Published:Updated:

ஏசிம்ப்டமடிக் கொரோனா தொற்றாளர்களுக்கும் ஆபத்து அதிகம்... புது ஆய்வு!

Representational Image
Representational Image

ஏசிம்ப்டமடிக் கொரோனா தொற்றாளர்களுக்கு இருக்கும் ஆபத்து குறித்து புதிய ஆய்வு ஒன்றில் வெளியாகியிருக்கிறது.

2020-ல் அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் என்றால் அது `கொரோனா'வாகத்தான் இருக்கும்! கடந்த ஏழு மாதங்களாக நம்மைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த நுண்ணுயிரி, சாதாரண மக்கள் முதல் மருத்துவ விஞ்ஞானிகள் வரை எல்லோருக்குமான பெரும் சவாலாக இருந்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸ் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Corona infection (Representational Image)
Corona infection (Representational Image)

சமீபத்தில் தென்கொரியாவில் கொரோனா தொற்று குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் லேசான அறிகுறிகள் மற்றும் ஏசிம்ப்டமடிக் நிலையிலிருந்த 303 கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களின் மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் போன்ற பகுதிகளிலிருந்து எச்சில், நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஆய்வுசெய்து பார்த்ததில், `ஏசிம்ப்டமடிக் கொரோனா தொற்றாளர்களுக்கு அறிகுறிகள் லேசாகவோ, முழுவதுமாக இல்லாமலோ இருக்கலாம். ஆனால், அவர்களின் உடலில் இருக்கும் வைரஸ் முழு வீரியத்துடனேயே இருக்கிறது. இதனால் மற்றவர்களுக்குத் தொற்று ஏற்பட 100 சதவிகிதம் வாய்ப்புள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் அந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். லேசான அறிகுறிகள்தானே என்ற அலட்சியத்தினால் சிகிச்சை பெறத் தவறினால் அதன் விளைவாக மரணம்கூட ஏற்படலாம்!' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

குடும்பத்தில் ஒருவருக்கு கோவிட்-19... மற்ற நபர்கள் தப்பித்துக்கொள்ளவது எப்படி?

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த தொடக்கத்திலேயே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூத்த விஞ்ஞானியான மருத்துவர் ராமன் ஆர் கங்காகேதர், ``இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஏசிம்ப்டமடிக் (Asymptomatic) நிலையில் இருக்கிறார்கள். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம்" என்று கூறியிருந்தார்.

Corona
Corona

`ஏசிம்ப்டமடிக் (Asymptomatic)' என்பது ஒருவர் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு அந்த நோய்க்குரிய எந்த அறிகுறிகளும் தென்படாத நிலை. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் ஏசிம்ப்டமடிக்காக இருக்கும்போது அவருக்குக் காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற எந்த அறிகுறிகளும் இருக்காது. ஆனால், அதே நேரத்தில் அவரின் வழியே மற்றவர்களுக்குத் தொற்று பரவ நிறைய வாய்ப்பிருக்கிறது. ஏசிம்ப்டமடிக் குறித்து ICMR வெளியிட்டிருந்த தகவலில், `இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் ஏசிம்ப்டமடிக். மற்ற 20% பேரில் 15% பேர் கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகளுடன் உள்ளனர். மீதமுள்ள 5% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளனர்' என்று கூறப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தென்கொரியா வெளியிட்டிருக்கும் ஏசிம்ப்டமடிக் நிலை குறித்த ஆய்வு முடிவுகள் பற்றி இரைப்பை, குடல் அறுவைசிகிச்சை மருத்துவர் ஆனந்த்திடம் பேசினோம்.

``கொரோனா தொற்றில் நான்கு நிலைகள் உள்ளன. 1. அறிகுறிகள் இல்லாத நிலை (Asymptomatic), 2. லேசான அறிகுறிகள் உள்ள நிலை (Mild), 3. ஓரளவு மிதமான அறிகுறிகள் உள்ள நிலை (Moderate), 4. தீவிர நிலை (Severe).

மருத்துவர் ஆனந்த்
மருத்துவர் ஆனந்த்

கொரோனா வைரஸ் யார் யார் உடலுக்குள் எல்லாம் செல்கிறதோ அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் ஒரே அளவில்தானே தென்பட வேண்டும். ஏன் சிலருக்குக் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட தீவிர அறிகுறிகளும் சிலருக்கு அறிகுறிகளே இல்லாத ஏசிம்ப்டமடிக் நிலையும் ஏற்படுகிறது என்று நமக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம் எழலாம்.

கொரோனா தொற்றில் ஏசிம்ப்டமடிக் நிலை ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று நோய் எதிர்ப்புத்திறன். மற்றொன்று நம் உடலுக்குள் இருக்கும் வைரஸ்களின் எண்ணிக்கை. கொரோனா தொற்று ஏற்படும் ஒருவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருந்தால் அவர் அறிகுறிகள் எதுவும் வெளிப்படுத்தாத ஏசிம்ப்டமடிக் நிலையில் இருக்கலாம். தொற்று ஏற்பட்டவரின் உடலில் இருக்கும் வைரஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அறிகுறிகள் வெளிப்படாமலோ, லேசான அறிகுறிகளோதான் இருக்கும். ஆனால், இவர்களின் வழியே மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படும். அந்த மற்றவர்கள் நோய் எதிர்ப்புத்திறன் குறைவானவர்களாக இருப்பின் அவர்கள் பாதிப்பின் தீவிர நிலைக்குக்கூட செல்லலாம்.

ஏசிம்ப்டமடிக் நிலையில் இருக்கும் ஒருவருக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தாலோ, உடலில் உள்ள வைரஸ்களின் எண்ணிக்கை அதிகரித்தாலோ உடனே அவர் நோயின் தீவிர நிலையை அடையலாம். ஏசிம்ப்டமடிக் நிலையில் அறிகுறிகளே வெளிப்படாது என்பதால் யார் யார் ஏசிம்ப்டமடிக்காக உள்ளார்கள் என்பதைக் கண்டறிவதே கொஞ்சம் கடினம்தான். ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டால், அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கான்டாக்ட் டிரேஸிங் மூலம் கண்டறிந்தால் ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களை இனங்காண முடியும்.

Corona Tests
Corona Tests
Pixabay

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு லேசான அறிகுறிகள் உள்ளவர்களும், ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களும் `பாதிப்பு அதிகமாக இருக்காது' என்று நினைத்து அலட்சியமாக இருக்காமல் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறரிடமிருந்து விலகி தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுதவிர மக்கள் அனைவரும் மாஸ்க், சானிடைஸர், தனிமனித இடைவெளி என்று சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களால் கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு