Published:Updated:

``நான் சிகரெட்டை நிறுத்தியது... கௌதம் மேனனின் வெற்றி" இயக்குநர் வெற்றிமாறன்

நண்பர்கள் என்றால் புகைக்க வேண்டும், காதல் தோல்வி என்றால் தாடியும் சிகரெட்டும் கட்டாயம் என நம்பவைத்ததில் சினிமாவுக்குப் பெரும்பங்கு உண்டு. நான் சிகரெட் பிடிக்க ஆரம்பித்ததும் சினிமாவைப் பார்த்துதான்; விட்டதும் சினிமாவைப் பார்த்துதான்.

Director Vetrimaaran
Director Vetrimaaran

உலகம் முழுவதும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் (Chronic Obstructive Pulmonary Disease) பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் 38.4 கோடி. இந்த நோயின் பாதிப்பால் இறப்பவர்கள் மட்டும் 30 லட்சம். அதேபோல 33.4 கோடி மக்களுக்கு ஆஸ்துமா உள்ளது. 14 சதவிகித குழந்தைகளை நாள்பட்ட நுரையீரல் நோய்கள் தாக்குகின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். இதுமட்டுமன்றி நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

Lungs
Lungs
pixabay

மாசு, புகை இரண்டு நுரையீரலுக்குப் பகை. குறிப்பாக புகைப்பழக்கம் நுரையீரலைப் பாதிப்பதோடு புற்றுநோய்க்கும் வழிவகுத்துவிடும். நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்குப் புகைப்பழக்கம் முக்கிய காரணமாக விளங்குகிறது.

அதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 25-ம் தேதி உலக நுரையீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடத்துக்கான கருப்பொருளாக ‘ஆரோக்கியமான நுரையீரல் அனைவருக்கும்’ என்று உலக சுகாதார நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கத்தைக் கைவிடுவது என்பது சாதாரணமான செயல் அல்ல. புகைப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு மிகுந்த மனஉறுதி வேண்டும். அத்தகைய மனஉறுதியோடு சிகரெட்டுக்கு `பை...பை’சொல்லி விடைகொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். ‘ஆனந்த விகடன்’ வார இதழில் அவர் எழுதிய ‘மைல்ஸ் டு கோ’ தொடரில் புகைப்பழக்கத்திலிருந்து மீண்டதை விரிவாக எழுதியிருக்கிறார். இனி அவரின் வார்த்தைகளில்..

Director Vetrimaaran
Director Vetrimaaran

``என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்' என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும். 21 வயதுக்கு முன்னர் புகைக்க ஆரம்பித்தால், உடலுறுப்புகள் முறையாக வளரவேண்டிய அளவுக்கு வளராது. `நிக்கோடின், பிரவுன் சுகரைவிட அடிக்‌ஷனான விஷயம்' என்கிறார்கள். ஆனால், அது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கிறது. ஒரு நாளில் ஐந்து சிகரெட்டில் தொடங்கி, `பொல்லாதவன்' சமயத்தில் ஒரு நாளைக்கு 170 சிகரெட்களைப் புகைக்கும் நிலைக்குச் சென்றிருந்தேன்.

`பொல்லாதவன்' ரிலீஸுக்குப் பிறகு ஒருநாள் ஈ.சி.ஜி எடுத்துப் பார்த்தேன். நார்மலாக இல்லை எனத் தெரிந்ததும் `ஆஞ்சியோ செய்துபார்க்க வேண்டுமா?' என கார்டியாலஜிஸ்ட் முரளிதரனிடம் கேட்டேன். ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், `ஆஞ்சியோ ஆப்ஷனல். ஆனா, சிகரெட்டைக் கட்டாயம் விடணும்' என்றார். வீடு திரும்பும் வழியில் என்ன செய்யலாம் என்பதையும் சிகரெட் பிடித்தபடியே யோசித்துக்கொண்டிருந்தேன். புகைக்காத என் நண்பர்கள் என்னைவிட ஃபிட்டாக இருந்ததைக் கவனித்தேன். நானும் ஃபிட் ஆக வேண்டும் என நினைத்து, ஒரு மாதம் சிகரெட்டைத் தொடாமல் இருந்தேன். இனி நிச்சயம் சிகரெட்டைத் தொடமாட்டோம் என்ற கான்ஃபிடன்ஸ் கிடைத்தது.

Director Vetrimaaran
Director Vetrimaaran

ஒருநாள், ஸ்கிரிப்ட் வொர்க்கில் ஏதோ ஒரு நெருக்கடி வந்தது. அப்போது உதவியாளர் ரவியிடம் சிகரெட் வாங்கி வரச் சொன்னேன். நான் விட்டுவிட்டேன் எனத் தெரிந்ததால் தயங்கித் தயங்கித்தான் ஒரு பாக்கெட் வாங்கிவந்தார். அன்று 30 நாளைக்கும் சேர்த்துப் புகைத்துவிட்டேன். பாக்கெட்டில் இருந்த 10 சிகரெட்டுகளையும் வரிசையாகப் புகைத்தேன். என் உடலுக்கு அவ்வளவு நிக்கோடின் தேவைப்பட்டது. தயாரிப்பாளர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா அப்போது ஏழு வருடங்களாக புகைப்பழக்கத்தை விட்டிருந்தார். சிகரெட் பாக்ஸைப் பார்த்து `டேய்... தம்மாத்துண்டு இருந்துக்கிட்டு நீ என்னைக் கொல்லப் பாக்குறியா? இனிமே உன்னால என்னைக் கொல்ல முடியாது. வெளியே போ' என ஜன்னல் வழியே வீசி எறிந்ததாகச் சொன்னார். நானும் அதே வசனத்தைச் சொல்லி ஜன்னல் வழியே வேகமாக சிகரெட் பாக்ஸை விட்டெறிந்தேன். அந்த ஐடியா வொர்க்அவுட் ஆனது.

ஆனால், மூன்று நாள்கள் மட்டுமே விட முடிந்தது. நான்காவது நாள் காலை நான் சிகரெட்டை விட்டுவிட்டேன் என்பதையே மறந்து சிகரெட்டை கையில் எடுத்துவிட்டேன். சிகரெட்டை நிறுத்துவது என முடிவெடுத்துவிட்டால் அது நம் கண் பார்வையிலே இருக்கக் கூடாது. மற்ற எல்லா அடிக்‌ஷனைவிடவும் புகை தந்திரமானது. ஒருமுறை நிறுத்திவிட்டு மீண்டும் புகைக்கும்போது உடல் இன்னும் மோசமானது.

Lungs
Lungs
pixabay

டாக்டர் முரளிதரனைச் சந்தித்து மீண்டும் மீண்டும் புகைப்பதை அவரிடம் சொன்னேன். `இப்படியே தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தால் ஏழாவது தடவைக்குள் உங்களுக்கே தெரியாம நிரந்தரமா நிறுத்திடுவீங்க. எஃபர்ட் போடுறதை மட்டும் நிறுத்தாதீங்க' என்றார்.

எனக்கு முரளிதரனை அறிமுகம் செய்தது தனுஷின் அக்கா கணவர் ஆஞ்சநேயன் கார்த்திகேயன்தான். அவரும் ஒரு கார்டியாலஜிஸ்ட். `சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் 200 மி.லி குளிர்ந்த நீர் குடித்தால், அந்த எண்ணம் தள்ளிப்போகும்' என அவர் ஐடியா தந்தார். ஒவ்வொருவரும் தந்த ஐடியாக்களை எல்லாம் யோசித்துப் பார்த்ததில் ஒன்று புரிந்தது. புகைப்பதை விடுவது என்பது, நமது இலக்கு. அந்த இடத்துக்குச் சென்று சேர பாதைகள் வெவ்வேறு. நம்முடைய பாதையை நாமேதான் கண்டுபிடிக்க வேண்டும். அவரவர் சூழல், வாழ்க்கை முறை, வேலையைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் அது மாறும். இந்தப் புரிதல் வந்ததும் என்னால் புகையை விட்டுவிட முடியும் என்ற தைரியம் வந்தது. அப்போதுதான் (நவம்பர் 14, 2008) `வாரணம் ஆயிரம்' படம் வெளியானது. மனைவி ஆர்த்தியும் நானும் சென்றிருந்தோம். அந்தப் படமும் அதில் புகைப்பழக்கம் கையாளப்பட்ட விதமும் என்னை ஏதோ செய்தது. வெளியே வந்ததும் `இதை கடைசி 'தம்'மா வெச்சிக்கலாம்' என நினைத்தபடி புகைத்து முடித்தேன். அதன் பிறகு இன்றுவரை நான் புகைக்கவில்லை.

Dirctor Vetrimaaran
Dirctor Vetrimaaran

சிகரெட்டை, உலகம் முழுக்கவே வீரத்துடன் உருவகப்படுத்தி இருக்கிறார்கள். நண்பர்கள் என்றால் புகைக்க வேண்டும், காதல் தோல்வி என்றால் தாடியும் சிகரெட்டும் கட்டாயம் என நம்பவைத்ததில் சினிமாவுக்குப் பெரும்பங்கு உண்டு. நான் சிகரெட் பிடிக்க ஆரம்பித்ததும் சினிமாவைப் பார்த்துதான்; விட்டதும் சினிமாவைப் பார்த்துதான். 20 ஆண்டுகளாகப் புகைப்பிடித்த நான், புகையை நிறுத்துவதற்கு `வாரணம் ஆயிரம்' ஏதோ ஒரு வகையில் உந்துசக்தியாய் இருந்தது. ஒரு ஃபிலிம் மேக்கராக கெளதம் மேனன் அவர்களின் மிகப்பெரிய வெற்றியாக நான் இதைப் பார்க்கிறேன். என் படங்களில் ஹீரோக்கள் யாருமே புகைக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்கிறார் வெற்றிமாறன்.

நீங்களும் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டவரா? உங்கள் அனுபவத்தை #HowIQuitSmoking என்ற ஹேஷ்டேகில் பகிரலாமே!