Published:Updated:

`இங்கு இது 4-வது அலை; இந்தியாவும் கவனமாக இருக்கவேண்டும்!' - அலர்ட் செய்யும் பிரிட்டன் மருத்துவர்

Westminster Bridge in London
News
Westminster Bridge in London ( AP Photo/Frank Augstein )

ஒமைக்ரான் வைரஸ், தமிழகத்துக்குள்ளும் நுழைந்துவிட்டது. உருமாறிய வைரஸ் என்றாலும் இதன் வீரியம் பயமுறுத்தும் அளவுக்கு இருக்காது எனச் சொல்லப்பட்ட நிலையில், ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான நபர், பிரிட்டனில் இறந்ததையடுத்து இந்த வைரஸின் மீதான அச்சம் அதிகரித்திருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், தமிழகத்துக்குள்ளும் நுழைந்துவிட்டது. உருமாறிய வைரஸ் என்றாலும் இதன் வீரியம் பயமுறுத்தும் அளவுக்கு இருக்காது எனச் சொல்லப்பட்ட நிலையில், ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான நபர், பிரிட்டனில் இறந்ததையடுத்து இந்த வைரஸின் மீதான அச்சம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால், இது மூன்றாவது அலையின் ஆரம்பமா, இங்கிலாந்து இதை எப்படி எதிர்கொள்கிறது, அங்கே தொற்றின் தாக்கம் எப்படியிருக்கிறது என்ற கேள்விகள் எழுகின்றன. எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே.பாஸ்கர்.

மருத்துவர் கே. பாஸ்கர்
மருத்துவர் கே. பாஸ்கர்

``உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்தைப் பொறுத்தவரை மக்களுக்கு வரும் பயத்தைவிட, அரசாங்கத்துக்கு அதிக பயம் வந்திருக்கிறது என்றே தெரிகிறது. யு.கே-வுக்குள் நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றானது, இரண்டு நாள்களுக்கொரு முறை இரட்டிப்பாகிக்கொண்டிருக்கிறது. டிசம்பர் 15-ம் தேதி, ஒருநாளில் மட்டுமே 78,000 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்களில் 10,000 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியிருக்கிறது. கொரோனா பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. லண்டனில் மட்டும் 33 சதவிகிதம் கூடியிருக்கிறது. இறப்பு விகிதம் அதிகமில்லை என்றாலும்கூட, யு.கே அரசாங்கம் ஒரு வாரத்துக்கு முன்பே பிளான் பி-யைக் கையில் எடுத்திருக்கிறது. அதாவது, முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்து பணிசெய்வது, விசேஷங்கள், விளையாட்டு நிகழ்வுகள், ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களுக்குச் சொல்ல கோவிட் பாஸ், அதாவது தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரத்தை எடுத்துச் செல்வது என்ற விஷயங்களை அறிவித்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிப்பதாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடுவதாலும், அரசு அடுத்து பிளான் சி-யையும் யோசித்திருக்கிறது. இந்தியாவில் தீபாவளி மாதிரி, யு.கே-வில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தக் கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது, மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது போன்றவற்றையும் அரசு யோசித்து வருகிறது. இனி வரும் நாள்களில்தான் இந்தத் தொற்றின் தீவிரம், இறப்பு விகிதம் போன்றவை சரியாகத் தெரிய வரும் என்பதால் அதைப் பொறுத்து அரசின் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

London
London
AP Photo/Matt Dunham

ஒமைக்ரான் வைரஸ் பரவும் வேகமானது இரண்டு நாள்களுக்கொரு முறை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இது வேகமாகப் பரவும் அளவுக்கு அதன் வீரியமும் அதிகமாக இருக்குமா என்று சொல்வதற்கில்லை. இன்றுவரை அதன் வீரியம் சற்றுக் குறைவாகத்தான் இருக்கிறது. இது முதலில் கண்டு பிடிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவில்கூட இறப்பு விகிதம் குறைவாகவே இருந்தது. ஆனால், வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டவர்களிடம் உடல் அசதி, உடம்புவலி, லேசான காய்ச்சல் போன்றவற்றை பிரதான அறிகுறிகளாகப் பார்க்கிறோம். சிலருக்கு இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் உணர்விழப்பு, அதிக காய்ச்சல் போன்றவற்றையும் பார்க்கிறோம். இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது. ஒமைக்ரான் என்பது உருமாறிய வைரஸ் என்பதால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் பாதிக்கிறது. ஆனாலும், மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பாற்றல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. யு.கே-வில் இது நான்காவது அலை. 2022-ம் வருடம் ஏப்ரல் மாதம்வரை இது தொடரும் என்பது நிபுணர்களின் கணிப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் வீரியம் மற்றும் போக்கு எப்படியிருக்கும் என்ற தகவல்கள் நமக்கு இல்லை. ஆனாலும், ஒருவேளை அலட்சியமாக இருந்து, தொற்றுப்பரவல் தீவிரமாகி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகள் நிரம்பி வழிதல், மூச்சுத்திணறலில் மக்கள் இறப்பது போன்றவற்றையெல்லாம் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் எல்லா நாட்டு அரசுகளும் கவனமாகவே இருக்கின்றன. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், டிசம்பர் 31-ம் தேதிக்குள் 18 வயதுக்கு மேலான எல்லாருக்குமே மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் என எல்லோரின் உதவியோடும் இதைச் சாத்தியப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

corona test
corona test

இந்தியாவில் இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது இனிதான் தெரியவரும். எப்படி இருந்தாலும் கவனமாக இருப்பதையும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப் பிடிப்பதையும் மறக்கக் கூடாது. அரசு சொல்வதைக் கேளுங்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். கூட்டத்தில் செல்லாதீர்கள். எந்த இடத்துக்குச் சென்றாலும் முகக்கசவம் அணிந்து கவனமாக இருங்கள். சமூக இடைவெளியை மறக்காதீர்கள். இருமும், தும்மும் நபர்களிடமிருந்து விலகி இருங்கள். காற்றோட்டமான இடங்களில் இருங்கள். ஏசி வசதி இருக்கும், மூடிய அறைகளுக்குள் இருப்பதைத் தவிருங்கள். முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள். லேசான அறிகுறி இருந்தாலும் டெஸ்ட் எடுத்துப் பாருங்கள். தொற்று உறுதியானால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவ ஆலோசனை பெறுங்கள். பயணங்களைத் தவிருங்கள'' என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் பாஸ்கர்.