Published:Updated:

`அதைவிட இது பெட்டர்..!’-`ஜானி' பாமா கேரக்டர் சைக்காலஜிக்கலாக ரொம்பவே ஆபத்து

சைக்காலஜி
சைக்காலஜி

ரெஸ்டே இல்லாம பெஸ்ட்தேடி ஓடும் பேரன்பர்களே, ஹோல்டுஆன். ஆசைப்பட்டபடியே எதுவும் எல்லோருக்கும் கச்சிதமாக அமைவதில்லை. ஒருமுறை கமிட்டானால் நாமே அதற்குப் பொறுப்பேற்று வாழவேண்டும். சைக்காலஜி அலசல்!

பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்... ரெஸ்டே இல்லாம பெஸ்ட்தேடி ஓடும் பேரன்பர்களே, ஹோல்டுஆன். வாழ்க்கையில் நமக்குக்கிடைத்த ஒன்று நமக்கே நமக்கானது என்ற யதார்த்தத்தை ஒதுக்கிவிட்டு வெறுமனே ஓடியோடித் தேடிக்கொண்டே இருக்கிறோம். வாட்டர்பாட்டிலோ வாழ்க்கைத் துணையோ வாக்கிங்ஸ்டிக்கோ ஆசைப்பட்டபடியே எதுவும் எல்லோருக்கும் கச்சிதமாக அமைந்துவிடுவதில்லை. ஒருமுறை ஒன்றில் கமிட்டாகிவிட்டால் அதற்கு நாமே பொறுப்பேற்று வாழ்வைத் தொடர வேண்டும். ஆனால், இதில் பலரும் கோட்டைவிடுகின்றனர். 'ஜானி' பாமா போல செல்லும்வழியெங்கும் செலக்ஷன் செஷன்களை நடத்திக் கொண்டேயிருந்தால் வாழ்வதுதான் எப்போ?

சைக்காலஜி
சைக்காலஜி

ஒன்றுக்கொன்று பெட்டர்தேடி அலைகிற மனம் என்னமாதிரி உளவியல் சிக்கல்தரும், சரிசெய்துகொள்வது எப்படி.. போன்றவை குறித்து உளவியல் ஆலோசகர் சித்ரா அர்விந்த் நம்மிடம் பேசினார். "எதுலயும் கமிட் ஆகுற ஃபீல் அவங்களுக்கு வரவே செய்யாது. சலனம் இருந்துட்டே இருக்கும். ஆனா, இந்த மனநிலை அவங்களுக்கே பின்னாளில் கஷ்டத்தைக் கொடுக்க ஆரம்பிச்சிடும்" என்றார்.

இந்த உளவியலின் நுணுக்கமான வேறுபாட்டை விளக்குகிறார் சித்ரா, "ஒரு இடத்துல வேலைபார்த்துட்டு இருக்கும்போது, இதைவிடப்பெரிய பதவிக்குப் போகணும்னு நினைக்கிறது, இயல்பு. இதை, நாம பேசிக்கிட்டு இருக்கிற உளவியலோடு ஒப்பிடத்தேவையில்லை. ஏன்னா, தனக்குப் பிடிச்ச வேலையைத் தேர்ந்தெடுத்துதான் அவங்க போயிருப்பாங்க. அவங்களுக்கு அது பிடிச்சிருக்கு. ஆனாலும், அடுத்த லெவலுக்குப் போகணும்னு விரும்புறாங்க. இப்போ நாம பேசிட்டிருக்கிற உளவியல், கிடைச்சிருக்கிற விஷயத்துல அல்லது தேர்ந்தெடுத்திருக்கிற விஷயத்துல விருப்பமே இல்லாம, அடுத்ததை நோக்கிப் போறவங்களா இருப்பாங்க" என்றார்.

சைக்காலஜி
சைக்காலஜி
ஃபோமோ ஏன் இந்தப் பதற்றம்?

முன்னேறிச் செல்வதற்கான தேடல் தப்பில்லைதானே என்றோம். "ஆமா. முதல்ல சொன்ன விஷயம் தப்பு கிடையாது. தனக்குப்பிடிச்ச பெரிய லட்சியத்தை நோக்கி நகர்வதற்காக அடுத்தடுத்த கட்டத்துக்குப் போவாங்க. பத்து வருஷங்களுக்குள்ள பல இடங்களுக்கு மாறியிருப்பாங்க. ஆனா, அவங்க தன்னை பற்றிய தெளிவான ஐடியா வெச்சிக்கிட்டுத்தான் வாழ்வாங்க. அவங்க சரிதான். ஆனா, அதிருப்தியோடு வேலையை விட்டுப்போவாங்கள்ல, அவங்களுக்குக் கடைசிவரை எங்கேயும் திருப்தியே வராது. பெர்ஃபக்ஷன்னு ஒண்ணு இல்லாமலே போயிடும். இருக்கிறத வச்சுத்தான் வாழணும். மனநிறைவு நமக்குள்ளதான் இருக்கு. இப்படியிருந்தாதான் நான் சந்தோஷப்படுவேன்; நல்லா வாழ்வேன்னு கட்டமைச்சுக்கிட்டு வாழ நினைச்சோம்னா மகிழ்ச்சியே இருக்காது" என்றார்.

இந்த உளவியல் சிக்கலில் பாதித்தவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

"ஒண்ணுக்கொண்ணு பெட்டர் தேடுறவங்க உளவியலை சிம்பிளா சொல்லணும்னா, அவங்களுக்கு என்ன வேணும்னு அவங்களுக்கே தெரியலைன்னு சொல்லலாம். சுயபுரிந்துணர்வு இருக்கிறவங்க, எனக்கு இது வேணும், சரி இதுதான் கிடைச்சிருக்கு, போதுமா போதாதான்னு முடிவெடுத்துக்குவாங்க. ஆனா, இந்த உளவியல் சிக்கல் உள்ளவங்களுக்கு டேஸ்ட் மாறிக்கிட்டே இருக்கும். இன்னைக்கி பணம் இருக்கிறவங்களைப் பிடிக்கும், நாளைக்கே அழகாயிருக்கிறவங்களா தேடத்தோணும். இப்படித்தான் மனம் அலைபாயும்" என்றார்.

அந்த மனநிலை உள்ளவர்களை எப்படி இனம் காண்பது?

சைக்காலஜி
சைக்காலஜி

"ஒருத்தர்கிட்ட, உனக்கு என்ன வேணும்னு கேட்டா, சரியா பதில்சொல்லத் தெரியாது. எல்லாத்துக்கும் ஓர் எல்லை, கட்டுப்பாடு இருக்கு. அதை அவங்க புரிஞ்சிக்காமலே இருப்பாங்க. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னு வாழுறவங்க பாடுதான் கஷ்டம். அது நடக்கவே போறதில்லை. அப்போ தோல்வி வரும், மகிழ்ச்சி போயிடும். இதை கவனமா கையாண்டு தப்பிக்கணும்" என்றார்.

மாற்றக்கூடியது மாற்றமுடியாதது... உளவியல் விளக்கம் கேட்டோம். "கிறிஸ்தவத்தில ஒரு வழிபாடு இருக்கு. டிரினிட்டி பிரேயர். தன்னால் மாற்றமுடிந்தவற்றைச் செய்வதற்கான தன்னம்பிக்கையையும், மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வதற்கான பக்குவத்தையும் இறைவனிடம் கேளுங்கள் எனும் வழிபாடுதான் அது. அதுல முக்கியம், இரண்டையும் தெரிந்துகொள்கிற ஞானத்தைக் கொடுன்னு வேண்டுவாங்க. கல்யாணம் ஆனதும் புருஷனை மாத்திடுவேன், மாமியாரை மாத்திடுவேன்னு நம்பி நம்பியே கடைசி வரை தோற்றுப்போனவங்களும் இருக்காங்க. ஏழுவயசுக்குள்ள நமக்கு விதைக்கப்படுகிறதை நம்மால் உணரமுடியும். ஆனால், மாற்றிக்கொள்ள முடியாது. அதுதான் தனிமனிதக் குணமா உருவாகுது.

சைக்காலஜி
சைக்காலஜி

சிலருக்கு, எத்தனை பெரிய தப்பு செஞ்சாலும் குற்றவுணர்வே இருக்காது. சிலர், தெரியாம ரொம்பச் சின்னதப்பு செஞ்சுட்டாலும்கூட மனசு உடைஞ்சு போயிருவாங்க. அவங்களை நாம மாத்தவே முடியாம போயிடும். அவங்களாகத்தான் தனியா அமைதியான இடத்துல உட்கார்ந்து சோதித்துப் பார்த்துக்கணும். காலமாற்றம், எல்லோரும் எதையும் செய்யலாம்ங்கிற மாயை கொடுக்குது. அதை நம்பி எல்லாத்தையும் முயற்சிசெஞ்சு செஞ்சு தோற்றுப் போயிடுறாங்க. மான்கிட்டயும் சிங்கத்துக்கிட்டயும் தனித்தனி சிறப்புகள் இருக்குதானே. நாம ஒப்பிட்டுப்பார்த்துக் குழப்பிக்கக்கூடாது" என்றார்.

இந்த உளவியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவரை இனம்காண வழிகேட்டோம். "யார்கிட்டயும் அவ்வளவாக ஒட்டவே மாட்டாங்க. ரொம்பவும் நெருங்கிட்டா, நம்மள காயப்படுத்திடுவாங்களோன்னு ஒதுங்கியே இருப்பாங்க. ரொம்ப ஒட்டிப் பழகுறவங்களை விட்டுட்டு அடுத்த ஆளைப்பார்த்துப் போயிடுவாங்க" என்றார். சிக்கலுக்குத் தீர்வுதான் என்ன.. "கமிட்மென்ட்தான் சரியான தீர்வு. பிடிக்கலைன்னாகூட அவர்தான் அப்பா. மோசமானவன்னாலும்கூட அவன்தான் அண்ணன். உறவுகளில் எதுவும் மாறாது. அதனால சகிச்சிக்கிறாங்க, ஏத்துக்கிறாங்க. வாழ்க்கைத் துணை, நண்பர்கள் எல்லாமே நாமளா தேர்ந்தெடுக்கிறது. அதுல ஆப்ஷன்ஸ் இருப்பது பலநேரங்களில் பாதகமாகத்தான் முடியுது.

சித்ரா அர்விந்த்
சித்ரா அர்விந்த்

அவங்க அவங்களுக்குப் பிடிச்சதுலதான் நிறைவே இல்லாம தேடிக்கிட்டே இருப்பாங்க. நிறைவில்லாம இருப்பவங்க எதிர்மறை மனநிலையில் உள்ளவங்களா இருப்பாங்க. சின்ன வயதிலிருந்தே பிறர்மீது நம்பிக்கை வைக்கத் தெரியாமலே வளர்ந்திருப்பாங்க. இருப்பதை வச்சு, இல்லாததை நிரப்பிக்கக் கத்துக்கணும். நிறைகள்ல கவனம்செலுத்தி ஜெயிக்கணும். அதுதான் தன்னம்பிக்கை. பலவீனம் வேறு, சுயக்கட்டுப்பாடு வேறு. வாழ்க்கைத் துணையால பிரச்னை ஏற்பட்டு மறுமணம் செய்துகொள்பவனுக்கு பெஸ்ட் வாழ்க்கை அமையலாம். ஆனால், கிடைத்த மணவாழ்வுல திருப்தியில்லாம வேறு கல்யாணம் பண்றவங்க இன்னும் எத்தனை வாழ்க்கைத் துணை தேடினாலும் திருப்திகொள்ளவே மாட்டான். திருப்தியற்ற மனநிலையே ரொம்பப் பெரிய உளவியல் கோளாறு" என்கிறார்.

மேலும், ``பழைய காலத்துல முன்னோர்கள் ஒருவனுக்கு ஒருத்தின்னு வகுத்து வெச்சிருந்தாங்க. இது கமிட்மென்ட்டுக்கான ஓர் உத்தி. மக்களும், சமுதாயக் கட்டமைப்புக்காக அப்படியே வாழ்ந்தாங்க. இப்போ நாகரிக வளர்ச்சியில இது தப்பில்ல, இப்படிச் செய்யலாம்னு எல்லோரும் பேசிக்கிறங்க, நடந்துக்கிறாங்க. சமுதாயத்துல விரிசல் விழுந்ததால நம்பிக்கையிலயும் விரிசல் விழுந்திருச்சு. ஒண்ணுக்கொண்ணு பெட்டரா வேணும்ங்கிற அந்த மனநிலை, உறவுகள் விஷயங்கள்ல வெளிப்படையாத் தெரியுறதில்ல; கேட்ஜெட் விஷயங்களில் அப்பட்டமா தெரியுது, அவ்வளவுதான்!

கடையில் டிரெஸ் எடுத்துவிட்டு வெளியே வரும்போது, 'ச்ச, அந்த டிரெஸ் நல்லாத் தான் இருந்துச்சு. விட்டுட்டோமே' என ஒரு பொறி தட்டுமல்லவா. இதுபோன்ற ஒன்றிரண்டு சமயங்களில் அவ்வப்போது பொறி பட்டால் பரவாயில்லை, நெருப்புப்பொறியாய் சுடர்விட்டெரிந்தல் கஷ்டம், கவனம்.

சைக்காலஜி
சைக்காலஜி

பெற்றோரிடமிருந்தே பிரச்னை தொடங்குகிறது. சிறுவயசிலிருந்தே, பெற்றோர்கள் எதற்கும் 'நோ' சொல்லி வளர்த்திருக்க மாட்டாங்க. அப்படி வளர்ந்தவங்க, பெஸ்ட்தான் வேணும், அப்படித்தான் கிடைக்கணும்னு நினைப்பாங்க. எந்த நிராகரிப்பையும் இழப்பையும் எதிர்கொள்ள விரும்பமாட்டாங்க. இந்த உளவியல்தான், பொருள்கள்ல தொடங்கி மனிதர்கள்னு வரும்போது உறவுச்சிக்கலை உண்டாக்கிடுது. இப்படி குழந்தை வளர்ப்புமுறையில் நிகழும் தவறுதான் உளவியல் சிக்கலின் முதல் வித்து. குழந்தை ஒரு பொருளைக் கேட்டால் உடனே வாங்கித் தந்துவிடவும் கூடாது, மாட்டேன்ன்னு நேரடியாக மறுக்கவும்கூடாது. சமநிலைப்படுத்தணும். குழந்தை கேட்ட பொருளை உடனே வாங்கிக்கொடுத்துப் பழக்குவதில்தான் இந்த உளவியல் சிக்கலே தொடங்குது. அப்படிச் செய்யுறது தவறு. கொஞ்சநாளைக்கு ஆறப்போடணும். அந்தப் பொருள் ஏன் வேணும். அதோட மதிப்பு என்ன என்பது மாதிரி கேள்விகள் கேட்டு அந்தக் குழந்தை தெளிவடைஞ்சதும் வாங்கித்தரவேண்டும். அப்போதுதான் குழந்தையும் சிந்திக்கப் பழகும்" என்றார்.

இந்தக் குழப்ப மனநிலையிலிருந்து விடுபட வழி?

"யாரோ ஒருத்தரோட வாழ்க்கையை நகலெடுத்து வாழ முயல்வதுதான் இங்கு சிக்கலே. முதல்ல அவங்க அவங்களோட நிறைகுறைகளைத் தெரிஞ்சுக்கணும். சின்னவயதிலிருந்து எதுவெல்லாம் தனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது, எதுவெல்லாம் அதிருப்தி கொடுத்ததுன்னு யோசிக்கணும். சிலர் ஆசைப்படுவாங்க. ஆனா, அதுமாதிரி இருக்க முடியாது. அதுக்குத்தான், அவங்க யாருன்னு முதல்ல அவங்க புரிஞ்சிக்கணும்னு சொல்றேன். ஓர் ஆலமரம் பனைமரமா மாறணும்னு நினைச்சா அது முடியாது. அதுக்கான வேர் அங்க இல்லை. விதைகள் என்னவோ அதுதான் முளைக்கும்.

தனிநபர், குடும்பம், சமூகம், அரசு... பாலியல் குற்றங்கள் குறைக்கச் செய்யவேண்டியவை! -  உளவியல் பார்வை

தங்களுடைய லிமிட் தெரிஞ்சுக்காம, எப்படினாலும் மாறுவேன்னு நினைக்கிறாங்க. . . விருப்பம், ஆசை எல்லாம் இருந்தாலும் அதுக்கான திறன் இருக்கான்னு தெரிஞ்சிக்கணும். தன்னம்பிக்கையும் சாத்தியக்கூறுகளும் ஒரு புள்ளியில் இணைகிறபோதுதான் ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியும். மலையைக்கூட நகர்த்திடுவேன்னு சொல்றதில் தன்னம்பிக்கை இருக்கலாம், சாத்தியக்கூறு இல்லையே, அதுதான்! நம்மால் மாற்றக்கூடியது, மாற்றமுடியாதது என்ற இரண்டுக்குள்ளும் வேறுபாடு கண்டறிபவன்தான் ஞானம்பெற்றவன்" என்றார்.

கிடைத்ததை வைத்து பிடித்த வாழ்க்கை அமைத்துக்கொண்டால் உலகமும் உயிரும் வாழ்வும் இன்னும் அழகாகுமே!

அடுத்த கட்டுரைக்கு