வயசு வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு நார் உள்ள கீரைகளைக் கொடுக்க கூடாது. செரிமானத்துக்கு நல்லது இல்லை.  சிறு கீரை, அரைக்கீரையை நல்லா கடைஞ்சு சாதத்துல பிசைஞ்சு குடுக்கலாம். கீரைகளை பொரியைல் செய்றதை விட, கடைசல், பாசிப்பருப்பு போட்ட கூட்டு செஞ்சு சாப்பிடறது நல்லது. அகத்திக் கீரையை நல்லா வேக வைக்கணும். ஆனா, முருங்கைக் கீரையை குழைவா வேக வைக்கக் கூடாது.'

''கீரையை நோய் வந்தவங்களும் சாப்பிடலாமா பாட்டி?'

''சிறுநீரகச் செயலிழப்பு இருக்கிறவங்க மட்டும், கீரையை நிறைய தண்ணீர் சேர்த்து வேகவைச்சு, வடிச்சு அந்த தண்ணீரைக் கொட்டிட்டு, அதுக்கப்புறம் அந்தக் கீரையை சமைச்சு சாப்பிடலாம். அதுல இருக்கிற உப்புக்கள் போயிடும். கீரையோட தயிர் சேர்த்தோ, மீன் சேர்த்தோ சாப்பிடக் கூடாது. ராத்திரியில் கட்டாயம் கீரை சாப்பிடக் கூடாதுனு உணவு விதியே இருக்கு. இனிமே, கீரையை கிள்ளுக் கீரையா நினைக்க மாட்டியே...'

''இவ்ளோ சொன்ன பிறகும் கீரை வேணாம்னு சொல்ல நான் என்ன கிறுக்கா!'

மருந்து மணக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு