Published:Updated:

"டென்ஷனானா வீட்டை கிளீன் பண்ண ஆரம்பிச்சுடுவேன்" - நடிகர் விதார்த் #LetsRelieveStress

விதார்த்
விதார்த்

'மின்னலே' தொடங்கி, 'காற்றின் மொழி' வரை நிறைய படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகர் விதார்த், மன அழுத்தம், டென்ஷன் தந்த தருணங்களை கடந்தவிதம் பற்றிக் கூறுகிறார்.

'மைனா' இவருக்கு புகழ் சேர்த்த படம். வெற்றி, தோல்வி பற்றி நினைக்காமல் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துபவர். பந்தா இல்லாமல் பக்கத்துவீட்டுக்காரரைப்போல தோழமையுடன் மிக இயல்பாகப் பழகக்கூடியவர். மன அழுத்தம், டென்ஷன் தந்த தருணங்களை எப்படிக் கடப்பீர்கள் எனக் கேட்டேன்.

குழந்தையுடன் விதார்த்
குழந்தையுடன் விதார்த்

`` 'ஆண்டவன் அங்கயும் இங்கயும் வாங்கின கடனை அடைக்கிறதுக்காக நம்மைப் பூமிக்கு அனுப்பலை. நாம நம்ம கடமையைச் செய்துட்டு சந்தோஷமா வாழ்றதுக்காகத்தான் அனுப்பியிருக்கிறார்'னு அடிக்கடி என் நண்பர்கள்ட்ட சொல்வேன். நான் பொதுவா எதுக்கும் டென்ஷனாக மாட்டேன். நமக்கு வேலை கிடைச்சா செய்யப்போறோம், கிடைக்கலைனா அடுத்து என்னனு பார்க்கப் போறோம், அவ்வளவுதான். இருக்கிறவரைக்கும் ஜாலியா இருக்கணும். நம்மால முடிஞ்சா மத்தவங்களுக்குஉதவி பண்ணணும். யாரோட வம்பு தும்புக்கும் போகாம இருந்துட்டு போக வேண்டியதுதான். குறிப்பா எனக்கு புறம் பேசுறது, தேவையில்லாம கமென்ட் அடிக்கிறதெல்லாம் பிடிக்காது.

எனக்கும் பிரஷர் தர்றமாதிரி ஒரு பெரிய பிரச்னை வந்துச்சு. என்கிட்ட ஒரு பழக்கம் உண்டு. அதாவது, என்கிட்ட பழகுனவங்களுக்கு ஒரு கஷ்டம்னா என்னால முடிஞ்ச உதவியைச் செய்வேன். இப்படி இருக்கிற நேரத்துல ஒரு நண்பருக்குப் பணம் தேவைப்பட்டுச்சு. என் சக்திக்கு மீறி கடன் வாங்கி அவருக்கு உதவி பண்ணினேன். கடைசியில, அவரால அந்தத் தொகையைக் கொடுக்கமுடியலை. அப்புறம் நான்தான் அந்தக் கடனை அடைச்சிக்கிட்டிருக்கேன். என் வாழ்நாள் முழுக்க சம்பாதிச்சு கட்டவேண்டிய அளவுக்கு அந்த தொகை அதிகம். அவரை என்ன பண்ணமுடியும், சொல்லுங்க. அப்பிடியே விட்டுட்டேன். ஆனாலும் இந்த நேரத்துல அவரோட பேரைக்கூட நான் சொல்ல விரும்பலை. அதையும் ஒரு புத்தி கொள்முதலாதான் நான் எடுத்துக்கிட்டேன்.

விதார்த்
விதார்த்

எங்க வீட்டுலகூட 'இதெல்லாம் உனக்குத் தேவையா?'னு சொன்னாங்க. அதுதான் எனக்கு கொஞ்சம் டென்ஷனாயிடுச்சு. ஆங்கிலத்துல ஒரு பொன்மொழி உண்டு. `இஃப் யூ வான்ட் டூ சே நோ, டோன்ட் சே யெஸ்' (If you want to say no, dont say yes) னு சொல்வாங்க. அதனால நிதானத்துக்கு வந்திருக்கேன். இப்பவும் யாராவது தேவைனு கேட்டாங்கன்னா உடனே பணம் கொடுத்துடுவேன். நான் மத்தவங்களுக்கு கொடுத்த பணம் வரலைன்னாலும் பரவாயில்ல, என்னால் என்ன முடியுமோ அதைக் கொடுக்கிறேன். கலைஞனா இருக்கிறதால உணர்ச்சிவசப்பட்டு இப்படிப்பட்ட விஷயங்களைப் பண்ணாம இருக்கமுடியல.

இந்தமாதிரி விஷயங்களால டென்ஷன், பிரஷர் வர்றது சகஜம்தான். அப்படி வந்தா வீட்டைச் சுத்தம் பண்றது, காரைத் துடைச்சு சுத்தம் பண்றதுனு கிளீனிங் வேலையில இறங்கிடுவேன். இந்தமாதிரி மனஅழுத்தம் உள்ள நேரங்கள்ல சுத்தம் பண்ணினா வழக்கத்தைவிட நல்லாவே சுத்தம் செய்யமுடியும். தேவையில்லாத பிளாஸ்டிக் சாமான்கள், துணிகள், பேப்பர்களை எடுத்துப்போட்டு சுத்தம் செய்ய ஆரம்பிச்சிடுவேன். அதையெல்லாம் சுத்தம் பண்ணும்போதே நம்ம மனசும் சுத்தமாகி ரிலாக்ஸாயிடும். யாருக்கு ஸ்ட்ரெஸ் வந்தாலும் மனசுக்குப்பிடிச்ச வேலையை செஞ்சா மனசு சந்தோஷமாயிடும்.

விதார்த்?
விதார்த்?

நான் பிறந்தது திருநெல்வேலி மாவட்டம், களக்காடு. `பராசக்தி, ஓர் இரவு'னு ரெண்டு படங்கள்ல என்னோட தாத்தா நடிச்சிருக்கார். நான் படிச்சதெல்லாம் தேவகோட்டையில. அப்பா அங்க கேட்டரிங் பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தார்; ஐ.டி.ஐ படிச்சேன். அப்போ, 'எனக்கு என்ன பிடிக்கும்'னு யோசிச்சுப் பார்த்தேன், பயணங்கள், எனக்கு ரொம்பப் பிடிக்கும்கிறதால, டிரைவர் வேலையைத் தேர்வு செஞ்சேன். சுற்றுலாப் பயணிகளை அழைச்சிக்கிட்டு இந்தியாவுல உள்ள எல்லா பெரிய நகரங்களுக்கும் கார்லயே நான் போயிருக்கேன். பயணங்கள்ல நாம சந்திக்கிற இடங்கள், சந்திக்கிற மனிதர்கள்னு வாழ்க்கை ஒருவிதமான நிதானத்துக்கு வந்துச்சு.

முதல்முதலா சினிமாவுல அறிமுகமானது 'மின்னலே' படத்துலதான். அதுக்கப்புறம் கொக்கி, லீ, திருவண்ணாமலை, மைனானு நிறைய படங்கள்ல நடிச்சேன். ஆனா, மைனா படம்தான் என்னை எல்லார்கிட்டயும் கொண்டுபோய் சேர்த்துச்சு. தொடர்ந்து நிறைய படங்கள் பண்ணிட்டேன். ஆனா, பெருசா எதுவும் போகலை. சமீபத்துல 'காற்றின் மொழி' படம் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துச்சு. போனவாரம்கூட டி.வியில அந்தப் படத்தை போட்டப்போ நல்ல ரெஸ்பான்ஸ். நிறைய போன்கால். அடுத்து வரப்போற படம் நல்ல பிரேக்கா இருக்கும். கிட்டத்தட்ட 17 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் நடிக்கிற படங்களுக்கு கதை செலக்ட் பண்ணும்போது ரொம்ப கவனமா இருப்பேன். ஆனா, அது படமா வரும்போது வேற மாதிரி இருக்கு. புது மாதிரியான பிரச்னைகளும் சூழ்நிலையும் வருது. அந்த மாதிரி நேரங்கள்ல ரொம்ப கஷ்டமா இருக்கும்.

விதார்த்
விதார்த்

அவுட்டோர் ஷூட்டிங்ல இருந்தேன்னா, நடக்க ஆரம்பிச்சிடுவேன். நடக்கிறதுன்னா மூணு கிலோமீட்டர், நாலு கிலோமீட்டர் இல்ல, 40, 50 கிலோ மீட்டர்கூட சேர்ந்தாப்ல நடக்க ஆரம்பிச்சிடுவேன். சென்னையில இருந்தேன்னா திருப்பதிக்கு நடக்க ஆரம்பிச்சிடுவேன். இங்க இருந்து திருப்பதிக்கு நடந்தேபோய் சாமி கும்பிட்டு வந்துடுவேன். இது மாதிரி ரெண்டு மூணு தடவை போயிருக்கேன். நடக்குறப்போ நம்ம உடல்ல இருக்கிற வியர்வையோட நெகட்டிவ் எனர்ஜியும் சேர்ந்து பஸ்ட் ஆயிடும்'' என்கிறார் நடிகர் விதார்த்.

அடுத்த கட்டுரைக்கு