Published:Updated:

மனமே நலமா?-34

கொலைக்கும் காரணமாகும் மாயக் குரல்!டாக்டர் ராமானுஜம், மதுரை

நான் மதுரை அரசு மருத்துவமனையில் மனநலப் பிரிவுத் தலைவராக இருந்தபோது நடந்த சம்பவம் இது.

விருதுநகர் மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் 21 வயதான மலிங்கம்.  வீட்டில் யாருக்கும் கட்டுப்படாமல் ஊர் சுற்றித் திரிவதும் ஊரார் சொல்லும் எடுபிடி வேலைகளைச் செய்வதும் கோயில் மரத்தடியில் படுத்துக்கொண்டு வெட்டியாகப் பொழுதைப் போக்குவதுமாக இருப்பார். அதே ஊரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்மணியின் கணவர் ஒரு விவசாயி. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ராமலிங்கத்துக்கு விஜயலட்சுமி தூரத்து உறவுமுறையும் கூட.

விஜயலட்சுமி தன் வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றை வைத்திருந்தார். சிறிய கிராமம் என்பதால், குறைவாகத்தான் வியாபாரம் நடக்கும். தினமும் இந்தப் பெட்டிக்கடைக்கு ராமலிங்கம் வருவார். விஜயலட்சுமி சொல்லும் சிறுசிறு வேலைகளைச் செய்து கொடுப்பார். இதற்கு விஜயலட்சுமி கொஞ்சம் பணம் அல்லது கடையில் இருக்கும் பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டம் என்று ஏதாவது கொடுப்பார்.

மனமே நலமா?-34

ஊரில் திருவிழா வந்ததால் விஜயலட்சுமியின் கடையில் வியாபாரம் களைகட்டியது. அப்போது அந்தக் கடைக்கு வந்திருந்த ராமலிங்கத்திடம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்படி விஜயலட்சுமி கொடுத்தார். ஐந்து நிமிடங்கள் கழித்து ராமலிங்கத்திடமிருந்து குழந்தையை வாங்க விஜயலட்சுமி வந்தார். ஆனால் குழந்தை பேச்சு, மூச்சு இன்றி தலை துவண்டுபோய் அமைதியாக, ராமலிங்கத்தின் மடியில் படுத்துக்கிடந்தது. என்ன ஏது என்று விசாரித்தால் ராமலிங்கம் பதில் ஏதும் கூறவில்லை. பதறிப்போன விஜயலட்சுமி குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.

அருகில் இருந்தவர்கள் ராமலிங்கத்திடம் விசாரித்தபோது தனக்கு ஒன்றும் தெரியாது என்றார். அவர் மீது சந்தேகம் அடைந்த ஊர்க்காரர்கள் அவரை அடித்து உதைத்தனர். அப்போதும் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்திருக்கிறார். மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். பிறகு குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினர்.

இதற்குள் ராமலிங்கத்தை ஊர்க்காரர்கள் போலீசில் ஒப்படைத்தனர். குழந்தையைக் கொலை செய்ய முயற்சித்ததாக ராமலிங்கத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், போலீசாரிடமும் ராமலிங்கம் வாய் திறக்காததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்குள் ராமலிங்கத்தின் பெற்றோர், 'ராமலிங்கத்துக்கு மனநிலை பாதிப்பு உள்ளது’ என்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் ராமலிங்கத்தை மனநல மருத்துவரிடம் அனுப்பி அவருக்கு மனநலப் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய உத்தரவிட்டதன் பேரில், போலீசார் ராமலிங்கத்தை என்னிடம் அழைத்துவந்தனர். எந்தக் குற்ற உணர்வும் இன்றி, ஒன்றுமே நடக்காதது

போல அமைதியாக இருந்தார் ராமலிங்கம். அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

'நான் தினமும் அந்தக் கடைக்குப் போவேன். அன்னைக்குப் போனப்ப, விஜயலட்சுமி குழந்தையைப் பார்த்துக்கச் சொல்லிக் குடுத்துச்சு... குழந்தையை வாங்கினதும் எனக்கு ஏதோ அசிரீரி மாதிரிக் கேட்டுச்சு... 'இந்தக் குழந்தைதான் உன் உயிரைப் பறிக்கப்போகும் எமன். இதை வளரவிட்டால் உனக்குத்தான் ஆபத்து. அதைக் கொன்னுடு'்னு அந்தக் குரல் சொல்லுச்சு. அதனாலதான் குழந்தையோட கழுத்தை நெரிச்சுக் கொன்னேன்.' (தற்போது குழந்தை உயிருடன்தான் இருக்கிறது என்பது ராமலிங்கத்துக்குத் தெரியாது) என்றார்.

அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவருக்கு 'பேரனாய்ட் ஸ்கீசோப்ரெனியா’ (Paranoid Schizophrenia) என்ற பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதாவது சந்தேகத்துடன் கூடிய மனச்சிதைவு நோய். கோர்ட்டில் ஆஜராகி ராமலிங்கத்துக்கு உள்ள பிரச்னையைப் பற்றி தெரிவித்தேன். 'இவர் திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. மனதில் ஒலித்த மாயக் குரலினால் தூண்டப்பட்டிருக்கிறார். திட்டமிட்டு கொலை செய்பவராக இருந்திருந்தால் சம்பவம் நடந்த உடனேயே அந்த இடத்தைவிட்டு நகர்ந்து, தன்னைக் காத்துக்கொள்ள முயற்சித்திருப்பார். ஆனால் இவருக்கு மனநலப் பாதிப்பு உள்ளதால் அதுபோன்று முயற்சி மேற்கொள்ளவில்லை. ராமலிங்கத்துக்கு சிகிச்சை தேவைப்படுகிறது' என்றேன். ராமலிங்கத்தை மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

ராமலிங்கம் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு ஏற்படும் மாயக்குரல்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு கவுன்சலிங் மற்றும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டதால், ராமலிங்கத்தின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. 'குழந்தையின் கழுத்தை ஏன் நெரித்தீர்கள்’ என்று கேட்டபோது நானா அப்படிச் செய்தேன்?’ என்று கேட்டார். என்ன நடந்தது என்றே அவருக்குத் தெரியாத நிலை.

மனமே நலமா?-34

ஒரு வருடத்துக்குப் பிறகு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள ராமலிங்கம் தயார் என்று சான்று அளித்தேன். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கைத் தொடங்கியது. தனக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியாத மனநிலையில் ராமலிங்கம் இருந்ததால், அவரை விடுதலை செய்தது நீதிமன்றம். சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கச் செல்லும்போது ராமலிங்கத்தைப்போல ஏராளமானவர்களைப் பார்த்திருக்கிறேன். ராமலிங்கம் தனக்கு மாயக்குரல் கேட்பது பற்றி பெற்றோரிடம் கூறியிருக்கிறார். ஆனால், அவர்களுக்கு அது புரியவில்லை. ஆரம்ப நிலையிலேயே அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டியிருந்தால் இந்த அளவுக்கு விபரீதம் நடந்திருக்காது.

மழுங்கடிக்கும் மனக் குழப்பம்!

'பேரனாய்ட் ஸ்கீசோப்ரெனியா’  என்பது ஸ்கீசோப்ரெனியாவில் ஒருவகை. இது ஏன் ஏற்படுகிறது என்பது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் இல்லை. மரபியல், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இது ஏற்படலாம். இந்த வகையாக பிரச்னை உள்ளவர்களுக்கு மாயக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். மனக் குழப்பம் இருக்கும், தாங்கள்தான் பெரியவர்கள் என்பது போன்ற தவறான எண்ணம் இருக்கும். தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அவர்களது நடவடிக்கை இருக்கும். மனப்பதற்றம், கோபம், வன்முறை, முரட்டுத்தனம் போன்றவை இதன் அறிகுறிகள்.