Published:Updated:

பிடிமானம், நடை, பேச்சில் இடர்ப்பாடுகளா..? தசைக்களைப்பு நோயாக இருக்கலாம்; அலர்ட்!

தசைக்களைப்பு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்குப் பிடிமானம், நடை, பேச்சு போன்ற செய்கைகளில் அதிக இடர்ப்பாடுகள் ஏற்படும். சிலருக்கு முகவாதம் (Facial Paralysis), மென்று சாப்பிடுவது அல்லது உணவு விழுங்குவதில் சிக்கல் போன்றவையும் ஏற்படலாம்.

லட்சம் பேரில் நூறு பேரை பாதிக்கக்கூடிய நோய்கள் அல்லது குறைபாடுகள், அரியவகை நோய்கள் எனப்படும். அப்படியான ஒரு நோய் பாதிப்புதான், தசைக் களைப்பு. இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு, நரம்பும் எலும்பும் மிகவும் பலவீனமாக இருக்கும். நரம்புத் தசைகள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான பிரச்னை இது.

நரம்பியல் மருத்துவர் பிரபாஷ்
நரம்பியல் மருத்துவர் பிரபாஷ்

எலும்பு மற்றும் தசைப்பகுதி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டிருந்தாலும், உடலின் அசைவுகளில் பிரச்னை ஏற்படுவது இயல்பு. இப்படித் தொடங்கும் பிரச்னையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்னை அதிகரித்து பாதிப்பு தீவிரமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கான சிகிச்சை என்ன, இப்பிரச்னையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து நரம்பியல் மருத்துவர் பிரபாஷிடம் கேட்டோம்.

``லட்சத்தில் நூறு பேரை பாதிக்கும் அரியவகை பாதிப்பு என்பதால், தசைக்களைப்பு நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. ஆனால், அனைவரும் இது குறித்த விஷயங்களை அறிந்து வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்கள் முதல் நிலையிலேயே நோயைக் கண்டறிய உதவும் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.

Scan
Scan
pixabay

தசைக் களைப்பு ஏன் ஏற்படுகிறது?

உடலின் அசைவுகள் யாவும், மூளையிலிருந்து செய்திகளாக மாறி நரம்புக்கும் தசைக்கும் இடையேயுள்ள இணைப்பின் வழியாகத்தான் தசைகளைச் சென்றடையும். இந்த இடைவெளி, `நியூரோ மஸ்குலர் ஜங்‌ஷன்' எனப்படும். இந்த இடத்தில் `அசிடைல்கொலைன் (Acetylcholine)' என்ற ரசாயனம் இருக்கும். ஒரு அசைவுக்கான செய்தி வரும்போது, இது சுரக்கும். இந்த ரசாயனம் குறைவாக இருந்தால், செய்திகள் தசைகளுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்படும். செய்திகள் சரிவர கிடைக்காததால் உடல் அசைவுகளில் சிக்கல் உண்டாகும். சில நேரம், அசிடைல்கொலைன் போதிய அளவு இருந்தும்கூட, சிக்னலை ஏற்றுக்கொள்ளும் ரிசப்டாரில் சிக்கல் இருக்கலாம். அது, தகவல் பரிமாற்றத்தில் சிக்கலை ஏற்படுத்தி உடல் அசைவுக்கான தகவல்களை தசைக்கு அனுப்பத் தாமதிக்கலாம். இதனால் தரையில் அமர்ந்து எழுவது, கைகால்களை நீட்டுவது, பேசுவது, பார்வை இரண்டாகத் தெரிவது, கண் இமை தானாக மூடிக்கொள்வது, மூச்சு விட திணறுவது, உணவு மெல்ல கடினமாக இருப்பது, பிடிமானம் போன்றவற்றில் எல்லாம் பிரச்னை ஏற்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தசைக் களைப்பை குணப்படுத்த முடியுமா?

பொதுவாக உடலில் ஏதாவது கிருமி அல்லது நோய்த்தொற்று ஏற்படும்போது அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உடல் பிறபொருள் எதிர்ப்புகளை (Antibodies) உருவாக்கும். இந்த இயக்கத்தின் செயல்பாடு மாறிவிட்டால், உடலில் இருக்கும் திசுக்களுக்கு எதிராகவே எதிர்ப்புப் பொருள் உற்பத்தியாகும். இதனால் உடலில் இருக்கும் திசுக்கள் சிதையத்தொடங்கும். இப்படியான பாதிப்புகள், Auto Immune Disease என்று கூறப்படும். தசைக் களைப்பும் ஒருவகையான ஆட்டோ இம்யூன் நோய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பை, `இவருக்கு ஏற்படலாம், இவருக்கு ஏற்படாது' என வகைப்படுத்த முடியாது. ஆகவே, இதை வரும் முன் தடுப்பது அல்லது இதில் முன்னெச்சரிக்கையோடு இருப்பது என்பது சாத்தியமில்லை. இருப்பினும், பாதிப்பு தெரியவரும்பட்சத்தில் முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம்.

Doctor
Doctor
pixabay

தசைக் களைப்பு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்குப் பிடிமானம், நடை, பேச்சு போன்ற செய்கைகளில் அதிக இடர்ப்பாடுகள் ஏற்படும். சிலருக்கு முகவாதம் (Facial Paralysis), மென்று சாப்பிடுவது அல்லது உணவு விழுங்குவதில் சிக்கல் போன்றவையும் ஏற்படலாம். தசைக் களைப்பை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்படுத்தலாம். ஒரு சிலருக்கு, அவர்கள் உடல் ஒத்துழைக்கும்பட்சத்தில் சில வருடங்களில் பிரச்னை முழுமையாக குணமாகிவிடும் சூழலும் உள்ளது. நோயின் எந்த நிலையில் நோயாளி சிகிச்சையைத் தொடங்குகிறார், அவரின் நோய் எதிர்ப்புத் திறன் எப்படி இருக்கிறது, அது எந்தளவுக்கு உடலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பவற்றையெல்லாம் பொறுத்துதான் முழுமையாக குணமாவதும், வாழ்நாள் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அமையும்.

கவனம்:

இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு சில ஆன்டிபயாடிக் மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் கவனம் வேண்டும். யாருக்கேனும் மாத்திரைகளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அவர்கள் அவற்றை உதாசீனப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும்.

tablets
tablets
pixabay

பரிசோதனைகள்

நரம்பு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உதாரணமாக உடலின் அசைவுகள், கண் இமையின் அசைவுகள் அனைத்தும் பரிசோதிக்கப்படும். அவை அசாதாரணமாக இருப்பது தெரியவந்தால், அசிடைல்கொலின் மற்றும் அதை உட்கிரகித்துக்கொள்ளும் ரிசப்டாரின் (Receptor) செயல்பாடுகளைக் கண்டறிய வேண்டியிருக்கும். அவற்றின் இயக்கத்தில் ஏதும் சிக்கல் இருந்தால் தசைக் களைப்பு உறுதிசெய்யப்படும்.

தசைக் களைப்பு தீவிரமானால்..?

தசைக் களைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடல் அசைவுக்கு உதவும் கை மற்றும் கால் பகுதியின் அசைவுகளுக்கு உரிய நரம்புப் பகுதியின் இடைவெளியான `நியூரோ மஸ்குலர் ஜங்ஷன்'தான் பாதிக்கப்படும். பாதிப்பு தீவிரமாகும்போது, உடலின் மற்ற தசைகளும் பாதிக்கப்படும். இப்படிப் பாதிக்கப்படும்போது, மூச்சு தசைகள் பாதிக்கப்பட்டால், அது`மையாஸ்தெனிக் க்ரைஸிஸ் (Myasthenic crisis)' என்ற நிலையை ஏற்படுத்தும்.

Scan
Scan
pixabay

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும் என்பதால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு இது அபாயகரமானது. ஒருவர் முதல் நிலையிலேயே தசைக் களைப்புக்கு முறையாக மருந்து மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது, இப்படியான சிக்கல்களைத் தவிர்க்கலாம். ஆகவே தேவை கவனம்" என்கிறார் டாக்டர் பிரபாஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு