Published:Updated:

`ஜெயலலிதா'வுக்காக ஹார்மோன் மூலம் எடை அதிகரித்த கங்கனா..! பின் விளைவுகள் என்ன?! #ExpertOpinion

"மாத்திரைகள் மூலம் உடல் எடை அதிகரிப்பது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயம் கிடையாது."

நடிகர் சிவாஜி கணேசன் சினிமா வாய்ப்புக்காக முயன்றபோது, அவர் ஒல்லியாக இருந்ததால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டனவாம். அதனால் அவருடைய எடையை அதிகரிக்கும்படி நண்பர்கள் அறிவுறுத்தினார்களாம். கூடவே அதற்கான சீக்ரெட்டையும் சொல்லிக்கொடுத்தார்களாம். பழைய சோறுதான் அந்த சீக்ரெட். தினமும் பழைய சோற்றை சாப்பிட்டு உடல் எடை அதிகரித்தாராம் நடிகர் திலகம். அதற்குப் பிறகுதான் அவருக்கு 'பராசக்தி' படத்தில் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அன்றைய காலம் முதல் இன்று வரை திரைப்படங்களுக்காக உடல் எடை அதிகரிப்பது மற்றும் குறைப்பதை ஆர்ட்டிஸ்ட்கள் செய்துவருகிறார்கள்.

Weight gain
Weight gain
Pixabay

தற்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகி வருகிறது. ஜெயலலிதா வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பதற்கு பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில், கங்கனா ரனாவத் அதற்குத் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகி பேசுபொருளாகியிருக்கின்றன. மிகவும் ஒல்லியான உடல்வாகைக் கொண்டிருக்கும் கங்கனா, ஜெயலலிதா வேடத்தில் எப்படிப் பொருந்தினார் என்ற குழப்பமும் தலைதூக்கியது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் பேட்டியளித்துள்ள நடிகை கங்கனா ரனாவத், "ஜெயலலிதா திரைப்படத்தில் நடித்த காலத்தில், மணல் கடிகாரம் போன்ற உடலமைப்பைக் கொண்டிருந்தார். அரசியலுக்கு வந்து, ஒரு விபத்தில் சிக்கிய பிறகு எடுத்த ஸ்டீராய்டு மருந்துகளால்தான் அவருக்கு உடல் எடை அதிகரித்தது. அவர் எந்தெந்தக் காலங்களில் எந்தெந்த உடல்வாகில் இருந்தார் என்பதை நான் திரையில் பிரதிபலிக்க வேண்டும்.

கங்கனா
கங்கனா
Vikatan

வயிறு மற்றும் தொடைப் பகுதியில் சதை போட வேண்டும் என்பதால், ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். குறைவான அளவில்தான் (Mild Dose) எடுத்துக்கொண்டேன். அதனுடன், எடையை அதிகரிக்கும் உணவுகளையும் எடுத்துக்கொண்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடல் எடை அதிகரிப்பது உடல்நலத்துக்கு எதிரானது என்ற நிலையில், அதை மாத்திரைகளின் மூலம் செயற்கையாக அதிகரித்திருப்பது இன்னும் ஆபத்தான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நாளமில்லா சுரப்பிகள் மருத்துவர் ஸ்ருதியிடம் பேசினோம்.

கலோரி அதிகமிருக்கும் உணவுகளைச் சாப்பிட்டு, உடலுழைப்புத் தரும் விஷயங்களைச் சற்று குறைத்துக்கொண்டால் உடல் எடை தானாக அதிகரிக்கும்.
டாக்டர் ஸ்ருதி
`` `குயின்' வெப் சீரிஸ்ல ஜெயலலிதா இல்லை... ஆனா ஜெயலலிதா மாதிரி!" - இயக்குநர் பிரசாத் முருகேசன்

"பொதுவாக மருத்துவர்கள் உடல் எடை அதிகரிப்பதற்கென்று மாத்திரைகளைப் பரிந்துரைப்பது கிடையாது. காரணம், மாத்திரைகள் மூலம் உடல் எடை அதிகரிப்பது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயம் கிடையாது. மேலும், அதனால் வரும் பக்கவிளைவுகளும் ஏராளமாக இருக்கும். மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளில் எடை அதிகரிப்பதற்கான மாத்திரைகள் இல்லை. அதனால் கங்கனா ரனாவத் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருக்கலாம்.

மருத்துவ ரீதியாக உடலில் ஸ்டீராய்டு ஹார்மோன் குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே, அதை அதிகரிப்பதற்காக அந்த ஹார்மோன் மாத்திரை வழங்கப்படும். இதுதவிர, குறிப்பிட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சாப்பிட வைப்பதற்காக சில மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும். அது பசியுணர்வை அதிகரிப்பதற்கான மாத்திரைகள் மட்டும்தான்.

Dr.Sruthi
Dr.Sruthi

ஸ்டீராய்டு ஹார்மோன்களை மாத்திரைகளாகச் சாப்பிடும்போது, அதைக் குறைந்த நாள்களுக்குச் சாப்பிட்டால்கூட ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புப்புரை), முறையற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும், உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய், கல்லீரல் செயல்பாட்டில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

எனவே, உடல் எடையை அதிகரிப்பதற்கு இயற்கையான முறையே சரியானது. 'தங்கல்' படத்துக்காக அமீர்கான், 'சைஸ் ஜீரோ' படத்துக்காக அனுஷ்கா போன்ற நடிகர்கள் எல்லாம் இயற்கையாகத்தான் உடல் எடையை அதிகரித்தார்கள்.

Harmone Pill
Harmone Pill
Pixabay
ஹார்மோன் பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு, சினைப்பை கட்டி.... பலன் தரும் எளிய யோகாசனங்கள்!

இப்போது பலருக்கும் பிரச்னையாக இருப்பது, உடல் எடை அதிகமாக இருப்பதுதான். அதற்கு நாம் சொல்லும் காரணம், அதிக உணவைச் சாப்பிட்டுவிட்டு உடலுழைப்பு இல்லாததால்தான் எடை அதிகரிக்கிறது என்கிறோம். அதையே எடை அதிகரிக்க விரும்புபவர்களும் பின்பற்றலாம். கலோரி அதிகமிருக்கும் உணவுகளைச் சாப்பிட்டு, உடலுழைப்புத் தரும் விஷயங்களைச் சற்று குறைத்துக்கொண்டால் உடல் எடை தானாக அதிகரிக்கும். அதைவிடுத்து செயற்கையான விஷயங்களை நாடுவது உடல்நலனுக்கு கேடாகத்தான் முடியும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு