Published:Updated:

`வுகானில் கொரோனா நோயாளியுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்த மருத்துவர்!' - நெகிழும் நெட்டிசன்கள் #Viral

மருத்துவர் மற்றும் நோயாளி
மருத்துவர் மற்றும் நோயாளி

``கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, நான் பார்க்கும் முதல் இதமான செய்தி இதுதான். மருத்துவர்கள்தான் எங்களுடைய முதல் ஹீரோக்கள்" போன்ற கமெண்டுகளையும் புகைப்படத்தின் கீழே பதிவு செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3,500-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எளிதாக பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்தந்த நாடுகளில் உள்ள அரசும் வைரஸ் பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. மக்களிடம் நிலவும் அச்சத்திற்கு மத்தியில், சீனாவின் வுகான் பகுதியிலுள்ள மருத்துவமனையிலிருந்து வெளியாகியிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் புகைப்படம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மருத்துவர் மற்றும் நோயாளி
மருத்துவர் மற்றும் நோயாளி

வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கருதப்படும் வுகான் பகுதியில் `வுகான் யுனி' என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு ஒரு மாதத்திற்கு முன்பு 87 வயதான முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவர்கள் இவரை ஸ்கேன் எடுப்பதற்காக அறையிலிருந்து வெளியே அழைத்து வந்துள்ளனர். அப்போது, மருத்துவர்கள் அவரிடம் `சூரிய அஸ்தமனத்தை பார்க்க வேண்டுமா?' என கேட்டுள்ளனர். அதற்கு அவருடம் `பார்க்க வேண்டும்' என்று கூறியுள்ளார். உடனிருந்த மருத்துவர்கள் அனைவரும் இணைந்து அந்த தருணத்தை அனுபவித்துள்ளனர்.

`பயணத்தை மறைத்த குடும்பம்... கோபப்பட்ட அமைச்சர்..!' - கேரளாவில் மீண்டும் கொரோனா வந்தது எப்படி?!

மருத்துவர் மற்றும் நோயாளி இணைந்து சூரிய அஸ்தமனத்தை பார்க்கும் தருணத்தை புகைப்படமாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை சென்சென் ஜாங்க் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் வேதனையான சூழலை அனுபவித்து வரும் சீன மக்கள் உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த பலரையும் இந்த புகைப்படம் கவர்ந்துள்ளது. இதனை பலரும் பகிர்ந்து தங்களுடைய உணர்வை பதிவு செய்து வருகின்றனர்.

``மிக அழகான புகைப்படம். இயற்கை மிகவும் கனிவானது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, நான் பார்க்கும் முதல் இதமான செய்தி இதுதான். மருத்துவர்கள்தான் எங்களுடைய முதல் ஹீரோக்கள்" போன்ற கமெண்டுகளையும் புகைப்படத்தின் கீழே பதிவு செய்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சில கமெண்டுகளைப் பதிவு செய்திருந்தனர்.

முகக்கவசம் யெஸ்... ஹேண்ட் சானிட்டைசர் நோ... சென்னை கொரோனா அப்டேட்ஸ்!
அடுத்த கட்டுரைக்கு