Election bannerElection banner
Published:Updated:

அடிக்கடி அடிவயிற்றைக் கலக்குகிறதா..? இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமாக இருக்கலாம்... அலெர்ட்!

Representational Image
Representational Image ( katemangostar / Freepik )

இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் எனில்... ஜாக்கிரதை! `உங்களுக்கு இருப்பது இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமாகக்கூட இருக்கலாம்' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ள்ளி, கல்லூரியில் தேர்வெழுதச் செல்லும்போதும், முக்கியமான அலுவலக மீட்டிங்கின்போதும் அடிவயிற்றைக் கலக்குவதைப்போல் உணர்ந்திருக்கிறீர்களா..? எப்போதும் சாப்பிட்ட உடனேயே கழிவறைக்குச் செல்லத் தோன்றுகிறதா..? கோபம், டென்ஷன் அல்லது பயம் ஏற்படும் நேரத்தில் வயிற்றுப் பகுதியில் வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றனவா..?

Stomach (Representational Image)
Stomach (Representational Image)
Image by Darko Djurin from Pixabay

இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் எனில்... ஜாக்கிரதை! `உங்களுக்கு இருப்பது இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமாகக்கூட இருக்கலாம்' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து நம் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் உணவுக்குழாய் மற்றும் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆனந்த்.

இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் என்றால் என்ன?

`இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் ((IBS - Irritable bowel syndrome)' என்பது ஒருவித `ஃபங்ஷனல் டிஸ்ஆர்டர் (Functional disorder)'. அதாவது ஏதேனும் ஒரு நோய்க் கிருமியாலோ, சத்துக் குறைவாலோ ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் இது நோயே அல்ல. நம் எண்ணங்களால் வயிற்றில் ஏற்படும் ஒருவித பிரச்னை. அவ்வளவே. குடலின் செயல்பாடுகளைத் தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் போன்ற உணர்வுகளுக்குச் சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவுகளை உண்டாக்கும். இதன் காரணமாக, வயிற்றில் வலி, உப்புசம், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படும். இதையே `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' என்று குறிப்பிடுவார்கள்.

stomach
stomach

அறிகுறிகள்

இந்தப் பிரச்னைக்கு இவைதான் அறிகுறிகள் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறியை இது வெளிப்படுத்தும். பல்வேறு அறிகுறிகளின் சேர்க்கையாக இருப்பதனாலேயே இதை சிண்ட்ரோம் (Syndrome=Collection of Symptoms) என்று குறிப்பிடுகிறோம்.

சிலருக்கு அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், மந்தநிலை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சிலருக்கோ மீட்டிங், எக்ஸாம் போன்ற முக்கிய தருணங்களில் மனத்துக்குள் ஒருவித பயமும், அடிவயிற்றில் வலியும் ஏற்படும். இந்த வலி மலம் கழித்த பிறகே குறையும். அதீத கோபம், பதற்றம், பயம் ஆகியவற்றால் வரும் மனஅழுத்தம், ஆங்ஸைட்டிகூட இதற்கான அறிகுறிகளாக வெளிப்படலாம்.

எப்படி ஏற்படுகிறது?

நம் மனநிலைக்கும் இந்தப் பிரச்னைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் எப்போதெல்லாம் மனம் சமநிலையை இழக்கிறதோ அப்போது இந்தப் பிரச்னை ஏற்படலாம். குறிப்பாக, ஏதேனும் ஒரு கட்டத்தில் நம் உணர்வுகள் அதீத நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும். எடுத்துக்காட்டுக்கு உங்கள் கண் முன் நிகழும் கொடூர விபத்து, வேண்டியவரின் தீடீர் மரணம் போன்றவை ஆங்ஸைட்டி, மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த மனநல பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல்விடும்போது அவை சிலருக்கு இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமாக உருவெடுக்கலாம். ஏதேனும் ஒரு விஷயத்துக்குத் தொடர்ந்து பயந்துகொண்டோ, பதற்றமடைந்துகொண்டோ இருந்தாலும் இது ஏற்படலாம்.

மருத்துவர் ஆனந்த்
மருத்துவர் ஆனந்த்

யாருக்கு ஏற்படலாம்?

எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதிகமாக உணர்ச்சிவசப்படுவோருக்கு இது எளிதில் ஏற்படலாம். குறிப்பாக, டீன் ஏஜில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், இவர்களுக்கு உணர்ச்சிப்பெருக்கு அதிகமாக இருக்கும். அதைச் சரியாகக் கையாளவும் போதுமான பக்குவமும் இருக்காது. தவிர, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இது ஏற்படும்.

தீர்வு என்ன?

அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், மந்தநிலை, அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்ற நாம் மேற்கூறிய அறிகுறிகள் நீண்ட நாள்களுக்குத் தொடரும்பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது. மருத்துவர்கள் இந்த அறிகுறிகள் எதனால் உங்களுக்கு ஏற்படுகின்றன என்பதை முதலில் கண்டறிவார்கள்.

medical checkup
medical checkup
Pixabay
இந்தியாவில் அதிகரிக்கும் கல்லீரல் சிரோசிஸ் மரணங்கள்... காரணம் என்ன?

வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளாலும் வயிற்றில் வலி ஏற்படலாம். அல்லது ஏதேனும் உணவு பிரச்னையாலும் இது ஏற்படலாம். அதனால் எல்லாவிதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். உங்களுக்கு உள்ள அறிகுறிகள் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் பிரச்னைக்கு உரியதுதான் என்பது உறுதியான பிறகு, அதற்குரிய சிகிச்சைகள் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளுக்குத் தகுந்த மாத்திரைகள், தொடர்ச்சியான மனநல ஆலோசனைகள் இதற்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் முக்கியமானவை" என்றார் மருத்துவர் ஆனந்த்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு