Published:Updated:

எத்தைல் ஆல்கஹாலுக்கு பதில் மெத்தைல் ஆல்கஹால், தரமற்ற சானிடைசர்கள்... உஷார்!

சானிடைசர்
News
சானிடைசர்

சில தயாரிப்பு நிறுவனங்கள் எத்தைல் ஆல்கஹாலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மெத்தைல் ஆல்கஹாலைப் பயன்படுத்துகின்றன. இது ஆபத்தான ஒன்று.

கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராட பிரத்யேகமான மருந்தோ, தடுப்பு மருந்தோ இன்னும் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால், கொரோனா வராமல் பாதுகாக்க கை கழுவுவது, மாஸ்க் அணிவது, இடைவெளியைப் பின்பற்றுவது என இவையெல்லாம்தான் உயிர்காக்கும் மந்திரமாக உள்ளன. எங்கு சென்றாலும், செல்லும் முன்பும் சென்ற பின்பும் ஹேண்ட் சானிடைசர் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்துவது வழக்கமாகிவிட்டது. அதனால், சானிடைசர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

கொரோனா தொற்று ஆரம்பித்த நாள் முதலாக, பல புது சானிடைசர் நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. இந்நிலையில், மக்கள் பயன்படுத்தும் சானிடைசர்களின் தரம் பற்றி ஆராய்ந்தது, கன்ஸ்யூமர் கைடன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (CGSI). அதில், பயன்பாட்டில் உள்ள 50% சானிடைசர்கள் மட்டுமே வரையறுக்கப்பட்ட தரத்துடன் உள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த மாதம் CGSI, 120 நிறுவனங்கள் தயாரித்த சானிடைசர்களை ஆராய்ந்தது. அவற்றில் 50% சானிடைசர்களில் கலப்படம் உள்ளதாகவும், 4% சானிடைசர்களில் மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்த டாக்ஸிக் மெத்தைல் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் முடிவுகள் கூறுகின்றன. டாக்ஸிக் மெத்தைல் ஆல்கஹாலை நீண்ட நாள்கள் உபயோகிக்கும்போது கண் நரம்பு பாதிப்பு, கண் பார்வை பறிபோதல் எனப் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

சானிடைசர்
சானிடைசர்

இது குறித்து இணையவெளி கருத்தரங்கில் பேசிய CGSI செயலாளர், மருத்துவர் எம்.எஸ்.காமத், ``கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கை கழுவுதல், சுத்திகரித்தல் வழக்கம் அதிகரித்துள்ளது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கும் நோக்குடன் நேர்மையற்ற முறையில் பல கை சுத்திகரிப்பான் நிறுவனங்கள் வியாபாரத்தில் இறங்கியுள்ளன. சோப்பும் தண்ணீரும் இல்லாத பட்சத்தில் குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் உள்ள கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்தலாம். தயாரிப்பு நிறுவனங்கள் எத்தைல் ஆல்கஹாலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மெத்தைல் ஆல்கஹாலைப் பயன்படுத்துகின்றன. இது ஆபத்தான ஒன்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடை செய்யப்பட்ட மெத்தனாலை உபயோகித்து தயாரிக்கப்பட்ட கை சுத்திகரிப்பான்கள் தரமற்றவை. இயற்கை எத்தனாலைப் பயன்படுத்த ஆல்கஹால் பெர்மிட் அவசியம் என்பதால், இந்த ஏமாற்று நிறுவனங்கள் அதைப் பயன்படுத்துவது இல்லை. விலை குறைவான இவை, ஆல்கஹால் சேர்க்கப்படாமல் தரமற்றவையாக உள்ளன. தரமற்ற கை சுத்திகரிப்பான் தயாரிப்பு நிறுவனங்கள், பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களை உபயோகித்தும் மக்களை ஏமாற்றி விற்பனை செய்கின்றன. மக்களும் அவற்றை வாங்குகின்றனர்" என்று கூறியுள்ளார்.

விழிப்புணர்வு அவசியம் மக்களே!